Published : 21 May 2015 10:49 AM
Last Updated : 21 May 2015 10:49 AM

உலக மசாலா: மீன் பிடிக்க உதவும் டால்பின்கள்

பிரேஸிலின் லகுனா நகரில் வசிக்கும் மீனவர்களுக்கும் டால்பின் களுக்கும் இடையே ஓர் அற்புதமான உறவு நூற்றாண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. தினமும் அதிகாலை வலைகளுடன் மீனவர்கள் வருகிறார்கள். டால்பின்களுக்காகக் காத்திருக்கிறார்கள். மனிதர்களின் தலைகளைக் கண்டதும் உற்சாகத்தோடு நீந்தி வருகின்றன டால்பின்கள்.

இப்படியும் அப்படியும் வேகமாக நீந்தி, மீன்களை எல்லாம் மீனவர்கள் பக்கம் திருப்பிவிடுகின்றன. உடனே மீனவர்கள் வலைகளை வீசுகிறார்கள். மிகப் பெரிய மீன்கள் வலைகளில் வந்து விழுகின்றன. வலைகளில் இருந்து தப்பும் மீன்களை டால்பின்கள் உணவாக்கிக்கொள்கின்றன. டால்பின்கள் பொதுவாக மனிதர்களிடம் பழகக்கூடியவை. இந்தப் பகுதியில் 20 பாட்டில் மூக்கு டால்பின்கள் வசிக்கின்றன.

200 மீனவர்களுக்கும் இந்த டால்பின்கள்தான் மீன் பிடிக்க உதவுகின்றன! டால்பின்களுக்கு ஸ்கூபி, கரோபா என்று பெயர்களைக் கூட வைத்திருக்கிறார்கள் மீனவர்கள். தண்ணீருக்குள் இறங்கி, டால்பின்கள் வரவில்லை என்றால் பெயர் சொல்லி அழைக்கிறார்கள். உடனே டால்பின்கள் மகிழ்ச்சியாக நீந்தி வருகின்றன. டால்பின்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்று வழிவழியாக மீனவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.

அதேபோல மனிதர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்று டால்பின்கள் தங்கள் சந்ததியினருக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றன. மனிதர்களும் டால்பின்களும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொண்டு, நூறு ஆண்டுகளைக் கடந்தும் தங்கள் உறவைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ரொம்ப ஆச்சரியமா இருக்கு!

மாஸ்கோவில் வசிக்கிறார் எலினா சுலேமன்யன். இவருடைய செல்லப் பிராணி போர்ட்டோஸ் என்ற பூனை. மற்றப் பூனைகளை விட போர்ட்டோஸ் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறது. பூனையின் தலையில் இருக்கும் கறுப்பு வண்ணமும் மூக்குக்குக் கீழே இருக்கும் கறுப்பு வண்ணமும் அச்சு அசலாக ஹிட்லர் போலவே தோற்றத்தைத் தருகிறது. ஒரு வயதான போர்ட்டோஸ் குணத்திலும் ஹிட்லரை ஒத்திருப்பதாகச் சொல்கிறார் எலினா.

அதாவது எப்பொழுதும் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்கிறது. தான் விரும்பிய உணவைத் தரும் வரை வேறு உணவுகளைத் தொடுவதில்லை. எளிதில் பிறருடன் பழகுவ தில்லை. எப்பொழுதும் கம்பீரமான தோற்றத்துடன், கோபமாகவே இருப்பதுபோலக் காட்சியளிக்கிறது.

எலினா வீட்டுக்கு வருபவர்களும், போர்ட்டஸை வெளியில் அழைத்துச் செல்லும்போதும் ஹிட்லர் போலவே இருக்கிறதே என்று சொல்லாதவர்களே கிடையாது. உலகமே வெறுக்கக்கூடிய ஒரு மனிதரின் சாயலை ஒத்திருந்தாலும் எங்களுக்கு போர்ட்டஸ் விருப்பமான செல்லப் பிராணிதான் என்கிறார் எலினா.

அட… ஹிட்லரை நினைச்சிட்டுப் பார்த்தா அப்படித்தான் தெரியுது…

சிட்னியில் உள்ள ப்ளூ மலைப் பகுதியில் இயற்கையான குகை ஒன்று இருக்கிறது. இந்தக் குகையில் இருந்து பார்த்தால் அத்தனை அழகாக இருக்கும். செடிகள், மரங்கள், கங்காருகள் என்று நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இந்தக் குகையை லியோனெல் பக்கெட் என்பவரின் கைவண்ணத்தில் தங்கும் விடுதியாக மாற்றியிருக்கிறார்கள். குகைச் சுவர்கள் அப்படியே பாறைகளாக இருக்கின்றன.

ஆனால் அதற்குள் சகல வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. சமையலறை, டிவி, நவீன குளியலறை, கழிப்பறை, படுக்கையறை, கணப்பு அடுப்பு எல்லாம் இருக்கின்றன. பாதுகாப்புக்குக் கண்ணாடியால் கதவுகளும் ஜன்னல்களும் போடப்பட்டுள்ளன. விடுதி ஊழியர்களைத் தவிர, மனிதர்கள் நடமாட்டம் சுத்தமாகக் கிடையாது. இரவில் காட்டின் திகிலை அனுபவிக்கலாம். ஓர் இரவு தங்குவதற்கு சுமார் 60 ஆயிரம் ரூபாய் கட்டணம்.

இயற்கையாக எதுவும் இருக்க அனுமதிக்க மாட்டேங்கிறானே இந்த மனிதன்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x