Published : 07 Oct 2016 10:05 AM
Last Updated : 07 Oct 2016 10:05 AM

உலக மசாலா: போரை நிறுத்த முடியாது, பொம்மையாவது கொடுக்கிறேன்!

கடந்த 4 ஆண்டுகளாக சிரியாவின் அலெப்போ குழந்தை களுக்காகத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல், உதவி வருகிறார் ராமி ஆதம். சிரியாவில் பிறந்தவர், 1989-ம் ஆண்டு முதல் பின்லாந்தில் வசித்து வருகிறார். 2012-ம் ஆண்டு சிரியாவில் போர் ஆரம்பித்தபோது, அங்குள்ள குழந்தைகளுக்கு உதவி செய்யத் தொடங்கினார். உணவு, மருந்து, குடி தண்ணீர் போன்றவற்றைச் சேகரித்தார். அப்போது, ராமியின் மகள் தன்னுடைய பொம்மைகளை ஒரு பையில் போட்டு, கொடுத்துவிடச் சொன்னாள். ‘போர்ச் சூழலில் இருக்கும் குழந்தைகளுக்கு பொம்மைகளை விட உணவும் மருந்துகளும் முக்கியம் என்று நினைத்தேன்.

ஆனால் பொம்மைகளைக் கொடுத்தபோது, அவர்கள் அடைந்த ஆனந்தத்துக்கு உலகில் வேறு எதுவும் இணை இல்லை. கண் முன்னால் பெற்றோரை இழந்து, வீடுகளை இழந்து, ஆதரவற்று, உயிரைக் கையில் பிடித்தபடி வாழும் குழந்தைகள் பொம்மைகளைப் பார்த்துதான் தங்கள் குழந்தைத்தனத்தை மீட்டெடுத்தார்கள். பொம்மையின் முக்கியத்துவம் புரிந்தது’ என்கிறார் ராமி ஆதம். இதுவரை உலகின் மிக ஆபத்தான நகரமாகக் கருதப்படும் அலெப்போவுக்கு 28 முறை சென்று திரும்பியிருக்கிறார். ஒவ்வொரு தடவையும் 80 கிலோ எடையுள்ள 1000 பொம்மைகளை எடுத்துச் சென்றிருக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு, துருக்கி வழியாக சிரியாவுக்குச் செல்லும் பாதை மூடப்பட்டுவிட்டது. அதனால் 80 கிலோ பொம்மைகளை முதுகில் கட்டிக்கொண்டு, சட்டத்துக்குப் புறம்பாக, கால்நடையாகச் சென்று, பல்வேறு ஆபத்துகளை எதிர்கொண்டு, தன் சேவையைச் செய்து வருகிறார். அரசுப் படைகளும் ஆபத்தானவை; எதிர்ப்புப் படைகளும் ஆபத்தானவை. ஆனாலும் தன் சேவையை நிறுத்தப் போவதில்லை என்கிறார் ராமி ஆதம்.

மனிதாபிமான அடிப்படையில் சேவை செய்து வரும் ராமி ஆதமை, சிரியாவின் ஐஎஸ், ஷியா படைகளும் தேடி வருகின்றன. ‘சிரியக் குழந்தைகள் ஒவ்வொரு நொடியும் மரணத்தையும் பாதுகாப்பின்மையையும் எதிர்நோக்கி யுள்ளனர். அவர்களின் மனநிலைக்கு பொம்மைகள் அவசியம். அதற்காக நான் எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். என்னால் போரை நிறுத்த முடியாது. பொம்மைகளை யாவது கொடுக்கிறேன்’ என்கிறார் ராமி ஆதம். பொம்மைகளை நன்கொடையாகச் சேகரிக்கிறார். தற்போது துருக்கி எல்லையில், சிரிய குழந்தைகளுக்காகப் பள்ளி கட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

சிரியாவின் சாண்டா!

போர்ச்சுகலைச் சேர்ந்த மகள் பயத்தில் கண்களை மூடியபடி அமர்ந்திருக்கிறார். அவர் தலையைப் பிடித்து, எலக்ட்ரிக் ரேஸரைக் கொண்டு வேகமாக முடியை வெட்டித் தள்ளுகிறார் அவரது அம்மா. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளியில் புற்றுநோயால் முடியை இழந்த சக மாணவி ஒருவரை, மகள் கிண்டல் செய்திருக்கிறார் என்பதை அறிந்த அம்மா, கோபத்தில் மகளின் முடியை வெட்டியிருக்கிறார் என்ற விளக்கமும் வெளியாகியிருக்கிறது. பலர் அம்மாவின் செயலை ஆதரித்தும், சிலர் கண்டித்தும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

ஒரு தவறை இன்னொரு தவறால் திருத்த முடியுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x