Published : 09 Jul 2015 10:39 AM
Last Updated : 09 Jul 2015 10:39 AM

உலக மசாலா: மனிதக் காதல் அல்ல!

பிரிட்டனைச் சேர்ந்தவர் 65 வயது ஜெனிசிஸ் ப்ரேயர் பி-ஒரிட்ஜ். இசைக் கலைஞர், கவிஞர், பாடலாசிரியர், பாடகர் என்று ஏராளமான திறமைகளைக் கொண்டவர். 1993-ம் ஆண்டு அவருடைய வருங்கால மனைவி ஜாக்குலினைச் சந்திக்கச் சென்றார். அப்பொழுது ஜாக்குலினைப் போலவே உடைகள் அணிந்துகொண்டார். ஒப்பனை செய்துகொண்டார். தலைக்கு விக் வைத்துக்கொண்டார். ஜெனிசிஸைப் பார்த்ததும், தன்னைக் கண்ணாடியில் பார்ப்பது போலவே இருக்கிறது என்று ஆச்சரியமானார் ஜாக்குலின்.

இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போனது. “நாங்கள் இருவரும் இரண்டு உயிர்கள் அல்ல. நான்தான் அவர். அவர்தான் நான்’’ என்பதை இருவருமே உணர்ந்துகொண்டோம் என்கிறார் ஜெனிசிஸ். கடந்த இருபது ஆண்டு திருமண வாழ்க்கையில் இருவரும் ஒரே உருவத்தை அடைவதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டனர். மூக்கு, கண், தாடை ஒவ்வொன்றையும் அறுவை சிகிச்சை மூலம் மாற்றிக்கொண்டே இருந்தனர்.

இதற்காக 1 கோடியே 27 லட்சம் ரூபாயைச் செலவு செய்துள்ளனர். ஒரே மாதிரி ஒப்பனை, ஒரே மாதிரி ஆடைகளை அணிந்துகொண்டு வெளியே சென்றனர். பார்ப்பவர்கள் இருவரும் ஒரே மாதிரி இருப்பதாகச் சொன்னார்கள். திடீரென்று ஜெனிசிஸ், ஜாக்குலின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. வயிற்றுப் புற்றுநோயால் ஜாக்குலின் மரணம் அடைந்தார்.

“எங்கள் திருமண வாழ்க்கையில் நான், நீ என்ற வார்த்தைகளே கிடையாது. நாங்கள், எங்கள் என்பது மட்டும்தான் இருந்தன. என்னுடைய பரிசோதனை முயற்சிக்கெல்லாம் ஈடுகொடுத்த ஜாக்குலின், இன்று என்னை விட்டுச் சென்றுவிட்டார். துயரம் என்றால் என்ன என்பதை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு உணர்கிறேன்’’ என்கிறார் ஜெனிசிஸ்.

மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல…

சிகாகோவில் வசிக்கிறார் ஓவியர் கைல் பைஸ். ஓவியக் கலையில் பட்டம் பெற்றிருக்கிறார். ஆயில் பெயின்ட் மூலம் ஓவியம் தீட்டிக்கொண்டிருந்தவர், சமீபக் காலமாக பியரை வைத்து ஓவியம் தீட்டி வருகிறார். தன்னுடைய ஓவிய பாணிக்கு, `ட்ரிங்க் அண்ட் ட்ரா’ என்று பெயர் வைத்திருக்கிறார். ஒருநாள் பெயிண்ட் டப்பாவை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார். பிரஷ் மட்டும்தான் இருந்தது. அருகில் ஒரு பியர் பாட்டில் இருந்தது.

பியரை ஊற்றி, பிரஷ் மூலம் வரைந்து பார்த்தார். வித்தியாசமான ஓவியம் கிடைத்தது. “வாட்டர் கலரில் பெயின்ட் செய்வது போலத்தான் பியரிலும் பெயின்ட் செய்கிறேன். ஆரம்பத்தில் இந்த பியர் ஓவியங்களுக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இன்று இதையே முழு நேரமாகச் செய்யும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது’’ என்கிறார்.

வித்தியாசமான முயற்சிக்கு வெற்றி உறுதி!

பின்லாந்தில் மனைவியைத் தூக்கிச் செல்லும் போட்டி, இருபதாவது ஆண்டாக நடத்தப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து 14 நாடுகளைச் சேர்ந்த 60 ஜோடிகள் இதில் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் நிறைய விதிமுறைகள் உண்டு. அவர்கள் குறிப்பிட்டுள்ள நான்கு முறைகளில்தான் மனைவியைத் தூக்கிச் செல்ல வேண்டும். 253.5 மீட்டர் தூரம் செல்ல வேண்டும்.

நடுவில் தண்ணீர்த் தொட்டி, மணல், தடை போன்ற பலவற்றைக் கடந்து, வெற்றிக் கோட்டைத் தொட வேண்டும். கணவன், மனைவியாகத்தான் கலந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. சென்ற ஆண்டு வில்லெ பர்வியைனென் சரி வில்ஜனென் ஜோடி வெற்றி பெற்றது. இந்த ஆண்டும் அதே வில்லேதான் வெற்றி பெற்றார், ஆனால் வேறோர் இணையோடு!

ம்… ரொம்பக் கஷ்டமான போட்டிதான்…

ஃப்ளோரிடாவின் வளைகுடா பகுதியில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சதுப்பு நிலக் காடுகள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் இந்தப் பகுதிக்கு ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து, முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, குடும்பத்தோடு பறந்து செல்வது வாடிக்கை. இந்த ஆண்டும் பறவைகள் வந்தன. ஆனால் திடீரென்று பறவைகள் எல்லாம் மாயமாகிவிட்டன. காரணம் அறிந்துகொள்வதற்காக ஒரு நிபுணர் குழு சென்றது. பறவைகளின் கூடுகள் காலியாக இருந்தன. நிலத்தில் சில முட்டை ஓடுகள் மட்டும் காணப்பட்டன. ரக்கூன் போன்ற புது எதிரிகளால் பறவைகள் வேறு இடங்களுக்குச் சென்றிருக்கலாம். அல்லது, நோய்த் தொற்று காரணமாக இடப் பெயர்வை மேற்கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

ஐயோ… பாவமே…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x