Published : 09 Aug 2016 11:49 AM
Last Updated : 09 Aug 2016 11:49 AM

உலக மசாலா: மராத்தானில் பதக்கம் பெற்ற நாய்குட்டி

கோபி பாலைவனத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார் பிரிட்டனைச் சேர்ந்த 41 வயது டியான் லியோனார்ட். இவருடன் சின்னஞ்சிறு நாய் ஒன்றும் ஓடி வந்து, பதக்கம் பெற்றதில் டியான் உலகம் முழுவதும் பிரபலமானார். “7 நாட்கள் பாலைவன மாரத்தான் போட்டிக்கு வந்தேன். முதல் நாள் எங்கிருந்தோ ஒரு 18 மாத நாய்க்குட்டி, என்னுடன் சேர்ந்து ஓடி வந்தது. இரண்டாம் நாளும் நாய்க்குட்டி என்னுடன் ஓடி வர எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. இருவரும் அன்பால் நெருங்கிவிட்டோம். நாய்க்கு கோபி என்று பெயர் சூட்டினேன்.

எனக்கு முன்னால் ஓடிச் சென்று, கூடாரம் அருகில் கோபி காத்திருக்கும். என்னைப் பார்த்ததும் மீண்டும் ஓட்டத்தை ஆரம்பித்துவிடும். தனியாக ஓடுவதைக் காட்டிலும் இப்படி ஒரு துணையுடன் ஓடியது மிகவும் உற்சாகத்தை தந்தது. பாலைவனங்களின் நடுவே நீர்நிலைகள் குறுக்கிடும்போது மட்டும் கோபியை நான் தூக்கிக்கொண்டு ஓடுவேன். 6 கட்டங்களாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 4 கட்டங்கள் வரை கோபியும் ஓடி வந்தது. அதாவது 125 கி.மீ. தூரம் ஓடியது. 5, 6 கட்டங்கள் மிகவும் கடினமானவை. 52 டிகிரி வெயில் என்பதால், கோபியை நான் ஓடிவர அனுமதிக்கவில்லை.

ஆனாலும் என்னைக் காரில் பின்தொடர்ந்தது. எங்கிருந்து கோபி வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. 6 மைல்களுக்கு அப்பால்தான் கிராமங்கள் இருக்கின்றன. எவ்வளவு அன்பு, எவ்வளவு புத்திசாலித்தனம்! முன்பின் பார்க்காத, எதையும் செய்யாத என்னிடம் இவ்வளவு அன்பு வைக்க ரொம்பப் பெரிய மனம் வேண்டும். நான் மாரத்தான் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தேன். கோபியுடன் சேர்ந்துதான் வெள்ளிப்பதக்கம் பெற்றேன். கோபியை விட்டுச் செல்ல எனக்கு விருப்பமில்லை. கோபியை ஸ்காட்லாந்துக்கு எடுத்துச் செல்வது மிகக் கடினமான பணி. நிறைய பணம் தேவைப்படும். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. கோபி பிரபலமாகிவிட்டதால், மருத்துவம், ஸ்காட்லாந்துக்கு கொண்டு செல்லும் செலவுகளுக்காக 4.5 லட்சம் நன்கொடை கேட்டேன். 24 மணி நேரத்தில் 7.5 லட்சம் ரூபாய் குவிந்தது. சட்ட சிக்கல்கள் தீர்ந்து, கோபியை ஸ்காட்லாந்துக் கொண்டு வருவதற்கு 5 மாதங்களாகிவிட்டன. நானும் என் அருமை தோழியும் மீண்டும் ஒன்று கூடிவிட்டோம்” என்கிறார் டியான் லியோனார்ட்.

மாரத்தானில் ஓடி, பதக்கமும் பெற்றுவிட்டதே இந்த நாய்க்குட்டி!

அமெரிக்காவின் டாலஸ் நகரில் மிகப் பெரிய ஏலம் நடத்தப்பட்டது. இதில் அரிய சூப்பர்மேன் காமிக்ஸ் புத்தகம் ஒன்று சுமார் 6.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. 1938-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்த இந்த காமிக்ஸ் புத்தகம், 10 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் உலகம் முழுவதும் 100 பிரதிகளாவது இருக்கும் என்கிறார்கள். 1998-ம் ஆண்டு இந்தப் புத்தகத்தை ஒரு வியாபாரியிடமிருந்து 17 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள். “78 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்த காமிக்ஸின் கதையும் படங்களும் அற்புதமாக இருக்கின்றன. அட்டைகூட பளிச்சென்று இருக்கிறது. பல கோடிகளுக்கு ஏலம் போவதற்கு தகுதியான புத்தகம்தான்” என்கிறார் காமிக்ஸ் மற்றும் காமிக் ஆர்ட் இயக்குநர் லோன் ஆலன்.

அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x