Published : 25 Sep 2016 01:24 PM
Last Updated : 25 Sep 2016 01:24 PM

உலக மசாலா: மாணவிக்கு சிறுநீரகம் கொடுத்த ஆசிரியர்

ஜப்பானில் கடந்த 13 ஆண்டுகளில் அதிக அளவில் சாலை விபத்துகள் மூலம் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 4,43,691 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 50,101 ஓட்டுநர்கள், வாகனம் ஓட்டும்போது ஸ்மார்ட்போனை பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்மார்ட்போன் பயன்பாடு சமூகத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்சினையைச் சரி செய்யும் விதமாக ஜப்பானிய நிறுவனங்களான டொயோடாவும் கொமேடாவும் ‘டிரைவிங் பாரிஸ்டா’ என்ற அப்ளிகேஷனை உருவாக்கி யிருக்கின்றன. இதை ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். வாகனத்தில் போனை கவிழ்த்து வைத்துவிட வேண்டும். எவ்வளவு தூரம் பயணம் செய்கிறோம் என்பதை ஜிபிஸ் கணக்கிட்டுக்கொள்ளும். 100 கி.மீ. தூரம் போனைப் பார்க்காமல் ஓட்டிவிட்டால் சூடான காபியோ, குளிர்ந்த காபியோ, கொமெடா காபி கடைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு எத்தனை 100 கி.மீ. தூரத்தை ஸ்மார்ட்போன் பார்க்காமல் கடந்தாலும் காபி கூப்பன் கிடைக்கும். “சாலைப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் இது. எங்களுடன் வாகன ஓட்டிகளும் ஒத்துழைத்தால் விரைவில் சாலை விபத்துகளோ, சாலை விபத்துகளின் மூலம் உயிரிழப்போ ஏற்படாத நிலை உருவாகிவிடும்” என்கிறார் டொயோடோவின் நிர்வாக அதிகாரி ஷுய்சி முரகாமி. ‘டிரைவிங் பாரிஸ்டா’ அப்ளிகேஷன் தற்போது ஜப்பானில் மட்டுமே வேலை செய்கிறது.

அட! காபியும் குடிக்கலாம்; விபத்தையும் தடுக்கலாம்!





அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் வசிக்கும் டினா கெர்ரியின் 4 வயது மகள் லைலாவின் சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது. சிறுநீரகம் கேட்டு, அமெரிக்கா முழுவதும் விண்ணப்பித்திருந்தார்கள். ஆனால் லைலாவுக்குப் பொருத்தமான சிறுநீரகம் கிடைக்கவில்லை. “எங்கள் அன்பு மகள் சிறுநீரகம் கிடைக்காததால் கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள். ஒரு தாயாக நான் மிகவும் துன்பத்தில் இருந்தேன். அப்போது லைலாவின் பள்ளியில் இருந்து, என்னை அழைத்தார்கள். ஒவ்வொரு முறை ஆசிரியர்கள் மாறும்போதோ, புதிய ஆசிரியர்கள் வரும்போதோ என்னைச் சந்திப்பார்கள். லைலாவின் நிலையை எடுத்துச் சொல்வேன். அப்படித்தான் இந்த முறையும் என்னை அழைத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். மூன்று ஆசிரியர்கள் என் எதிரில் அமர்ந்திருந்தனர். நான் வருத்தத்தோடு லைலாவின் நிலையைச் சொன்னேன். பெத் பாட்டிஸ்டா என்ற ஆசிரியர் ஒரு கவரைக் கொடுத்தார். அதில் லைலாவுக்குச் சிறுநீரகம் கொடையாகத் தருவதாக எழுதி இருந்தார்! என்னை அறியாமல் கத்திவிட்டேன். பெத் பாட்டிஸ்டாவைக் கட்டிப் பிடித்து அழுதேன். நன்றி சொன்னேன். ஆசிரியர்களை ஹீரோக்களாகச் சொல்வார்கள். நான் அதற்கும் மேலான அற்புதமாக நினைக்கிறேன். என் குழந்தையின் உயிரை மீட்டுக் கொடுத்த பெத் பாட்டிஸ்டாவுக்கு என்றென்றும் நன்றிக்கு உரியவர்களாக இருப்போம்” என்கிறார் டினா கேர்ரி.

மாணவிக்கு சிறுநீரகம் கொடுத்த ஆசிரியருக்கு பூங்கொத்து!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x