Published : 22 Jul 2016 10:29 AM
Last Updated : 22 Jul 2016 10:29 AM

உலக மசாலா: மிஸ் தன்னம்பிக்கை!

நைஜீரியாவில் வசிக்கிறார் 19 வயது ரஹ்மா ஹருனா. பிறக்கும்போதே அரிய குறைபாட்டால் கால்கள் இல்லை. தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை ரஹ்மா பிளாஸ்டிக் வாளிக்குள்ளேயே கழித்து வருகிறார். கால்கள் இன்றி பிறந்தாலும் ரஹ்மா ஆரோக்கியமாகவே இருந்தார். 6 மாதங்களில் ஒரு காய்ச்சல் வந்தது. வளர்ச்சியை அப்படியே தடுத்துவிட்டது. கைகளின் இயக்கமும் முடங்கிப்போனது. “வளர்ச்சியும் இல்லை. கால்களும் இல்லை. இன்று வரை வயிற்று வலி இருந்துகொண்டே இருக் கிறது. ஒவ்வொரு விஷயத் துக்கும் அடுத்தவர்களின் உதவி ரஹ்மாவுக்குத் தேவைப்படுகிறது.

ஆனால் அவள் எதைப் பற்றியும் கவலைப்பட்டு நாங்கள் பார்த்ததில்லை. உலகின் மகிழ்ச்சியான பெண்ணாக இருக்கிறாள்’’ என்கிறார் அவரது அம்மா. “என் 10 வயது தம்பி முதல் வீட்டில் உள்ள அனைவரும் எனக்கு உதவி செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இடத்துக்கும் அழைத்துச் செல்கிறார்கள். உறவினர்களையும் நண்பர்களையும் சந்திப்பதில் எனக்கு அளவற்ற சந்தோஷம். 15 ஆண்டுகள் மருத்துவத்துக்காக எங்கள் சக்திக்கு மீறி செலவு செய்துவிட்டோம். காரணமும் தெரியவில்லை, சிகிச்சையும் கிடைக்கவில்லை.

சமீபத்தில் எனக்கு நன்கொடையாக ஒரு சக்கர நாற்காலி கிடைத்தது. என்னைத் தூக்கிச் செல்பவர்களுக்கு இது உதவியாக இருக்கிறது. நான் ஒரு மளிகைக் கடை ஆரம்பிக்க வேண்டும். என்னிடம் எல்லோரும் பொருட்கள் வாங்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம். இத்தனை அன்பானவர்கள் இருக்கும்போது என்னால் எதையும் செய்ய முடியும்’’ என்கிறார் ரஹ்மா ஹருனா.

மிஸ் தன்னம்பிக்கை!

லண்டனில் வசிக்கும் லியாம் பியர்ஸ், கடந்த 10 ஆண்டுகளாக தக்காளியால் தயாரிக்கப்பட்ட உணவுகளையே சாப்பிட்டு வந்திருக்கிறார். 2 வயதில் லியாம் வாயில் ஒரு பட்டாணி சிக்கிக்கொண்டது. அன்று முதல் அவர் எந்தக் காய்கறிகளையும் சாப்பிடவில்லை. ஒரு வாரத்துக்கு 3 தக்காளி ஜூஸ் பாட்டில்களைக் காலி செய்வார். பள்ளியில் சக மாணவர்கள் கிண்டல் செய்வார்கள் என்பதால், தனியாக மதிய உணவைச் சாப்பிடுவார். தினமும் இரவில் தக்காளியால் செய்யப்பட்ட கால் கிலோ நொறுக்குத் தீனியைச் சாப்பிடுவார். சூப், ரொட்டி என்று எந்த உணவாக இருந்தாலும் தக்காளியில் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தக்காளி மட்டுமே சாப்பிட்டு வளர்ந்தாலும் லியாமுக்கு வேறு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. லியாமை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். உணவுகளைப் பார்த்துப் பயம் ஏற்படும் ஒரு குறைபாட்டால் லியாம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வந்தது. மருத்துவர் சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறை காய்கறிகளைச் சாப்பிட்டிருக்கிறார் லியாம். “என் வாழ்நாளில் 500 லிட்டர் தக்காளி ஜூஸ் குடித்திருப்பேன் என்கிறார் மருத்துவர். நான் காய்கறிகளைச் சாப்பிடுவதை என் நண்பர்களிடம் தெரிவித்தேன். ஒருவரும் நம்பவில்லை. கேரட், உருளைக் கிழங்கு என்று ஒவ்வொன்றையும் கொடுத்து என்னைப் பரிசோதித்தனர். வேகமாக முன்னேறி வருகிறேன் என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார் லியாம்.

தக்காளியால் வளர்ந்த சிறுவன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x