Published : 18 Feb 2016 11:03 AM
Last Updated : 18 Feb 2016 11:03 AM

உலக மசாலா: மர வீடுகள்

நியூயார்க்கைச் சேர்ந்த 27 வயது ஃபாஸ்டர் ஹண்டிங்டன் ஃபேஷன் டிசைனராக இருந்தார். திடீரென்று அந்த வேலை பிடிக்காமல் போய்விட்டது. 2011-ம் ஆண்டு தன் வேலையை விட்டுவிட்டார். தன்னுடைய வீடு, நிலம் போன்ற சொத்துகளை விற்றார். சில மாதங்கள் நகரும் வேனில் குடியிருந்தார். பிறகு அதுவும் சலிப்பைத் தந்தது. விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்து, போட்டோ புத்தகங்களைத் தயாரித்து விற்பனை செய்தார்.

2014-ம் ஆண்டு தன்னுடைய சிறு வயது கனவான மரவீடு கட்ட முடிவு செய்தார். சேமிப்புகளை எடுத்துக்கொண்டு, வாஷிங்டனில் உள்ள ஸ்காமானியாவுக்கு சென்றார். அவரது குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில் 2 மரங்களில் வீடுகளைக் கட்ட திட்டமிட்டார். தன்னுடைய கல்லூரி நண்பர்கள் 20 பேரை அழைத்தார். ஆளுக்கு ஒரு வேலையாகப் பகிர்ந்துகொண்டு மர வீடுகளை உருவாக்கினார்கள். ஒரு வீடு 20 அடி உயரத்திலும் இன்னொரு வீடு 30 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டது. 2 வீடுகளையும் மரப் பாலத்தால் இணைத்தனர்.

“அதிகாலை ஆயிரக்கணக்கான பறவைகள் மரங்களில் இருந்து கிளம்பும் காட்சி அற்புதமாக இருக்கும். மேகங்கள் மிக அருகில் தொட்டுச் செல்லும். மான்கள் துள்ளி விளையாடும். தூரத்தில் அருவி கொட்டிக்கொண்டிருக்கும். பனிக் காலத்தில் மட்டும் கொஞ்சம் கடினமாக இருக்கும். தண்ணீர் உறைந்துவிடும். பொழுது போக்குவதற்காக ஸ்கேட்டிங் திடல் கட்டியிருக்கிறோம். இது மட்டுமே செங்கல், சிமெண்ட் மூலம் கட்டப்பட்டிருக்கிறது. இயற்கையுடன் சேர்ந்து வாழும் இந்த வாழ்க்கையில் கிடைக்கும் மகிழ்ச்சியை நான் இதுவரை அனுபவித்தது இல்லை” என்கிறார் ஃபாஸ்டர்.

இப்படி ஓர் இடத்தில் வாழ்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

ஒரு பாறாங்கல்லைப் பார்க்கும்போது ஜெர்மனியில் உள்ள ஓர் அருங்காட்சியகம் போல காட்சியளிக்கும். ஆனால் உற்றுப் பார்த்தால் அது ஒரு சாதாரண பாறாங்கல் அல்ல. பாறையைக் குடைந்து சில கருவிகளைப் பொருத்தியிருக்கிறார்கள். வெளியில் இருந்து நெருப்பு வைத்தால் அந்த வெப்பம் மின் ஆற்றலாகப் பாறைக்குள் மாற்றம் அடைகிறது. அதிலிருந்து wi-fi இணைப்புக் கிடைக்கிறது. ஸ்மார்ட் போனில் இண்டர்நெட் மூலம் அத்தனை வேலைகளையும் இயல்பாகச் செய்ய முடிகிறது.

இதை உருவாக்கியவர் பெர்லினைச் சேர்ந்த கலைஞர் அரம் பார்தோல். “பழைய நுட்பங்களையும் புதிய நுட்பங்களையும் இணைத்து இதை உருவாக்கியிருக்கிறேன். மின்சாரம் இல்லாவிட்டால் மின்சார அடுப்பை இயக்க முடியாது. அப்பொழுது விறகு அடுப்புதான் கை கொடுக்கிறது. இதுதான் எனக்கு உந்து சக்தியாக இருந்தது. அதிலிருந்து இந்தத் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தேன். இதுபோன்ற சிறு அடுப்புகளை உருவாக்கினால் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தை, மின்சாரமாக மாற்றிக்கொள்ளலாம். போன்களுக்கு அதில் இருந்து சார்ஜ் செய்துகொள்ள முடியும்” என்கிறார் அரம் பார்தோல்.

வித்தியாசமான கண்டுபிடிப்பு!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x