Published : 18 Dec 2015 10:50 AM
Last Updated : 18 Dec 2015 10:50 AM

உலக மசாலா: மாடலான துறவிப்பெண்!

தாய்லாந்தைச் சேர்ந்த 22 வயது மிமி டாவோ ஆசியாவின் மிக முக்கியமான மாடல்களில் ஒருவர். சிறிய வயதிலேயே துறவறத்தின் மீது ஆர்வம் வந்துவிட்டது. 12 வயதில் மடத்தில் உள்ள பள்ளியில் சேர்ந்துவிட்டார். 6 ஆண்டுகள் துறவி வாழ்க்கை. அந்தக் காலகட்டத்தில் அவர் திருநங்கையாக மாற்றம் பெற்றார். மாடலிங் மீது அவரது ஆர்வம் திரும்பியது.

‘‘நான் ஒரு பெண்ணாக உணர ஆரம்பித்தேன். பெண் போலவே நடந்துகொண்டேன். ஆனாலும் 200 கடினமான கட்டளைகளைப் பின்பற்றி துறவியாக மாறினேன். அந்த நேரத்தில் என் அம்மா கடனால் மிகவும் கஷ்டப்பட்டார். அந்தக் காரணத்தைச் சொல்லி, மடத்திலிருந்து வெளியேறினேன். பல்வேறு இடங்களில் நடனம் ஆடினேன். யுய் பெட்கன்ஹா என்ற மாடல்தான் என்னுடைய ரோல்மாடல். அவரை 12 முறை சந்தித்த பிறகு, எனக்குப் பயிற்சியளிக்க ஒப்புக்கொண்டார்.

3 மாதங்களில் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தேன். தாய்லாந்து மாடலிங் துறை என்னை வரவேற்கவில்லை. நிறைய நிராகரிப்புகள். ஆனாலும் நான் நம்பிக்கை இழக்கவில்லை. சிங்கப்பூர் சென்றேன். சிறிய ஷோக்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். பிறகு மாடலிங் வாய்ப்புகளும் வந்தன. மீண்டும் தாய்லாந்து திரும்பியபோது என் பெயர் மாடலிங் துறையில் பரவியிருந்தது. முதல் மாடலிங் வாய்ப்பே மிகப் பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது. இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கிறேன். என் அம்மாவின் கடன்களையும் அடைத்துவிட்டேன். எதிர்காலம் பற்றி யாருக்குத் தெரியும்? மீண்டும் நான் துறவறம் மேற்கொண்டாலும் அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ’’ என்கிறார் டாவோ.

வாழ்த்துகள் டாவோ!

பிரான்ஸில் வசிக்கிறார் 47 வயது ஜீன் மாரி ரக்ஹோல். கடந்த 30 ஆண்டுகளாக வீடு இல்லாமல், தெருக்களில் வாழ்க்கை நடத்தி வருகிறார். சிறிய வயதிலேயே ஜீனின் அம்மா தனியாகச் சென்றுவிட்டார். குடிகாரரான அப்பாவுடன் தெருக்களில் வசித்து வந்தார் ஜீன். 20 வயது வரை பாரிஸ் தெருக்களில்தான் வாழ்க்கை. அதற்குப் பிறகு உணவு விடுதியில் வேலைக்குச் சேர்ந்தார். முன்னாள் அமைச்சராக இருந்த ஜீன் லூயி டிபேர் இவரது நீண்ட கால நண்பர்.

அவரது உதவியால் எழுதவும் எடிட்டிங் செய்யவும் கற்றுக்கொண்டார் ஜீன். பூங்கா பெஞ்சுகளில் அமர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய வாழ்க்கையை எழுத ஆரம்பித்தார். 176 பக்கங்களில் ‘தெருக்களில் வாழ்க்கை’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிக்கொண்டு வந்தார் ஜீன் லூயி. தன்னுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது என்று விளம்பரம் செய்தார். இந்த சீசனில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் ஒன்றாக இருக்கிறது ஜீனின் புத்தகம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்தித்தாள்கள் என்று உலகம் முழுவதும் ஜீன் பிரபலமாகிவிட்டார்.

‘‘மிக நவீன ஸ்மார்ட்போன் மட்டுமே என்னிடம் இருக்கும் விலையுயர்ந்த பொருள். இன்றும் தெருக்களில்தான் வசிக்கிறேன். 10 மாதங்களுக்குப் பிறகு ராயல்டி கிடைக்கும். சொந்த வீடு வாங்கிவிட்டால், கம்ப்யூட்டரில் என் எழுத்துப் பணிகளைத் தொடர்வேன். இந்தப் புத்தகம் மூலம் ஏராளமானவர்களின் அன்பு கிடைத்திருக்கிறது. தெரு வாழ்க்கையால் என்னைவிட்டுச் சென்ற உறவுகள் அனைத்தும் என்னைத் தேடி வருகின்றன. புத்தகம் வெளிவந்த பிறகு நடக்கும் விஷயங்களை வைத்து இன்னொரு புத்தகம் எழுதி விடலாம் போலிருக்கிறது’’ என்கிறார் ஜீன்.

இனி எல்லாமே உங்களுக்கு வெற்றிதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x