Published : 20 Mar 2016 12:10 PM
Last Updated : 20 Mar 2016 12:10 PM

உலக மசாலா: மக்களைத் தேடி வரும் படகு உணவகம்!

பொதுவாகத் தாவரங்களின் தண்டுகளில் காம்புகள் தோன்றி, பூக்கள் பூத்து, காய்த்து, பழங்கள் உருவாகும். ஆனால் Butcher’s Broom என்ற புதர்ச் செடியில் இலைகளின் நடுவில் காம்புகள் தோன்றி பூத்து, காய்த்து, பழமாகின்றன. சிறிய தடிமனான இலைகளுக்கு நடுவே சின்னஞ் சிறிய சிவப்புப் பழம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தாவரங்களின் எந்த விதியையும் இந்தச் செடி மாற்றிவிடவில்லை. இலைகள்தான் இந்தச் செடியில் தண்டுகளாகச் செயல்படுகின்றன. அதாவது தண்டுகள் தட்டையாக இலைகள் போல இருக்கின்றன. தங்களுடைய வேலையைச் சரியாகச் செய்கின்றன. புட்சர்ஸ் ப்ரூம் செடிகள் ஈரானிலிருந்து மத்திய தரைக்கடல், அமெரிக்காவின் தென் பகுதி வரை பரவலாகக் காணப்படுகின்றன. இந்தச் செடியில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் அரிப்பு, வீக்கம், மூலம் போன்ற நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இளம் வேர்களையும் மருந்தாகச் சாப்பிடுகிறார்கள். செடியின் கிளைகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்தால், கசாப்புக்கடைக்காரர் பயன்படுத்தும் துடைப்பம் போல இருந்ததால், ‘புட்சர்ஸ் ப்ரூம்’ என்ற பெயர் வந்தது.

இந்த விநோதமான செடிக்கு இன்னும் நல்ல பெயர் வைத்திருக்கலாம்…

ராளமானவர்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு, உணவுத் தொழிலில் இறங்கிவருகிறார்கள். டாராவும் சாஷா போயிஸும் சற்று வித்தியாசமானவர்கள். இந்த இளம் தம்பதியர் ‘பிட்ஸா பை’ என்ற நகரும் உணவகத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். கரீபியன் கடலில் படகில் இந்த உணவகம் அமைந்திருக்கிறது. ’’எங்கள் இருவருக்கும் அவரவர் வேலை அலுப்பைத் தந்தது. வாழ்வதற்கு வருமானம் வேண்டும். அந்த வருமானம் கிடைப்பதற்குப் பிடித்த வேலையை அமைத்துக்கொண்டால் என்ன என்று தோன்றியது. 10 ஆண்டுகளுக்கு முன் நான் கம்ப்யூட்டர் புரோகிராமர் வேலையை விட்டுவிட்டு, படகு தயாரிக்கும் வேலை செய்துகொண்டிருந்தேன். அங்கேதான் ஆசிரியர் வேலை செய்துகொண்டிருந்த டாராவைச் சந்தித்தேன். 2012-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டோம். இருவரும் ஒரே வேலையில் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். உணவுத் தொழில் எங்களை ஈர்த்தது. படகு உணவகம் என்று முடிவு செய்தோம். பழைய படகு ஒன்றை வாங்கி, சரி செய்வதற்கே இரண்டு ஆண்டுகள் பிடித்தன. பாத்திரங்கள், இயந்திரங்கள் எல்லாம் தயார். ஆனால் பிட்ஸா எப்படிச் செய்வது என்பது எங்களுக்குத் தெரியாது. இருவரும் பிட்ஸா பயிற்சிக்குச் சென்றோம். விரைவில் நிபுணர்கள் ஆனோம். தொழில் சூடுபிடித்தது. கடலில் சூடான பிட்ஸா கிடைப்பது எல்லோரையும் ஈர்த்தது. 3 மாதங்களுக்கு ஒருமுறை உணவு வகைகளை மாற்றிக்கொண்டே இருப்போம். பொதுவாக உணவகங்களைத் தேடி மக்கள் வருவார்கள். நாங்கள் மக்களைத் தேடிச் செல்கிறோம். ஒரு நாளைக்கு 20 முதல் 30 படகு நிறுத்தங்களுக்குச் செல்வோம். காலை 11 மணி முதல் 6 மணி வரை உணவகம் இருக்கும். ஒரு நாளைக்கு 25 பிட்ஸாக்களை விற்பனை செய்கிறோம். வாரத்தின் 7 நாட்களும் பிட்ஸா கேட்கிறார்கள். ஆட்களை வேலைக்குச் சேர்க்க முடிவு செய்திருக்கிறோம். வாழ்க்கை சுவாரசியமாகப் போகிறது’’ என்கிறார் சாஷா.

மக்களைத் தேடி வரும் படகு உணவகம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x