Published : 25 Apr 2015 10:31 AM
Last Updated : 25 Apr 2015 10:31 AM

உலக மசாலா: மண் குளியல்!

ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவு கியுஷு. அங்கே வெந்நீர் ஊற்றுகள் ஏராளமாக இருக்கின்றன. இங்கே நிலவும் பருவநிலைக்காகவும் வெந்நீர் ஊற்றுகளுக்காகவும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். இங்குள்ள ஸ்பாக்களில் மண் குளியல் சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. எரிமலைப் பகுதிகளில் இருந்து எடுத்து வந்த ஈரமண்ணை ஒரு பெட்டியில் கொட்டுகிறார்கள்.

பெட்டிக்கு அடியில் ஊற்றுகளில் இருந்து கிடைக்கும் நீரைச் சூடேற்றுகிறார்கள். மண் சூடாக இருக்கும்பொழுது, மனிதர்களைப் பெட்டிக்குள் படுக்க வைத்து, மேலே மண்ணைக் கொட்டி மூடி விடுகிறார்கள். மண்ணில் உள்ள வெப்பம் குறைந்தவுடன் மனிதர்களை வெளியில் எடுக்கிறார்கள். பிறகு வெந்நீர் ஊற்று நீரால் குளிக்க வைக்கிறார்கள். இந்த மண் குளியலால் குழந்தையின்மை, சர்க்கரை நோய், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் சரியாகும் என்றும் உடல் எடை குறையும் என்றும் சொல்கிறார்கள்.

நோய் சரியாகிறதோ, இல்லையோ மண் குளியலால் புத்துணர்ச்சி கிடைப்பதாகப் பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். இது ஒன்றும் புதிய விஷயமில்லை. பன்றி, நீர்யானை, யானை போன்ற விலங்குகள் எல்லாம் சகதியில் உழன்றுவிட்டு, தண்ணீரில் குளித்து, புத்துணர்வு பெற்றுக்கொள்கின்றன. அதைத்தான் செய்கிறோம் என்கிறார்கள் ஸ்பா உரிமையாளர்கள்.

ம்… உடம்புக்கு நல்லதுன்னு சொல்லிட்டா எதை வேணும்னாலும் செய்யத் தயாரா இருக்காங்க…

சீனாவின் ஸுவாங்ஸி கிராமத்தில் வசிக்கிறார்கள் சென் டியான்வென் குவோ கைரன் தம்பதியர். 1989-ம் ஆண்டு தெருவில் ஒரு கைவிடப்பட்ட சிறுவனைக் கண்டனர். அவனை வளர்க்க ஆரம்பித்தனர். கிராமத்தில் கைவிடப்பட்ட குழந்தைகளைக் கவனிக்க எந்த அமைப்பும் இல்லாததால், வரிசையாக அவர்கள் வீட்டுக்குக் குழந்தைகளை அனுப்பி வைத்தனர். கடந்த 26 வருடங்களில் 40 ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி குழந்தைகளை வளர்த்து வருகிறார்கள். இவர்களுடன் டியான்வென் குழந்தைகள் 3 பேரையும் வளர்த்தனர்.

குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவே தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டார் டியான்வென். தன்னிடமுள்ள நிலத்தில் விவசாயம் செய்து செலவுகளைச் சமாளிக்கிறார். அரசாங்கம் ஒவ்வொரு குழந்தைக்கும் குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. சிலர் தாங்களாக முன்வந்து நன்கொடைகளையும் அளிக்கிறார்கள். குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்திக்கொண்டு மிகவும் சந்தோஷமாகத் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

ஆனால் அருகில் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளை இவர்களுடன் விளையாடுவதற்கோ, பேசுவதற்கோ அனுமதித்ததில்லை. இன்று மக்களின் மனநிலை மாறிவிட்டது. கிராமத்தினரும் டியான்வென் வளர்த்த 5 குழந்தைகளும் சேர்ந்து ஒரு பெரிய வீட்டை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த வீட்டில் இன்னும் சில குழந்தைகளைக் கூட பராமரிக்க முடியும் என்கிறார்கள் டியான்வென்னும் குவோவும்.

அழகான தம்பதியர்!

நெதர்லாந்தின் ராட்டர்டேம் பகுதியில் ஸ்ஹி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகளையும் குப்பைகளையும் மக்கள் கொட்டி வந்தார்கள். 37 வயது டாம்மி க்ளெய்ன் தனி ஒருவராக இந்த ஆற்றைச் சுத்தம் செய்யும் பணியில் இறங்கினார். தினமும் அரை மணிநேரம் ஆற்றங்கரைக்குச் சென்று, குப்பைகளை ஒரு பையில் சேகரிக்க ஆரம்பித்தார். 5 வாரங்களில் 100 மீட்டர் தூரத்தைச் சுத்தம் செய்து முடித்துவிட்டார். தான் சுத்தம் செய்யும் விஷயத்தையும் புகைப்படங்களையும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டார்.

அதைப் பார்த்துவிட்டு நிறையப் பேர் சுத்தம் செய்ய வந்தனர். இப்பொழுது ஆற்றங்கரையோரம் சுத்தமாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறது. “கர்ப்பமாக இருக்கும் என் மனைவி, ஒருநாள் ஆறு ஏன் அசுத்தமாக இருக்கிறது என்று குழந்தை கேட்கப் போகிறது. உன் அப்பாதான் சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டார் என்று சொல்வேன் என்றார். விளையாட்டுக்கு அவர் சொன்னாலும் என் குழந்தை பிறக்கும்போது சுத்தமான ஆறாக இது மாறவேண்டும் என்று முடிவெடுத்தேன். அதைச் செயல்படுத்தியும் விட்டேன்’’ என்கிறார் க்ளெய்ன். நெதர்லாந்தில் மட்டுமில்லை, க்ளெயின் புகைப்படங்களும் கட்டுரையும் மற்ற நாடுகளிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

நாமும் இப்படி இறங்கினால் எத்தனையோ இடங்கள் சுத்தமாகும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x