Published : 22 Jan 2017 01:00 PM
Last Updated : 22 Jan 2017 01:00 PM

உலக மசாலா: போஸ்னியா குகை மனிதருக்கு விரைவில் வீடு கிடைக்கட்டும்...

போஸ்னியாவைச் சேர்ந்த 62 வயது ஜார்கோ ஹர்ஜிக், கடந்த 10 ஆண்டுகளாக ஜெனிகா நகருக்கு அருகே இருக்கும் ஒரு குகையில் வாழ்ந்து வருகிறார். திருமணத்துக்குப் பிறகு ஜெர்மனியில் குடியேறியவரின் திருமண வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வந்துவிட்டது. அதற்குப் பிறகு கிடைக்கும் வேலைகளைச் செய்துகொண்டிருந்தவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு போஸ்னியா திரும்பினார். ஆனால் ஜார்கோவின் வீடு போஸ்னியப் போரில் சிதைந்திருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார். அவரிடம் சேமிப்பும் இல்லை. அவருக்கு உதவக்கூடியவர்களும் யாருமே இல்லை. சிறிய மலையில் இருந்த குகைக்குள் தற்காலிகமாகத் தங்க முடிவுசெய்தார். கடந்த பத்து ஆண்டுகளாக அங்கேதான் வசித்துவருகிறார். குகைக்குக் கீழே பபினா நதி ஓடிக்கொண்டிருக்கிறது. “என்னுடைய ஓய்வூதியத்தை வைத்துக்கொண்டு, ஒரு வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாது. அதனால் இந்தக் குகைக்குள் 13 நாய்களுடன் தங்கிக்கொண்டேன். என் செலவைக் குறைத்துக்கொண்டு நாய்களுக்கு உணவுகளை வாங்கிப் போடுகிறேன். வெளியில் எப்படிப்பட்ட பருவநிலை நிலவினாலும் குகைக்குள் அற்புதமாக இருக்கும். குளிர்காலத்தில் வெளியே மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். ஆனால் குகைக்குள் அளவான குளிர் மட்டுமே இருக்கும். கதகதப்புக்கு நெருப்பைப் பற்ற வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. கடுமையான கோடை காலங்களிலும் குகை குளிர்ச்சியோடு காணப்படும். இந்தக் குகையில் ஒரே ஒரு ஆபத்து மட்டும் இருக்கிறது. நதியில் வெள்ளம் வந்தால் குகைக்குள்ளும் புகுந்துவிடும். அப்போது நானும் நாய்களும் பாதுகாப்பான இடம் தேடிச் செல்ல வேண்டும். அதற்காக உயரமான இடத்தில் ஒரு கூடாரத்தை அமைத்திருக்கிறேன். நீர் வடிந்தவுடன் குகைக்குத் திரும்பிவிடுவேன். நவீனக் குகை மனிதர் என்று என்னை அழைக்கும் மக்கள், இந்த வழியே செல்லும்போது தேவையற்ற உணவுப் பொருட்களைப் போடுவார்கள். அவற்றை நானும் நாய்களும் பகிர்ந்துகொள்வோம். இன்னும் மூன்று ஆண்டுகளில் எனக்கு போஸ்னியாவிலிருந்தும் ஓய்வூதியம் கிடைக்கும். இரட்டை ஓய்வூதியத்தை வைத்துக்கொண்டு, ஒரு சிறிய வீட்டுக்குக் குடிபுக முடியும். ஆரோக்கியமாக இருப்பதால் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருக்கிறேன்” என்கிறார் ஜார்கோ.

போஸ்னியா குகை மனிதருக்கு விரைவில் வீடு கிடைக்கட்டும்…

ஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்விலிருந்து பாம்பு கடித்து இறப்பவர்களை விட குதிரை தாக்கிக் கொல்லப்படுபவர்களே அதிகம் என்ற விஷயம் தெரியவந்திருக்கிறது. மெல்பர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ரோனெல் வெல்டன், 2000 முதல் 2013-ம் ஆண்டு வரை மருத்துவமனைகளில் பதிவான தகவல்களை ஆராய்ந்து இந்த முடிவை வெளியிட்டிருக்கிறார். 13 ஆண்டுகளில் குதிரைகளால் 74 மனிதர்கள் இறந்திருக்கிறார்கள். விஷப்பூச்சிகளால் 27 பேரும் பாம்புகளால் 27 பேரும் இறந்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் விஷப் பூச்சிகளாலும் பாம்புகளாலும் மனிதர்கள் அதிகமாக உயிரிழக்கிறார்கள் என்று வழக்கமாகச் சொல்லப்பட்டு வந்ததை, இந்த ஆய்வு முடிவுகள் மாற்றியமைத்திருக்கின்றன என்கிறார் ரோனெல் வெல்டன்.

குதிரைகளைவிட பாம்புகள் சாதுவானவை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x