Published : 20 Apr 2017 10:08 AM
Last Updated : 20 Apr 2017 10:08 AM

உலக மசாலா: மகிழ்ச்சியாக வாழட்டும்!

நியூயார்க்கில் வசிக்கும் 24 வயது அல்மா டோர்ரெஸ், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருகிறார். ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக உதிரப் போக்கு, இடுப்பு வலி, தாய்மை அடைவதில் சிக்கல், முகத்தில் முடி போன்ற பல பிரச்சினைகள் இதன்மூலம் ஏற்படுகின்றன. எடை அதிகரிப்பு, தூக்கமின்மை, இதயக் கோளாறுகள் போன்றவையும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. 16 வயதிலிருந்து இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அல்மா, முகத்தில் தாடியும் மீசையும் அடர்த்தியாக வளர்ந்ததால் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தார். ஒருகட்டத்தில் மனதளவில் சோர்ந்து போய், தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தார். ஆனால் அவரது காதலர், “மீசை, தாடியுடன் இருந்தாலும் நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்! இயற்கையாக இப்படியே இருந்துவிடு. இதில் எனக் கொன்றும் பிரச்சினை இல்லை” என்று சொல்லி, அல்மாவுக்கு நம்பிக்கையளித்தார். அதற்குப் பிறகு தாடி, மீசையுடன் வெளியில் செல்ல ஆரம்பித்தார். “எனக்கு நேராக எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் நான் நடந்து செல்லும்போது செல்போனில் படம் பிடிப்பார்கள். இன்று எல்லாவற்றையும் எளிதில் கடந்துவிடும் மனநிலையில் இருக்கிறேன். தாடி, மீசையால் இன்னும் கம்பீரமான, தைரியமான பெண்ணாக உணர்கிறேன். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் குறித்து பிற பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். ஐந்து ஆண்டுகளாக என் காதலர் கொடுத்த நம்பிக்கையால்தான் நான் இவ்வளவு தூரம் மாறியிருக்கிறேன். இதைப் பார்த்து பாதிக்கப்பட்ட பெண்கள் தன்னம்பிக்கை அடைந்தால் போதும்” என்கிறார் அல்மா. “உள்ளத்தைத் தான் நான் பார்க்கிறேன். தாடியும் மீசையும் ஒரு குறையாகவே என்றைக்கும் தெரிந்ததில்லை. நோயை எதிர்த்துப் போராடுவதை விட்டுவிட்டுப் பிறர் என்ன நினைக்கிறார்களோ என்று வருத்தப்படுவது கொடுமையானது. அல்மா தாழ்வு மனப்பான்மையிலிருந்து மீண்டுவிட்டார். இனி எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்” என்கிறார் டெய்லர்.

இந்தப் புரிதலுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழட்டும்!

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் வசிக்கும் ஸ்டீவ் போல்ஸ்டன் வீட்டு மாடியில் திடீரென்று நாய் குலைக்கும் சத்தம் கேட்டுள்ளது. திருடன் வந்திருக்கிறான் என்று வீட்டிலிருந்தவர்கள் உஷாரானார்கள். ஜன்னல் வழியே பார்த்தபோது 9 அடி நீளமுள்ள மிகப் பெரிய முதலை ஒன்று வராண்டாவில் இருந்து நாயை ஆக்ரோஷமாக மிரட்டிக்கொண்டிருந்தது. “எங்களால் நம்பவே முடியவில்லை. மாடிக்கு வருவதற்கு வெளிப்பக்கமாக ஒரு வழி இருக்கிறது. 15 அடி உயரத்துக்கு இருக்கும் மாடிப்படிகளில் ஏறி, அலுமினியக் கதவை உடைத்துக்கொண்டு, வராண்டாவுக்குள் நுழைந்திருக்கிறது முதலை. இதைக் கொல்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால், விலங்குகள் மையத்தைத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னோம். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு வந்த அவர்கள் முதலையை பிடித்துச் சென்றனர். இதுபோல இன்னொரு முறை யாருக்கும் எங்கும் நடக்கக் கூடாது” என்கிறார் ஸ்டீவ் போல்ஸ்டன்.

மாடிக்கு வந்த விருந்தினர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x