Published : 21 Apr 2017 10:09 AM
Last Updated : 21 Apr 2017 10:09 AM

உலக மசாலா: மிதந்து வந்த 150 அடி பனிப்பாறை

கனடாவின் கடற்கரை நகரமான பெர்ரிலாண்ட், திடீரென சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய இடமாக மாறிவிட்டது! 150 அடி உயரமுள்ள மிகப் பெரிய பனிப்பாறை ஒன்று இந்தப் பகுதிக்கு மிதந்து வந்திருக்கிறது. புவி வெப்பமடைவதால் ஒவ்வோர் ஆண்டும் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி, உடைந்து, இடம்பெயர்ந்து வருகின்றன. இந்தப் பனிப்பாறைகளில் 90% தண்ணீருக்குக் கீழேதான் இருக்கிறது. 1912-ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் மோதிய பனிப்பாறையை விட இது 50 அடி உயரம் அதிகம்.

திடீரென தோன்றிய இந்தப் பனிப்பாறையைப் பார்ப்பதற்கும் புகைப்படங்கள் எடுப்பதற்கும் ஆயிரக்கணக்கானவர்கள் குழுமிவிட்டனர். 2016-ம் ஆண்டில் 687 பனிப்பாறைகள் நகர்ந்து வந்துள்ளன. இந்த ஆண்டு இதுவரை 616 பனிப்பாறைகள் நகர்ந்து வந்துவிட்டன. இவற்றில் இதுவே மிகப் பெரிய பனிப்பாறை. இந்தப் பனிப்பாறையின் வருகையால் சுற்றுலாத் துறை மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.

இயற்கை விடுக்கும் எச்சரிக்கை இது.



இன்று உலகம் முழுவதும் காபி விரும்பிக் குடிக்கப்படுகிறது. அவரவர் விருப்பப்படி டிகாஷனை அதிகமாகவோ குறைத்தோ பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் வண்ணமே இல்லாத காபியை ஸ்லோவாகியாவைச் சேர்ந்த சகோதரர்கள் டேவிட், ஆடம் இருவரும் உருவாக்கி இருக்கிறார்கள். பார்ப்பதற்கு தண்ணீர் போன்று தோற்றமளித்தாலும் காபியின் சுவையும் நறுமணமும் இதில் இருக்கிறது. “சாதாரண காபியைக் குடித்தால் பற்களின் நிறம் மங்கிவிடும்.

ஆனால் எங்கள் CLL CFF காபியைக் குடித்தால் பற்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை. உயர்தர அரேபிகா காபிக் கொட்டைகளில் தூய்மையான தண்ணீர் சேர்த்து உருவாக்கி இருக்கிறோம். இதில் ரசாயனங்கள், செயற்கை நறுமணங்கள், இனிப்புப் பொருட்கள் ஆகியவற்றைச் சேர்க்கவில்லை. 200 மி.லி. காபியின் விலை 500 ரூபாய். இந்தச் சுவைக்கு தாராளமாகக் கொடுக்கலாம். தற்போது ஸ்லோவாகியா, இங்கிலாந்தில் எங்கள் காபி விற்பனை செய்யப்படுகிறது” என்கிறார் ஆடம்.

தண்ணீர் மாதிரி காபி என்று சொல்வது உண்மையாகிவிட்டதே!



அமெரிக்காவின் டென்னிசியில் வசிக்கிறார் 78 வயது ஃப்ரெட் கில்லாண்ட். 51 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி ஜானிஸுக்கு, என் உயிர் உள்ளவரை உன்னுடன் இருப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்தார். 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜானிஸ் மறைந்தார். ஆனாலும் தான் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றி வருகிறார். “ஜானிஸைப் பார்த்தவுடனே எனக்குக் காதல் வந்துவிட்டது.

மிகவும் அழகாக இருப்பார். என் விருப்பத்தை ஏற்று திருமணம் செய்துகொண்டார். அப்போதுதான் சத்தியம் செய்து கொடுத்தேன். நான் இருக்கும் வரை சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தினமும் கல்லறைக்குச் செல்கிறேன். சிறிதுநேரம் கல்லறைக்கு அருகில் அமர்ந்து, நாங்கள் வாழ்ந்த மகிழ்ச்சியான தருணங்களை நினைத்துக்கொள்வேன்” என்கிறார் ஃப்ரெட் கில்லாண்ட்.

சத்தியத்தைக் காப்பாற்றும் கணவர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x