Published : 17 Nov 2016 10:44 AM
Last Updated : 17 Nov 2016 10:44 AM

உலக மசாலா: மனித பாறைகள் அருங்காட்சியகம்!

ஜப்பானின் சைதமா நகரில் அமைந்திருக்கிறது பாறைகள் அருங்காட்சியகம். இங்கே உள்ள 900 பாறைகள் மனிதர்களின் முகங்களை ஒத்திருப்பதுதான், இதன் சிறப்பு. மற்றவை ஈடி, மிக்கி மவுஸ், நீமோ மீன் போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களின் உருவத்தைக் கொண்டுள்ளன. ஷோஜோ ஹயாமா என்பவர் கடந்த 50 ஆண்டுகளில் இந்தப் பாறைகளைச் சேகரித்திருக்கிறார். இயற்கையை விஞ்சிய ஓவியர்கள் இந்த உலகில் இல்லை என்று சொல்லும் ஷோஜோ, ஓர் அருங்காட்சியகத்தை உருவாக்கவும் எண்ணினார். சாதாரண மனிதர்களின் முகங்களில் இருந்து இசைக் கலைஞர் எல்விஸ் பிரெஸ்லி, முன்னாள் ரஷ்ய அதிபர் மிகைல் கார்பச்சேவ் ஆகிய பிரபலங்களின் முகங்கள் வரை இந்தப் பாறை அருங்காட்சியகத்தில் பார்க்க முடியும். 2010-ம் ஆண்டு ஷோஜோ ஹயாமா மறைந்த பிறகு, 1,700 வித்தியாசமான பாறைகளை வைத்து அருங்காட்சியகத்தை உருவாக்கினார் அவரது மகள் யோஷிகோ ஹயாமா.

அட, வித்தியாசமான அருங்காட்சியகம்!

லாத்வியா நாட்டைச் சேர்ந்த 73 வயது முதியவர், 15 நிமிட வீடியோ மூலம் உலகப் புகழ் பெற்றுவிட்டார். கோக் பானம் துரு கறைகளை அகற்றுவது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாயின. அவற்றைப் பார்த்து, தானும் ஒரு பரிசோதனை முயற்சியில் இறங்கினார். தனது தோட்டத்தில் மிகப் பெரிய குழியை வெட்டி, பிளாஸ்டிக் தாளால் அதை மூடினார். 6 ஆயிரம் 2 லிட்டர் கோக் பாட்டில்களை வாங்கி வந்து, தொட்டிக்குள் ஊற்றினார். அதில் 40 கிலோ சமையல் சோடாவைக் கொட்டினார். கோக்கும் சோடாவும் வேதிவினை புரிந்து, தன்னுடைய துருப் பிடித்த ஆடி காரை சுத்தம் செய்யும் என்ற நம்பிக்கையில், காருடன் தொட்டிக்குள் இறங்கினார். நண்பர்கள் மூலம் இந்த நிகழ்ச்சியை வீடியோ எடுத்தார். ஆனால் 6 லட்சம் ரூபாய் செலவு செய்தும் ஆடி காரின் துருவைச் சுத்தம் செய்யவில்லை கோக். ஆனால் ஏற்கெனவே மோசமான நிலையில் இருந்த ஆடி கார் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. கோக் பானத்தில் துருவை நீக்கும் எந்த விஷயமும் சேர்க்கப்படவில்லை என்பதை இதற்குப் பிறகும் முதியவர் ஏற்றுக்கொள்ளவில்லை. சமையல் சோடா சேர்த்ததினால்தான் கோக் வேலை செய்யவில்லை என்கிறார்.

அடுத்த பரிசோதனையை சிறிய அளவில் திட்டமிட்டால் சரி…

விலங்குகள் நல ஆர்வலர்களான லூசியாவும் சார்லியும் சேர்ந்து குதிரைகளுக்கான பிளாஸ்டிக் ஷூக்களை உருவாக்கி இருக்கிறார்கள். ‘மெகாசஸ் ஹார்ஸ்ரன்னர்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஷுக்கள், இரும்பு லாடங்களை விட வசதியாகவும் மென்மையாகவும் இருக்கின்றன. குதிரைகளுக்கும் குதிரை ஓட்டிகளுக்கும் சுகமான பயணத்தை அளிக்கும். பிளாஸ்டிக் ஷூக்களை அணிவிப்பதும் அகற்றுவதும் எளிது. கரடுமுரடான சாலைகளில் கூட குதிரைகள் சிரமமின்றிச் செல்ல முடியும் என்கிறார்கள். 4 ஷூக்களின் விலை 15 ஆயிரம் ரூபாய்.

விலையைக் கேட்டால்தான் மயக்கம் வருது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x