Published : 19 Oct 2016 10:59 AM
Last Updated : 19 Oct 2016 10:59 AM

உலக மசாலா: போராட்டத்தால் கிடைத்த வெற்றி!

5 ஆண்டுகளுக்கு முன்பு மெக்ஸிகோவின் சீரன் நகரத்தை, சக்தி வாய்ந்த போதை மருந்து குழுக்கள் அச்சுறுத்திக்கொண்டிருந்தன. அவர்களுக்கு ஆதரவாக உள்ளூர் அரசியல்வாதிகளும் காவல்துறையும் செயல்பட்டன. இன்று, மெக்ஸிகோவின் தன்னிறைவு பெற்ற நகரமாக நம்பிக்கை அளித்துக் கொண்டிருக்கிறது சீரன்.

2011-ம் ஆண்டு, போதை மருந்து கும்பல்களின் உதவியோடு காட்டில் உள்ள மரங்கள் அழிக்கப்பட்டன. மக்கள் அரசாங்கத்தின் உதவியை நாடினர். ஆனால் அரசாங்கமோ கண்டுகொள்ளவில்லை. வேறு வழியின்றி, தங்கள் காடுகளையும் நீர் நிலைகளையும் தங்கள் எதிர்காலத்தையும் காப்பாற்றிக்கொள்ள, மக்களே போராட முடிவு செய்தனர்.

பெண்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் நடக்க வேண்டிய அவல நிலையை எடுத்துச் சொன்னார் மார்கரிடா எல்விரா ரொமேரோ. பெண்கள் அவருடன் சேர்ந்து போராடுவதற்கு வந்தனர். ஒருநாள் ரொமேரோவும் மற்ற பெண்களும் தயாராகக் காத்திருந்தனர். மரம் வெட்டுவதற்கு ஆட்கள் வந்தவுடன், தேவாலயத்தில் ஒரு பெண், மணி அடித்தார். இன்னொருவர் பட்டாசு வெடித்தார். விஷயம் சீரன் நகர் முழுவதும் பரவியது. பெண்கள் கையில் கிடைத்த கத்தி, கட்டை, கற்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு, மரம் வெட்டுபவர்களை நோக்கி ஓடி வந்தனர்.

உடனே அவர்கள் காவல் துறையையும் மேயரையும் அழைத்தனர். ஆனால் எதைக் கண்டும் பெண்கள் பின்வாங்கவில்லை. குற்றவாளிகள், அரசியல்வாதிகள், காவல் துறையினர் அனைவரையும் விரட்டியடித்தனர். தங்களுக்குள்ளே தலைவர்களைத் தேர்ந்தெடுத்தனர். நகரையும் காட்டையும் பாதுகாப்பதற்கு ஆண்களும் பெண்களும் சேர்ந்த குழுக்கள் அமைக்கப்பட்டன. நகரைச் சுற்றி ஆயுதங்களுடன் கூடிய சோதனைக் கூடங்கள் நிறுவப்பட்டன. மரம் வெட்டுபவர்களோ, போதை மருந்து கடத்துபவர்களோ உள்ளே நுழைய முடியவில்லை.

அரசாங்கத்தின் உதவியின்றி, தாங்களே 3 ஆயிரம் ஹெக்டேரில் மரங்களை நட்டு, வளர்த்து வருகின்றனர். இதன்மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. கடந்த ஆண்டில் மெக்ஸிகோவின் குற்றம் நிகழாத நகரமாக சீரன் உருவெடுத்தது. இங்கே கொலை, கொள்ளை, கடத்தல், போதைப் பொருள் என்று எந்தக் குற்றமும் பதிவாகவில்லை. இந்த வெற்றிக்கு காரணம் மக்களின் ஒற்றுமையும் உழைப்புதான் என்கிறார்கள்.

போராட்டத்தால் கிடைத்த வெற்றி!

சீனாவைச் சேர்ந்த குய்யாங், குகை வடிவில் ஓர் உணவு விடுதியை ஆரம்பித்தார். இங்கே வருபவர்கள் தாங்களாக விருப்பப்பட்ட தொகையைக் கொடுத்தால் போதும் என்று அறிவிப்பும் செய்தார்.

உணவகம் மிகவும் பிரபலமானது. மக்கள் கூட்டம் அலை மோதியது. ஆனால் குய்யாங்தான் மகிழ்ச்சியாக இல்லை. “மக்களிடம் நல்ல எண்ணங்கள் உருவாக வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டத்தை ஆரம்பித்தேன். சாப்பிட்டவர்களில் 10% மக்கள்தான் மிகச் சொற்பமான தொகை செலுத்தினார்கள். ஒரே வாரத்தில் 10 லட்சம் ரூபாய் நஷ்டம். என்னுடைய பங்குதாரர்கள் அதிருப்தியில் வெளியேறிவிட்டனர். இனி மற்றவர்களைப் போல கட்டணம் வசூலித்தால்தான் தொடர்ந்து நடத்த இயலும்” என்கிறார் குய்யாங்.

ஐயோ பாவம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x