Published : 10 Sep 2016 10:06 AM
Last Updated : 10 Sep 2016 10:06 AM

உலக மசாலா: மனைவியுடன் சண்டை போட்டதால் திருடன் ஆனவர்!

அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியில் வசித்து வரும் 70 வயது லாரன்ஸ் ஜான் ரைப்பில், வங்கி கொள்ளைக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். ‘எங்கள் வங்கிக்குள் லாரன்ஸ் நுழைந்தார். ஒரு தாளை எடுத்துக் காட்டினார். அதில் என்னிடம் துப்பாக்கி இருக்கிறது. 2 லட்சம் ரூபாயைக் கொடுத்துவிடுங்கள் என்று எழுதியிருந்தது. நாங்களும் பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டோம். ஆனால் அவர் வங்கியை விட்டுச் செல்லவில்லை. ஒரு நாற்காலியில் பணத்துடன் அமர்ந்திருந்தார். நாங்கள் வாசலில் இருக்கும் காவலருக்குத் தகவல் கொடுத்தோம். காவலர் கொள்ளையன் எங்கே என்று தேடினார். நீங்கள் தேடும் நபர் இங்கே அமர்ந்திருக்கிறேன் என்றார் லாரன்ஸ். எங்கள் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. உடனே போலீஸுக்கு தகவல் கொடுத்தோம். அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் வந்து, லாரன்ஸை கைது செய்தது. இப்படி ஒரு கொள்ளையனை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை’ என்கிறார் வங்கி அதிகாரி.

லாரன்ஸிடம் விசாரித்தபோது, அவர் சொன்ன தகவலைக் கேட்டு ஆச்சரியப்படாதவர்களே இல்லை. ‘எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வரும். இன்றும் அப்படித்தான் விவாதம் அளவுக்கு அதிகமாகப் போனது. என்னால் தாங்கவே முடியவில்லை. வீட்டில் மனைவியிடம் இருப்பதற்குப் பதில், சிறையே தேவலாம் என்று முடிவு செய்தேன். ஏதாவது குற்றம் புரிந்தால்தானே சிறைக்குச் செல்ல முடியும். அதனால் வங்கி கொள்ளையைத் தேர்ந்தெடுத்தேன். என்னைச் சிறைக்குள் அடைத்துவிடுங்கள். இனி மனைவியிடமிருந்து ஒரு வார்த்தை கூட கேட்க என்னால் முடியாது’ என்றார் லாரன்ஸ்.

சிக்கலான வழக்குகளை எல்லாம் எளிதாகச் சமாளிக்கும் அமெரிக்க காவல்துறை, லாரன்ஸ் வழக்கை எப்படிக் கையாள்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறது. இவ்வளவு தூரம் ஒரு காரியம் செய்தும் தான் விரும்பியபடி சிறைத் தண்டனைக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற வருத்தத்தில் இருக்கிறார் லாரன்ஸ். காவல்துறை லாரன்ஸ் மனைவியிடம் விசாரிக்க முயன்றது. ஆனால் இதுவரை அவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை.

இப்படியே போனால் சிறைக்கூடங்கள் தாங்குமா?

சீனாவின் குவாங் ஸோவ் பகுதி யைச் சேர்ந்த ஓர் இளைஞர், தன் தோழியிடம் காத லைத் தெரிவிக்க வித்தியாசமான வழியைக் கையாண்டார். தோழி முமுக்குப் பிடித்த 999 பாமெலோ பழங்களை வாங்கினார். அதைப் பொதுமக்கள் வந்துபோகக்கூடிய இடத்தில், இதய வடிவில் அடுக்கி வைத்தார். கையில் ஒரு பூங்கொத்துடன் முமுக்காகக் காத்திருந்தார். அவருடன் ஏராளமான நண்பர்களும் பொதுமக்களும் குழுமியிருந்தனர்.

பழங்களையும் கையில் பூங்கொத்துடன் நின்றிருந்த நண்பரையும் பார்த்த முமு, அதிர்ச்சியில் உறைந்து போனார். ஒரு பாடலைப் பாடிக்கொண்டே, முமுவிடம் தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படி கோரிக்கை வைத்தார் இளைஞர். ஆனால் முமு, ‘நான் உன்னை அப்படி நினைக்கவில்லை. மன்னித்துவிடு. நீ என் மிகச் சிறந்த நண்பன். நீ கொடுத்த இந்தப் பழங்களை மட்டும் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று கூறிவிட்டார்.

பெண்ணின் விருப்பம் அறிந்து கோரிக்கை வையுங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x