Published : 03 Mar 2015 12:10 PM
Last Updated : 03 Mar 2015 12:10 PM

உலக மசாலா: ’மடோனா’வாக மாறியவர்

அமெரிக்காவில் ஆடம் டேனியல் மிகவும் பிரபலமான மனிதராக வலம் வருகிறார். பாப் பாடகி மடோனாவைப் போல ஆடம் தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டார். ’மடோனோ மீது மிகப் பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அதனால்தான் என்னுடைய சொத்தை எல்லாம் விற்று, 50 லட்சம் ரூபாய் செலவு செய்து பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் உருவத்தை மாற்றியிருக்கிறேன்.

மடோனாபோல இருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அவர் போலவே விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை அணிய வேண்டும். அவரைப் போலவே பேச வேண்டும். நடக்க வேண்டும்’ என்கிறார் ஆடம். 12 வயதில் மடோனாவின் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவருக்கு, நாளடைவில் மடோனாவாக மாறிவிடவேண்டும் என்ற எண்ணம் ஆழமாக உருவாகிவிட்டது.

31 வயது இளம் மடோனாவாக வலம் வரும் ஆடமை ஒருவரும் பாராட்டவில்லை என்று வருந்துகிறார். ஆனாலும் தான் மடோனாவாகவே வாழ்ந்து மடியவேண்டும் என்று விரும்புகிறார்.

என்ன செய்தாலும் ஒரிஜினலாக முடியாது என்ற உண்மை உங்களுக்குத் தெரியலையா ஆடம்?

பொதுவாக இரட்டையர்கள் என்றால் உருவத்தில் ஒரே மாதிரி யாக இருப்பார்கள். ஆனால் அமெரிக்காவில் வசிக்கும் 18 வயது லூசியும் மரியாவும் நிறம், உருவம் என அனைத்து விஷயங்களிலும் வித்தியாசமாக இருக்கிறார்கள். லூசி வெள்ளைத் தோலும் பழுப்பு முடியுமாகக் காட்சியளிக்கிறார்.

மரியா மாநிறத் தோலும் சுருட்டையான கறுப்பு முடியுடனும் காட்சி தருகிறார். இந்த இரட்டையர்களின் அம்மா ஜமைக்காவைச் சேர்ந்தவர். அப்பா அமெரிக்கர். லூசி அப்பாவைப் போலவும் மரியா அம்மாவைப் போலவும் பிறந்ததில் ஒன்றும் அதிசயமில்லை.

இரட்டையர்கள் இப் படிப் பிறந்திருப்பதுதான் அதிசயம் என்கிறார்கள். உருவத்தில் மட்டு மில்லை, குணத்திலும் இருவரும் வெவ்வேறாக இருக்கிறார்கள்.

யார் என்ற குழப்பம் இவர்களிடம் வராது…

பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியில் வசிக்கும் காலும் சாம்பர்லைன், ஒரு பட்டதாரி. பெரிய பல்கலைக்கழகங்களில் படித்து முடித்தாலும்கூட வேலை கிடைப்பது மிகவும் கஷ்டமான காரியமாக இருக்கிறது. ஆன்லைன் மூலம் எத்தனையோ வேலைகளுக்கு முயற்சி செய்தார். ஒன்றும் கிடைக்கவில்லை. பரபரப்பாக இருக்கும் மான்செஸ்டரில் நடுத் தெருவில் நின்றுகொண்டு வேலை தேட ஆரம்பித்துவிட்டார்.

‘நான் ஒரு பட்டதாரி. எனக்கு ஏற்ற வேலை தாருங்கள்’ என்று ஓர் அட்டையைப் பிடித்தபடி மணிக்கணக்கில் நின்றுகொண்டிருக்கிறார். பெரும்பாலானவர்கள் புன்னகை செய்து, நம்பிக்கையான வார்த்தைகளைக் கூறிச் செல்கின்றனர். இதுவரை 5 ஆயிரம் மக்களைச் சந்தித்திருக்கிறார். அதில் 40 பேர் தகுந்த வேலைக்கு ஏற்பாடு செய்வதாக வாக்களித்திருக்கிறார்கள்.

ஐயோ... தொழிற்சாலைகள் நிறைந்த மான்செஸ்டரிலேயே வேலை இல்லையா?

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் வசிக்கிறார் 24 வயது ஸாங் க்யி. கடந்த 5 ஆண்டுகளாக அவரை இருட்டறையில் அடைத்து வைத்திருந்தனர். 18 வயதில் திருமணம் ஆன ஸாங், கட்டாயக் கருக்கலைப்பின் மூலம் நரம்புத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டார்.

உடனே அவரது பெற்றோர் தனி அறையில் அடைத்துவிட்டனர். ஒரு சிறிய துவாரத்தின் வழியே கொஞ்சம் உணவுகளைக் கொடுத்து வந்தனர். சூரிய வெளிச்சமோ, பேச்சுத் துணையோ, சரியான உணவோ இல்லாமல் ஸாங் மனநிலை பாதிக்கப்பட்டார். ஸாங்கின் தோழிகள் சிலருக்கு சந்தேகம் வந்து, காவல்துறையில் புகார் அளித்தனர். தற்போது ஸாங் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டி ருக்கிறார். பெற்றோர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

அடப்பாவிகளா…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x