Published : 27 Dec 2016 10:52 AM
Last Updated : 27 Dec 2016 10:52 AM

உலக மசாலா: மனிதர்களுக்குப் புத்துணர்வூட்டும் ஹஸ்கி கஃபே!

தாய்லாந்தின் மிகச் சுவையான உணவுகளைச் சாப்பிடவும் புத்துணர்வு பெறவும் ட்ரூ லவ் கஃபேயை நோக்கி மக்கள் படையெடுக்கிறார்கள். இங்கே பனிப்பிரதேசத்தில் வசிக்கக்கூடிய 25 ஹஸ்கி நாய்கள் இருக்கின்றன. வசீகரிக்கும் தோற்றமும் அன்பாகப் பழகும் குணமும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கின்றன. ‘மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த நாய்களை வைத்து, கஃபேயை ஆரம்பித்தோம். இன்று தாய்லாந்தின் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக எங்கள் கஃபே மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும் மூன்று வேளை ஹஸ்கிகளுடன் பழகுவதற்கு அனுமதிக்கிறோம். நாய்களுடன் செலவிடும் நேரம், உணவு, குளிர்பானம் போன்றவற்றுக்காக 670 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம். ஒரு மணிநேரம் மகிழ்ச்சியாக நாய்களுடன் விளையாடலாம். நாய்கள் இருக்கும் பகுதிக்கு நுழையும் முன் கைகளைச் சுத்தம் செய்து, கால்களுக்கு பிளாஸ்டிக் உறைகளை மாட்டிக்கொள்ள வேண்டும். நாய்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்ற விஷயங்களைச் சொல்லிக் கொடுத்துவிடுவோம். ஹஸ்கி நாய்கள் புத்திசாலியானவை. சைபீரிய வகையைச் சேர்ந்த இந்த நாய்களுக்கு ஏற்ற சூழ்நிலையை எங்களால் முழுவதுமாகக் கொடுக்க முடியாவிட்டாலும் ஓரளவு வசதிகளைச் செய்து வைத்திருக்கிறோம். 24 மணி நேரமும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இடத்தில் இருக்கின்றன. மக்களுடன் சேர்ந்திருக்கும் நேரங்களில் மட்டுமே இவை வெளியே வருகின்றன. மனிதர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்வதற்கு மிகவும் ஒத்துழைப்புக் கொடுக்கின்றன. முன்பதிவு செய்துவிட்டே இங்கே வர வேண்டும். இல்லாவிட்டால் மணிக்கணக்கில் காத்திருப்பதைத் தவிர்க்க இயலாது’ என்கிறார் உரிமையாளர்.

மனிதர்களுக்குப் புத்துணர்வூட்டும் ஹஸ்கி கஃபே!

ரஷ்யாவில் வசிக்கும் 21 வயது அலெக்சாண்டர் க்ரமரென்கோ, ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாடிக்கையாளருக்கு உரிய நேரத்தில் அவரால் கொடுக்க முடியவில்லை. தாமதமாக அனுப்பப்பட்ட பொருட்கள் சேதமடைந்து திரும்பி வந்துவிட்டன. இதனால் சுமார் 30 லட்சம் ரூபாய் நஷ்டம். உடனடியாகப் பொருட்களை வாங்கிய நிறுவனங்களிடம் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம். வேறுவழியின்றி அலெக்சாண்டர், தன்னை அடகு வைக்க முடிவெடுத்துவிட்டார். ஆன்லைனில் தன்னைப் பற்றிய குறிப்புகளை வெளியிட்டு, தன்னை பெண்கள் யாராவது 35 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தால், அவர்களுக்கு ஓராண்டுக் காலம் கணவனாக இருக்கிறேன் என்கிறார். விளம்பரத்தைக் கண்டவர்கள், யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் இந்தத் தகவல் உண்மை என்று தெரியவந்தபோது, அதிர்ந்து போனார்கள். ‘எதிர்பாராத விதத்தில் எனக்கு மிகப் பெரிய தொகை நஷ்டமாகிவிட்டது. என்னிடம் பணம் இல்லை. அதனால்தான் இந்த முடிவை எடுத்தேன். 35 வயதுக்குள் இருக்கும் பெண்கள், அதிக விலைக்கு ஏலம் எடுத்து, என் வாழ்க்கையைக் காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் நல்ல கணவனாகவும் சிறந்த மனிதனாகவும் ஓராண்டு வரை இருப்பேன். என்னை ஏலம் எடுத்து, மணந்துகொள்ளும் பெண்ணைப் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும். ஓராண்டுக்குப் பிறகு அவரவர் வழியில் திரும்பிவிடலாம்’ என்கிறார் அலெக்சாண்டர்.

அடப்பாவி, எவ்வளவு மோசமான யோசனை...



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x