Published : 01 Sep 2016 09:21 AM
Last Updated : 01 Sep 2016 09:21 AM

உலக மசாலா: மனிதர்களின் ஆதித் தாய்!

“லூசியின் கடந்த 1974-ம் ஆண்டு எத்தியோப் பியாவில் ஓர் எலும்புக் கூடு கண்டுபிடிக்கப் பட்டது. இது சுமார் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு பெண்ணின் எலும்புக் கூடு. இவர்தான் மனிதர்களின் ஆதித் தாய். லூசி என்று பெயரிட்டு, கிடைத்திருக்கும் 40% எலும்புகளை வைத்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். மூன்றரை அடி உயரமும் 29 கிலோ எடையும் கொண்டவர். சிறிய பாதங்கள், நீளமான கைகள் கொண்ட லூசி, நவீன சிம்பன்ஸியை ஒத்திருக்கிறார். மனிதக் குரங்குகளுக்கு மத்தியில் எழுந்து நின்று, நடந்து சென்ற முதல் உயிரினக் கூட்டத்தைச் சேர்ந்தவர் லூசி. அன்றையக் காலகட்டத்தில் பெண்களின் சராசரி ஆயுட் காலம் 20 ஆண்டுகள்தான். லூசியும் 20 வயதில்தான் இறந்திருக்கிறார். லூசியின் எலும்புகளை வைத்து ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள், லூசி மரத்தில் இருந்து விழுந்து இறந்து போயிருக்கலாம் என்கிறார்கள்.

மார்பெலும்புகள், இடுப்பு எலும்புகள், தொடை எலும்புகள், தோள்பட்டை எலும்புகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் காலத்தில் மரங்களில் அதிக நேரம் மனிதர்கள் செலவிட்டிருக்கிறார்கள். லூசியும் 40 அடி உயர மரத்திலிருந்து விழுந்து, எலும்புகள் நொறுங்கி இறந்து போயிருக்கலாம். எலும்புகளின் சேதம் அதை உறுதி செய்கிறது. அளவுக்கு அதிகமான துன்பத்தை அனுபவித்தே லூசி இறந்திருக்கிறார். லூசி நமக்குக் கிடைத்திருக்கும் அற்புதமான விஷயம். ஆதி மனித இனத்தைச் சேர்ந்த இந்த லூசியை வைத்து இன்னும் ஏராளமான விஷயங்கள் மனித குலம் அறிய வேண்டியிருக்கிறது’’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் கேப்பல்மனும் ரிச்சர்ட் கெட்சமும்.

சே… மிகுந்த வலியுடன் இறந்து போயிருக்கிறார் நம் ஆதித்தாய்…

நார்வேயில் மின்னல் பாய்ந்து 323 கலைமான்கள் ஒரே நேரத்தில் இறந்து போயிருக்கும் காட்சி, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹார்டங்கர்விடா மலைப் பகுதிக்குச் சென்ற வேட்டைக்காரர்கள் இந்தக் காட்சியை முதலில் கண்டு, வெளியுலகத்துக்கு அறிவித்திருக்கிறார்கள். இந்த மலையில் சுமார் 11 ஆயிரம் கலைமான்கள் வசித்து வந்தன. எவ்வளவு மோசமான வானிலையின்போதும் இதுபோன்று பெரிய அளவில் கலைமான்கள் உயிர் இழந்தது இல்லை. ‘இதுவரை மின்னல் பாய்ந்து 10, 20 ஆடுகள்தான் இங்கே உயிரிழந்திருக்கின்றன.

ஆனால் முதல் முறை 323 கலைமான்கள் உயிரிழந்து, தரையில் விழுந்து கிடந்த காட்சி வருத்தமானது. மரத்தில் மின்னல் பாய்ந்தபோது, மின்சாரம் நிலத்துக்கும் பரவியிருக்கிறது. கலைமான்கள் மின்சாரத்தை உணர்ந்ததும் வேகமாக ஓட ஆரம்பித்திருக்கின்றன. மோதலில் ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு எளிதாக மின்சாரம் பாய்ந்திருக்கிறது. அதனால்தான் இவ்வளவு பெரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. மிக மோசமான வானிலை. நிலத்தில் தண்ணீரின் அளவும் அதிகமாக இருந்திருக்கிறது. மலை உச்சியை நோக்கி கலைமான்கள் கூட்டம் நகர்ந்துகொண்டிருக்கும்போது மின்னல் பாய்ந்திருக்கிறது. கலைமான்கள் மட்டுமில்லை, மனிதர்கள் இருந்திருந்தாலும் தப்பியிருக்க முடியாது’ என்கிறார்கள் நார்வேயின் சுற்றுச்சூழல் மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள். 1918-ம் ஆண்டு அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் மின்னல் பாய்ந்து 654 ஆடுகள் இறந்து போயிருக்கின்றன. 98 ஆண்டுகளுக்குப் பிறகு மின்னல் பாய்ந்து அதிக உயிரிழப்பு இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது.

பாவம் கலைமான்கள்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x