Published : 18 Apr 2017 10:03 AM
Last Updated : 18 Apr 2017 10:03 AM

உலக மசாலா: மிஸ்டர் தன்னம்பிக்கை!

அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் வசித்து வந்த 22 வயது கெவின் மோர்டன் படித்துக்கொண்டே, ஓர் உணவகத்தில் வேலையும் செய்து வந்தார். 2007-ம் ஆண்டு இரவில் வேலை முடித்துக் கிளம்பும்போது அடையாளம் தெரியாத ஒருவரால் சுடப்பட்டார். ஆனாலும் தானே மருத்துவமனைக்கு காரை ஓட்டிச் சென்றார். வழியில் நினைவிழந்த நிலையில் வேறு சிலரால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வயிற்றில் பாய்ந்த குண்டு குடல், கணையம் போன்றவற்றை மோசமாகப் பாதித்துவிட்டது. நுரையீரலும் வேலை செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டது. கெவினின் நிலையைக் கண்ட மருத்துவர்கள், பிழைப்பதற்கு 10% வாய்ப்பு மட்டுமே இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் மருத்துவர் டார்டி ஷேத் நம்பிக்கையுடன் மருத்துவம் பார்த்தார். பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். வாரக் கணக்கில் கோமாவில் இருந்தவருக்கு ஓராண்டு வரை திரவ உணவுதான் செலுத்தப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக உடலில் முன்னேற்றம் ஏற்பட்டது. டார்டி ஷேத் முயற்சியில் தனக்கு இரண்டாவது முறையாக வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று அறிந்துகொண்டார் கெவின். உடனே தானும் ஒரு மருத்துவராகி, உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். இரண்டு ஆண்டுகளில் பூரணமாகக் குணமடைந்தார். “என் தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக்கொண்ட மருத்துவருக்கு நான் என்ன செய்துவிட முடியும்? 2009-ம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்தேன். என் திருமணத்துக்கு ஷேத் தன் கணவருடன் வந்தார். விழாவில் எல்லோருக்கும் அவரை அறிமுகம் செய்து, கவுரவப்படுத்தினேன். நான் அனுமதிக்கப்பட்டிருந்த செயிண்ட் ஜான் மருத்துவமனைக்கு பயிற்சி மருத்துவராக சென்றேன். ஒவ்வொரு நாளும் நான் இருந்த படுக்கையைப் பார்வையிடுவேன். மருத்துவமனை ஊழியர்கள், பிழைப்பதே கடினம் என்று கருதப்பட்ட ஒரு நோயாளி, அதே மருத்துவமனையில் மருத்துவராக வலம் வருகிறார் என்று எல்லோரிடமும் மகிழ்ச்சியாகக் கூறுவார்கள். என் மருத்துவப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ஷேத், என்னை மகனாக நினைத்துப் பெருமைகொள்வதாகக் கூறினார். நான் டெட்ராய்டில் வளர்ந்தபோது ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க மருத்துவரைக்கூடப் பார்த்ததில்லை. எங்களுக்கும் பெரிய கனவு சாத்தியமாகும் என்றெல்லாம் நினைத்ததில்லை. ஆனால் இன்று சாத்தியமாகியிருக்கிறது” என்கிறார் கெவின்.

மிஸ்டர் தன்னம்பிக்கை!

மெக்ஸிகோவில் நாய்களுக்கான பிரத்யேகமான ஐஸ்க்ரீம் விற்பனை செய்யப்படுகிறது. டான் பேலட்டோ ஐஸ்க்ரீம் நிறுவனத்தின் உரிமையாளர் மவுரிசியோ மொன்டாயோ, “மனிதர்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடும்போது தங்களின் செல்லப் பிராணிகளுக்கும் கொடுத்துவிடுகிறார்கள். இதனால் நாய்களின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்படுகிறது. அதனால் நாய்களுக்காக ஐஸ்க்ரீம் உருவாக்க நினைத்தேன். கால்நடை மருத்துவர்களைச் சந்தித்து, எந்தெந்த உணவுப் பொருட்கள் நாய்களுக்கு கெடுதல் என்பதைக் கேட்டு அறிந்துகொண்டேன். அவற்றை எல்லாம் தவிர்த்து, ஐஸ்க்ரீம்களை உருவாக்கினேன். எங்கள் ஐஸ்க்ரீமில் லாக்டோஸ் இல்லை, சர்க்கரை இல்லை. தேனையும் பழச்சாறுகளையும் இனிப்புக்குச் சேர்த்துகொண்டேன். செல்லப்பிராணிகள் மீது உண்மையான அக்கறையுள்ளவர்கள் தாங்கள் சாப்பிடுவதைக் கொடுக்க மாட்டார்கள். நாய்களுக்கென்று தயாரிக்கப்படும் உணவுகளைத்தான் கொடுக்க வேண்டும். ” என்கிறார்.

எந்த நாயாவது ஐஸ்க்ரீம் வேண்டுமென்று கேட்டதா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x