Published : 05 Nov 2016 11:26 AM
Last Updated : 05 Nov 2016 11:26 AM

உலக மசாலா: முதலைக்குப் பல் துலக்கும் முரபயாஷி!

ஜப்பானைச் சேர்ந்த 65 வயது நோபுமிட்சு முரபயாஷி, முதலையைச் செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். 6 அடி 8 அங்குலம் நீளமும் 46 கிலோ எடையும் கொண்ட கைமன் முதலை, ஒரு நாய்க்குட்டியைப் போல அவரிடம் பழகுகிறது. அவர் மடியில் உறங்குகிறது. அவருடன் நடைப் பயிற்சி மேற்கொள்கிறது. அவரது படுக்கையில் உறங்குகிறது. “34 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விலங்குகள் விழாவில் முதலையைப் பார்த்தேன். மிகவும் குட்டி முதலையாக என்னைக் கவர்ந்தது. உடனே முதலையை வீட்டில் வளர்ப்பதற்கு அரசாங்கத்திடம் சிறப்பு அனுமதி பெற்றேன். இவ்வளவு பெரிய முதலையாக வளரும் என்றோ, 34 வருடங்கள் வாழும் என்றோ நான் நினைக்கவில்லை. என்னுடைய சைகைகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு செயல்பட ஆரம்பித்தது முதலை. இறைச்சியைச் சாப்பிட்டால், துகள்கள் பற்களில் ஒட்டியிருக்கும். அவற்றை ப்ளோவர் பறவைகள் சுத்தம் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

வீட்டில் உணவு கொடுத்தவுடன், பிரஷை வைத்து நானே முதலைக்குப் பல் துலக்கி விடுவேன். வீட்டில் இருக்கும்போது சுதந்திரமாக விட்டுவிடுவேன். சமையலறை, படுக்கையறை, தோட்டம் என்று சுற்றிச் சுற்றி வரும். வெளியில் செல்லும்போது மட்டும் ஒரு கயிற்றை முதலையின் உடலில் கட்டி, அழைத்துச் செல்வேன். பொதுமக்களுக்குப் பயம் வந்துவிடக்கூடாது என்பதற்காக. துணிக்கடை, உணவகம், காய்கறி மார்க்கெட், நீச்சல் குளம் என்று நான் போகும் இடம் எல்லாம் அழைத்துச் செல்வேன். ஆனால் என் மனைவிக்கு மட்டும் முதலை மேல் ஆர்வம் இல்லை. முதலையுடன் நான் மட்டுமே அதிக நேரம் செலவிடுகிறேன். தொலைக்காட்சிகளில் முதலை பற்றிய செய்திகள் வந்துவிட்டதால் பிரபலமாகிவிட்டது.” என்கிறார் முரபயாஷி.

அட, முதலைக்குப் பல் துலக்கும் முரபயாஷி!

சீனாவில் வாகன ஓட்டிகள் முழு பீம் ஹெட்லைட்களைப் போட்டுக்கொண்டு, வாகனம் ஓட்டக்கூடாது என்ற சட்டம் இருக்கிறது. இப்படி அதிக அளவு வெளிச்சம் பீய்ச்சும்போது எதிரில் வருபவர்களின் பார்வை பாதிக்கப்பட்டு, விபத்து ஏற்படுகிறது. 3 ஆயிரம் ரூபாய் அபராதம், தொடர்ந்து இந்தக் குற்றத்தை நிகழ்த்துபவர்களுக்கு உரிமம் ரத்து போன்ற தண்டனைகள் எல்லாம் இருக்கின்றன. ஆனாலும் முழு பீம் ஹெட்லைட்களைப் போட்டுக்கொண்டு வாகனங்களை ஓட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவர்களுக்காகவே புதிய தண்டனையைத் தற்போது அமல்படுத்தி வருகிறார்கள். குற்றம் செய்யும் வாகன ஓட்டிகளை ஒரு நாற்காலியில் அமர வைக்கிறார்கள். வாகனத்தில் இருந்து முழு பீம் ஹெட்லைட் வெளிச்சத்தை அவர்கள் மீது ஒரு நிமிடம் வரை பாய்ச்சுகிறார்கள். ஆரம்பத்தில் இந்தத் தண்டனையைப் பலரும் எதிர்த்தனர். தற்போது பெரும்பாலான மக்கள் ஆதரிக்கின்றனர். ஷென்ஜென் நகரில் மட்டுமின்றி, சீனா முழுவதும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்கிறார்கள். ஒருமுறை இந்தத் தண்டனை பெற்றவர்கள், மீண்டும் இதே குற்றத்தைச் செய்வதில்லை. சட்டத்தில் இந்தத் தண்டனை குறிப்பிடப்படவில்லை என்றும் இது மனித உரிமை மீறல் என்றும் சிலர் எதிர்க்கிறார்கள்.

முள்ளை முள்ளால் எடுக்கும் தண்டனை…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x