Published : 14 Oct 2015 11:04 AM
Last Updated : 14 Oct 2015 11:04 AM

உலக மசாலா: மிகப் புதுமையான ஆசிரியர்!

நெதர்லாந்தில் வசிக்கிறார் டெபி ஹீர்கென்ஸ். பள்ளி ஆசிரியராக இருக்கும் டெபி, அறிவியலை மிகப் புதுமையாகவும் எளிதாகவும் மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார். மனித உடல் பற்றிய பாடத்தில் உள்ளுறுப்புகள், எலும்புகள், தசைகள் போன்ற வற்றை கரும்பலகையில் வரைந்து காண்பிப்பதற்குப் பதில், அவற்றை ஆடையில் வரைந்து, அணிந்துகொண்டு பாடம் நடத்து கிறார். ‘

‘எனக்கு கற்பிப்பது மிகவும் பிடித்தமான விஷயம். அறிவியல் அதைவிட பிடிக்கும். மாணவர்களுக்கு இன்னும் சுவாரசியமாக, எளிமையாக எப்படி மனித உடலைப் புரிய வைக்க லாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். மனித உடலுக்குள் இருக்கும் விஷயங்களை ஆடையாக அணிந்து நின்றால் குழந்தைகளுக்கு எளிதில் புரியும். இணையத்தில் தேடி ஆடைகளை வாங்கினேன்.

பள்ளி இயக்குநரிடம் அனுமதியும் பெற்றேன். ஆடைகளை அணிந்து மேஜை மீது நின்றபடி பெருங்குடல் இங்கே, இரைப்பை இங்கே என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் காட்டியபோது அவ்வளவு ஆர்வமாகப் பாடங்களைக் கவனித்தார்கள். ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டார்கள். நான் நினைத்ததை விட வகுப்பு அத்தனை உற்சாகமாகவும் உபயோகமாகவும் அமைந்ததில் எனக்கு நிறைவாக இருக்கிறது’’ என்கிறார் டெபி ஹீர்கென்ஸ். ‘‘எங்கள் பள்ளி ஆசிரியர்களிலேயே டெபி மிகவும் வித்தியாசமானவர். குழந்தைகளையும் கற்பித்தலையும் மிகவும் நேசிக்கக்கூடியவர். கற்பித்தலில் புதிய உத்திகளைக் கையாளக்கூடியவர்’’ என்று புகழ்கிறார்கள் பள்ளியின் நிர்வாகிகள்.

மிகப் புதுமையான ஆசிரியர்!

ஜெர்மனியைச் சேர்ந்த மிர்கோ ஹான்பென் ‘ஹேண்ட் ஸ்கேட்டிங்’ என்ற புதிய விளையாட்டைக் கண்டுபிடித்திருக்கிறார். உலகிலேயே மிகச் சிறந்த, கைகளால் ஸ்கேட்டிங் செய்யக்கூடிய ஒரே ஒருவர் மிர்கோதான்! ‘‘எனக்கு ஸ்கேட்டிங்கும் தலைகீழாக கைகளால் நிற்பதும் மிகவும் பிடிக்கும். ஒருநாள் இரவு உணவின் போதுதான் இரண்டையும் சேர்த்து புதிய விளையாட்டை உருவாக்கினால் என்ன என்று தோன்றியது.

உடனே படுக்கை அறையில் செய்தும் பார்த்தேன். ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது. வீட்டுக்குள்ளேயே பலநாட்கள் பயிற்சி செய்தேன். ஒருநாள் வெற்றி கிடைத்தது. பிறகு வெளியே பயிற்சியை மேற்கொண்டேன். ஹேண்ட் ஸ்கேட்டிங் செய்வதற்கு உடல் கட்டுக்கோப்பாக இருப்பது அவசியம். தினமும் 4 மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் என்னுடைய விளையாட்டைச் செய்து காட்டும் அளவுக்கு முன்னேறிவிட்டேன்’’ என்கிறார் 20 வயது மிர்கோ.

திகிலா இருக்கே இந்த விளையாட்டு…

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் வசிக்கிறார் 59 வயது கு மெய்யிங். சீனாவிலேயே மிக நீளமான ஜடை கொண்ட கு மெய்யிங், புதிய கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். 24 வயதில் இருந்து முடி வெட்டாமல் வளர்த்து வரும் கு மெய்யிங் ஜடையின் நீளம் இன்று 8 அடி 3 அங்குலம் (2.5 மீட்டர்). உலகிலேயே மிக நீளமான ஜடை என்று ஏற்கெனவே கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பவரும் சீனப் பெண்தான். அவரது ஜடையின் நீளம் 18 அடி 5 அங்குலம் (5.6 மீட்டர்). ‘‘நீளமான முடி வளர்ப்பது ஒன்றும் எளிதான விஷயமில்லை. ஜடையை அவிழ்த்து, சுத்தம் செய்து, மீண்டும் பின்னுவதற்கு எனக்கு ஒருவாரம் தேவைப்படுகிறது. அன்றாட வேலைகளுக்கு இடையூறாக இருக்கிறது. ஆனாலும் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வளர்த்து வருகிறேன்’’ என்கிறார் கு மெய்யிங்.

ம்... சுகமான சுமை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x