Published : 08 Dec 2015 11:01 AM
Last Updated : 08 Dec 2015 11:01 AM

உலக மசாலா: மறு உருவாக்கம்!

அமெரிக்காவில் ஜர்னலிசம் படித்து வருகிறார் லிடியா. அவரது தாய் ரீடா, 33 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படங்களை லிடியா பார்த்தார். லண்டனிலும் இத்தாலியிலும் புகழ்பெற்ற இடங்களில் நின்றுகொண்டிருந்தார் ரீடா. உடனே லிடியாவுக்கு யோசனை வந்தது. 33 வருடங்களுக்கு முன்பு அம்மா சென்ற இடங்களுக்குச் சென்று, படங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். தோழிகளுடன் கிளம்பினார்.

‘‘என் அம்மா எந்தெந்த இடங்களில் எப்படி நின்று படங்கள் எடுத்துக்கொண்டாரோ, அதை அப்படியே மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் என் நோக்கம். இத்தாலியில் உள்ள ஹெர்குலிஸ் சிலை, வாட்டிகன் சிட்டி தேவாலயம், நேஷனல் லைப்ரரி, கொலோசியம், பீசா கோபுரம், லண்டனில் உள்ள டவர் பாலம், பார்லிமெண்ட் கட்டிடம் போன்றவை பெரிதாக மாற்றத்தைச் சந்திக்கவே இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது’’ என்கிறார் லிடியா.

மறு உருவாக்கம் என்பதே சுவாரசியமாக இருக்கிறது!

பெய்ஜிங்கில் ஓவியராக இருக்கிறார் பிரதர் நட். அத்துடன் சுற்றுச் சூழலுக்கான விழிப்புணர்வு பிரசாரத்திலும் இறங்கியிருக்கிறார். 100 நாள் ‘டஸ்ட் ப்ளான்’ என்ற திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். தொழிற் சாலைகளில் பயன்படுத்தப்படும் வேக்குவம் க்ளீனரை எடுத்துக் கொண்டு நகரின் பரபரப்பான இடங்களுக்குச் செல்கிறார். கட்டிடங் களில் படிந்திருக்கும் தூசிகளை வேக்குவம் க்ளீனர் மூலம் உறிஞ்சி எடுக்கிறார். ‘‘1000 வாட் வேக்குவம் க்ளீனரைப் பயன்படுத்தினால் 100 கிராம் தூசியை இழுக்க முடிகிறது. இந்த தூசியை 62 மனிதர்கள் 4 நாட்களில் நுரையீரலுக்குள் இழுத்துக்கொள்கிறார்கள். ஒருநாள் முழுவதும் எடுத்த தூசிகளை வைத்து, ஒரு செங்கல்லாக மாற்றியிருக்கிறேன். நான் செல்லும் இடங்களில் இந்தச் செங்கலை வைத்து சுற்றுச்சூழலின் அவசியத்தையும் மனிதர்களின் ஆரோக்கியத்தையும் எடுத்துச் சொல்கிறேன்’’ என்கிறார் பிரதர் நட்.

நல்ல காரியம் செய்யறீங்க பிரதர் நட்!

பிரிட்டனில் வசிக்கும் டெபி ஸ்மித் வீட்டுக்குத் தினமும் க்ளோரியா என்ற அன்னம் வரும். காலை உணவைச் சாப்பிடும். சிறிது நேரம் ஓய்வெடுக்கும். பிறகு கிளம்பிவிடும். அன்றும் வாசல் கதவைத் தன் அலகால் தட்டியது க்ளோரியா. டெபி ஸ்மித் கதவைத் திறந்துவிட்டு, உணவு எடுக்கச் சென்றார். திரும்பி வந்தபோது அவருக்கு மிகவும் ஆச்சரியமாகிவிட்டது. ‘‘கண்ணாடி ஒன்றை இறக்கி வைத்திருந்தேன். க்ளோரியா கண்ணாடியில் தம் பிம்பத்தைக் கண்டவுடன், வேறொரு அன்னம் என்று நினைத்துக்கொண்டு ஆர்வத்துடன் அருகில் சென்றது. தலையை ஆட்டியது. அலகால் தட்டியது. இறக்கைகளைப் படபடவென்று அடித்தது. சிறிது நேரத்தில் அது வேறொரு பறவை இல்லை என்பதை உணர்ந்துகொண்டது. மிக சந்தோஷமாகக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே இருந்தது. தன்னுடைய பிம்பம்தான் அது என்பதை அறிந்துகொண்டது என்று நினைக்கிறேன்’’ என்கிறார் டெபி ஸ்மித்.

குரங்கு, யானை போன்றவைதான் கண்ணாடி பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளன…

அன்னமும் அதில் சேருமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x