Published : 05 Jul 2017 08:54 AM
Last Updated : 05 Jul 2017 08:54 AM

உலக மசாலா: மக்களுக்கு அதிர்ஷ்டம். ஆனால், முதலைக்கு?

மெக்சிகோவின் சான் பெட்ரோ ஹுவாமெலுலா விக்டர் பகுதியைச் சேர்ந்த மேயர் ஒருவர், முதலையைத் திருமணம் செய்திருக்கிறார். ஒரு பெண் முதலைக்குத் திருமண ஆடையை அணிவித்து, தலையில் மலர்களால் கிரீடம் சூட்டி, வாயைக் ஒரு கயிற்றால் கட்டி அலங்கரித்து வைத்தனர். பிறகு இந்த இளவரசி முதலையை வாத்தியங்கள் முழங்க, பாட்டுப் பாடி வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். திருமணச் சடங்குகள் நடத்தப்பட்டு, மேயரும் முதலையும் கணவன், மனைவியாக அறிவிக்கப்பட்டனர். மேயர் தன் மனைவியை முத்தமிட்டார். பிறகு நடனம், விருந்து என்று கோலாகலமாக நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்தன. “முதலையைத் திருமணம் செய்யும் வழக்கம் 250 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் இருந்து வருகிறது. நிலத்தில் விளைச்சலோ, கடலில் மீன்களோ அதிகம் கிடைக்காத காலங்களில் இதுபோன்ற திருமணத்தை நடத்துவோம். திருமணத்துக்குப் பிறகு நல்ல மழை பெய்யும். விளைச்சல் அமோகமாக இருக்கும். மீனவர்கள் திருப்தி கொள்ளும் அளவுக்கு மீன்களும் கிடைக்கும். அதனால்தான் மக்களின் நலன் மேல் அக்கறையுள்ள தலைவர்கள், மேயர்கள் முதலையைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மக்களுக்காகச் செய்யும் திருமணம் என்பதால், மக்களும் உற்சாகத்துடன் இதில் கலந்து கொள்கிறார்கள்” என்கிறார் உள்ளூர்வாசி அகுலர்.

மக்களுக்கு அதிர்ஷ்டம். ஆனால், முதலைக்கு?

குரேசியாவில் வசிக்கும் 23 வயது டோமிஸ்லாவ் ஜர்செக், 13 வயது சிறுவனாகக் காட்சியளிக்கிறார். பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாக, இவரது வளர்ச்சி தடை செய்யப்பட்டிருக்கிறது. பலரும் 10 வயது குறைந்தவராகத் தோற்றம் அளித்தால் சந்தோஷமடைவார்கள். ஆனால் டோமிஸ்லாவ் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார். “என்னை யாரும் 23 வயது மனிதராக நினைப்பதே இல்லை. பெரியவர்கள் செல்லக்கூடிய விளையாட்டுகளுக்கு, சினிமாக்களுக்கு எல்லாம் என்னை அனுமதிப்பதில்லை. அடையாள அட்டை காண்பித்து, மது கேட்டால் கூட சிறுவனுக்கு என்று அரை தம்ளர் மதுதான் அளிக்கிறார்கள். சில சமயம் காவலர்கள் என்னைப் பிடித்து, சிறுவன் இப்படிச் செய்யலாமா என்று விசாரணை நடத்துவார்கள். உண்மையைச் சொல்லிவிட்டு வருவதற்குள் களைப்படைந்துவிடுவேன். இதற்காக என் வயதுக்குரிய ஆசைகளை அடக்கி வைத்திருக்கிறேன். இதை விடக் கொடுமையான விஷயம் என்னவென்றால், என்னை எந்தப் பெண்ணும் காதலிப்பதில்லை. அவர்களைப் பொருத்தவரை நான் ஒரு சிறுவன். என் பெற்றோர் தங்கள் மகனுக்கு ஒரு கல்யாண மாகி, பேரக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு கிடைக்காதோ என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் டோமிஸ்லாவ். “நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தபோது, எப்படி இருந்தானோ அப்படியே இருக்கிறான் இவன். உருவம் மட்டுமில்லை, குரல்கூட சிறுவனின் குரலாகவே இருக்கிறது. மனத்தால் மட்டுமே முதிர்ச்சியடைந்திருக்கிறான். எல்லோருக்கும் இயல்பாகக் கிடைக்கும் விஷயங்கள்கூட இவனுக்குப் பெரும் போராட்டத்துக்குப் பிறகே கிடைத்திருக்கின்றன. இவனது குறைபாட்டைச் சரி செய்யும் அளவுக்கு மருத்துவம் இன்னும் வளரவில்லை” என்கிறார் நண்பர் ஜுவானிமிர்.

என்றும் 13!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x