Published : 13 Oct 2016 10:18 AM
Last Updated : 13 Oct 2016 10:18 AM

உலக மசாலா: மாமனிதர் ராமோன் அர்சுண்டியா!

மெக்ஸிகோவில் வசிக்கும் ராமோன் அர்சுண்டியா, கடந்த 40 ஆண்டுகளாக இகுவானாக்களை (பச்சோந்தியைப் போன்ற ஒரு விலங்கு) பாதுகாத்து வருகிறார். அழிந்து வரக்கூடிய ஆபத்தான விலங்காக இருந்த இகுவானா, இன்று சரணாலயம் அளவுக்குப் பெருகி இருக்கிறது. அதற்குக் காரணம் அர்சுண்டியாதான். “நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மெக்ஸிகோவில் இகுவானா அழிந்து போனதாக நம்பப்பட்டது. ஒருநாள் நானும் என் தந்தையும் 2 இகுவானாக்கள் சூரிய ஒளியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்தோம். இரண்டையும் வளர்க்க ஆரம்பித்தோம். இன்று எங்களிடம் 640 இகுவானாக்கள் இருக்கின்றன. மற்ற விலங்குகளைப் போல இவற்றை செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்கு நாங்கள் கொடுப்பதில்லை. இவற்றுக்கு ஒருநாளைக்கு 182 கிலோ உணவுகள் தேவைப்படுகின்றன. இலைகள், பழங்கள், காய்களை விரும்பிச் சாப்பிடுகின்றன. இதுவரை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.

பிராணிகள் மீது அன்பும் ஆர்வமும் இருப்பவர்களிடம் சென்று, உணவுகளைப் பெற்று வருகிறோம். இகுவானாக்களைச் சுத்தம் செய்வது, உணவளிப்பது என்று நிறைய வேலைகள் இருக்கும். எனக்கு உதவி செய்பவர்களுக்கும் நான் சம்பளம் கொடுக்க வேண்டும். அழிந்து வரக்கூடிய ஒரு உயிரினத்தைக் காப்பாற்றி இருக்கிறேன். அரசாங்கம் கண்டுகொள்ளாவிட்டாலும் விலங்குகள் நல அமைப்புகள் ஆதரவு அளித்து வருகின்றன. முறையாக எங்கள் இகுவானா சரணாலயம் பதிவு செய்யப்படவில்லை என்று அரசாங்கம் மூடச் சொன்னபோது, விலங்குகள் நல அமைப்புகள்தான் போராடி, தடுத்தன. தற்போது பதிவு செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளோம். இகுவானாக்களைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளைக் கட்டணமின்றி அனுமதிக்கிறோம். அவர்கள் உணவாகவோ, பணமாகவோ கொடுப்பதை ஏற்றுக்கொள்கிறோம். உலகிலேயே இகுவானாக்களுக்கான ஒரே சரணாலயம் இதுவாகத்தான் இருக்கும்” என்கிறார் ராமோன் அர்சுண்டியா.

ஆபத்தான நிலையில் இருந்த ஓர் உயிரினத்தைக் காப்பாற்றிய மாமனிதர் ராமோன் அர்சுண்டியா!

அமெரிக்காவில் வசிக்கும் ஆம்பர் வில்லி, சிசி, செவ்பகா என்று இரு நாய்களை வளர்த்து வருகிறார். இரண்டும் வேறு வேறு இனங்கள். சிசி மிகவும் சிறிய நாய். செவ்பகா மிகப் பெரிய கறுப்பு நாய். இரண்டும் ஆண்டுக்கணக்கில் நட்புடன் பழகி வருகின்றன. திடீரென்று நாய்களுக்குத் தொற்று ஏற்பட, விலங்குகள் பாதுகாப்பு மையத்துக்கு அழைத்துச் சென்றார் ஆம்பர் வில்லி. அங்கே சில நாட்கள் அவை தங்கி, சிகிச்சை எடுத்துக்கொண்டன. செவ்பகாவும் சிசியும் எங்கும் ஒன்றாகச் சென்றன. ஒன்றாகச் சாப்பிட்டன. ஒன்றாக விளையாடின. ஒன்றாக நடைபயின்றன.

எப்போது தூங்கினாலும் சிசி, செவ்பகா மீது படுத்து உறங்கும். இதைக் கண்டு ஆச்சரியப்படாதவர்களே இல்லை. சிசி செய்யும் எந்தக் குறும்புக்கும் செவ்பகா கோபப்படுவதில்லை. விலங்குகள் நல அமைப்பு தன்னார்வலர்கள் சிசியையும் செவ்பகாவையும் விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர். இதுபோன்ற நண்பர்களைப் பார்த்ததில்லை என்கின்றனர். நான்கு நாட்களுக்குப் பிறகு சிசியும் செவ்பகாவும் வீடு திரும்பின.

அழகான நட்பு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x