Published : 19 Jul 2015 12:02 PM
Last Updated : 19 Jul 2015 12:02 PM

உலக மசாலா: மீசை வைத்த குழந்தையப்பா...

சீனாவில் வசிக்கிறார் 27 வயது சென் யினிக்ஸி. கடந்த வாரம் நடைபெற்ற ஹைனன் சர்வதேச வாகனங்கள் தொழிற்சாலை கண்காட்சியில் இவருடைய சூப்பர் கார் வைக்கப்பட்டது. காரைப் பார்த்து ஆச்சரியப்படாதவர்களோ, பாராட்டாதவர்களோ இல்லை. தனி ஒரு நபராக, தன் வீட்டிலேயே சென் இந்த காரை உருவாக்கியிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. சென்னுக்குச் சிறிய வயதில் இருந்தே மோட்டார் வாகனங்கள் மீது ஆர்வம் இருந்தது. கார் வடிவமைப்பு பற்றி இரண்டு ஆண்டுகள் படித்தார். வீட்டிலேயே சூப்பர் காரை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டார். அதுவும் 30 லட்சம் ரூபாய்க்குள் என்பது எல்லோரையும் பிரமிப்பில் ஆழ்த்திவிட்டது. மணிக்கு 60 மைல் வேகத்தில் செல்லும் இந்த சூப்பர் சிவப்பு காருக்கும் சென்னுக்கும் மோட்டார் வாகன உலகம் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்திருக்கிறது.

வெல்டன் சென்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிச்சர்ட் மகாரே, மார்ஷியல் கலைகளைக் கற்றுக்கொள்வதற்காக ஹாங் காங் வந்தார். மார்ஷியல் கலைகளில் தேர்ச்சி பெற்று, சண்டை நடிகராக வேண்டும் என்பதுதான் ரிச்சர்ட் லட்சியம். இரண்டு மாதங்களில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பெண் குழந்தை வேடம். சிறிய கவுன், தலையில் இரண்டு ரிப்பன் கட்டிக்கொண்டு நடிக்க வேண்டும். நடிக்க ஒப்புக்கொண்ட ரிச்சர்ட், தன்னுடைய தாடியையும் மீசையையும் எடுக்க சம்மதிக்கவில்லை. இந்த வேடமும் புதுமையாக இருக்கிறது என்று எண்ணி விட்டுவிட்டனர். அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், ரிச்சர்ட்டுக்கு மட்டும்தான் ஏராளமான பாராட்டுகள் கிடைத்தன. தொடர்ந்து அதுபோன்ற பாத்திரங்களில் நடிக்க அழைப்பு வந்தன. ஜப்பானியர்கள் இதுபோன்ற கதாபாத்திரத்தை விரும்புவார்கள் என்று சொன்னதன் பேரில், ஜப்பான் சென்றார். ஜப்பானிய குழந்தைகளும் பெண்களும் ரிச்சர்ட் விசிறியாக மாறிவிட்டனர். இன்று ஜப்பானில் புகழ்பெற்றவராக மாறிவிட்டார் ரிச்சர்ட். குட்டை ஆடையும் தலையில் ரிப்பனுமாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விழாக்கள், இசை ஆல்பங்கள், நடன நிகழ்ச்சிகள் என்று பரபரப்பாக இருக்கிறார்.

மீசை வைத்த குழந்தையப்பா…

பிரிட்டனின் அதி புத்திசாலி நாய் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது கூப்பர். இதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 35 ஆயிரம் ரூபாய்க்கு கிறிஸ்டி ஃபாரஸ்டர் வாங்கினார். வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே கூப்பர் புத்திசாலியானது என்பதை அறிந்துகொண்டார் கிறிஸ்டி. கொஞ்சம் கொஞ்சமாக கூப்பருக்குப் பாடம் எடுக்க ஆரம்பித்தார். ஒவ்வொன்றையும் மிகவும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டது கூப்பர். வடிவங்களைச் சரியாகக் கண்டுபிடிக் கிறது. பெரியதிலிருந்து சிறியது வரை உள்ள பொருட்களை வரிசைப்படுத்துகிறது. ’’ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்கள் கூப்பருக்காகச் செலவு செய்து, ஒரு புது விஷயத்தைக் கற்றுக் கொடுக்கிறேன். அதை 2, 3 மணி நேரங்களில் கற்றுக்கொண்டு, தானே செய்து காண்பித்து விடுகிறது கூப்பர். ஒரு குழந்தையைப் போலவே ஒவ்வொரு விஷயத்தையும் ஆர்வத்துடனும் ஜாலியாகவும் கற்றுக்கொள்ளும் கூப்பரைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. இதுவரை அதைச் செய், இதைச் செய் என்று நான் கட்டாயப்படுத்தியதே இல்லை. கூப்பரே ஏதாவது கற்றுத்தரும்படி என்னைக் கூப்பிடுகிறது’’ என்கிறார் கிறிஸ்டி.

கூப்பர் ஒரு சூப்பர் நாய்…

நியுஸிலாந்தில் உள்ள ஒஹுரா நகரில் 120 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். ஒருகாலத்தில் தொழில்நகரமாக இருந்த இந்த ஒஹுரா, இன்று அழிந்து போகக்கூடிய ஒரு நகரமாக மாறிவிட்டது. இங்கே மின்சார வசதி இல்லை என்பதால், இணையம் போன்ற வெளியுலகத் தொடர்புக்கும் வழியில்லை. பெரும்பாலானவர்களுக்கு வேலையும் இல்லை. அதனால் பிழைப்புக்கும் வழியில்லை. அரசாங்கமும் இந்த நகரை கைவிட்டுவிட்டது. பிரபல புகைப்படக்காரர் டோனி கார்டர் கடந்த ஓராண்டில் மட்டும், 30 தடவை ஒஹுராவுக்குச் சென்று, புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். ‘‘சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களை ஆவணப்படுத்துவதே என்னுடைய நோக்கம். இந்த மக்கள் மிகவும் நேர்மையானவர்கள். வெகு விரைவில் இந்த நகர் மறைந்து போக இருக்கிறது என்பது வேதனையானது’’ என்கிறார் டோனி கார்டர்.

ம்… வாழ்ந்து கெட்ட நகரம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x