Published : 10 Aug 2016 09:56 AM
Last Updated : 10 Aug 2016 09:56 AM

உலக மசாலா: போகிமான் படையெடுப்பு!

பெல்ஜியத்தில் உள்ள சிறிய கிராமம் லிலோ. இங்கே 35 குடும்பங்கள் வசிக்கின்றன. மிக மிக அமைதியான, அதிகம் பிரபலமாகாத இடம். போகிமான் கோ அறிமுகமானதில் இருந்து இந்த கிராமத்தின் 7 தெருக்களும் மிகவும் பரபரப்பாக இருக்கின்றன. ஒருபக்கம் போகிமான் பயிற்சி கொடுப்பதற்காக பயிற்சியாளர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் போகிமான் விளையாடுபவர்கள் நிறைந்திருக்கிறார்கள். அதனால் இரவு, பகல் எந்த நேரமும் தெருக்களில் கூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது.

“போகிமான் கோ விளையாடுவதற்கு எங்கள் கிராமம் வசதியாக இருக்கிறது. அதனால் கிராமத்தை நோக்கி ஏராளமானவர்கள் படையெடுக்கிறார்கள். முன்பெல்லாம் வருமானமே இருக்காது. இப்பொழுது என் கடையில் வியாபாரம் அபாரமாக இருக்கிறது” என்கிறார் கடைக்காரர் மர்லீன் டி டேன்.

ம்… உலகமே போகிமான் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது!

சீனாவின் யுலின் நகரில் 2 ஓட்டுநர்கள் வித்தியாசமான முறையில் லைசென்ஸ் பிளேட்டை மறைத்துக்கொண்டு சென்றதை, போக்குவரத்து கேமராக்கள் காட்டிக் கொடுத்துவிட்டன. டிரைவர் ஒருவர் மெதுவாக வாகனத்தை ஓட்டுகிறார், வாகனத்தின் முன்பகுதியில் லைசென்ஸ் பிளேட்டை மறைத்துக்கொண்டு ஒருவர் உட்கார்ந்தபடி பயணிக்கிறார். எதிரில் வரும் மனிதர்களுக்கோ, கேமராக்களுக்கோ நம்பர் பிளேட் தெரியவே இல்லை. குறிப்பிட்ட தூரம் தாண்டிய பிறகு, டிரக்கில் ஏறிக்கொண்டு அந்த மனிதர் சென்றுவிட்டார். இந்த இரு ஓட்டுநர்களையும் போக்குவரத்துக் காவலர்கள் பிடித்துவிட்டனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. உயிரைக் கையில் பிடித்தபடி, ஆபத்தான நிலையில் நம்பர் பிளேட்டை மறைத்துக்கொண்டு பயணம் செய்த படங்கள் இணையத்தில் வெளியாகி, பரபரப்பாகிவிட்டன.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிக்கும் பால் டோனோவன் (69), கல்லறையைச் சேதப்படுத்திய குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டிருக்கிறார். “2014-ம் ஆண்டு மார்ச் மாதம் என் அப்பாவின் கல்லறை மீது, ஆரஞ்சு வண்ணத்தில் ஜான் என்று எழுதப்பட்டிருந்தது. அப்பொழுதே புகார் கொடுத்தேன். கல்லறையைச் சுத்தம் செய்தேன். மீண்டும் ஏப்ரல் மாதம் அதே வண்ணத்தில் பெயர் எழுதப்பட்டிருந்தது. டிசம்பர் மாதம் கல்லறை முழுவதும் கறுப்பு பெயிண்ட் கொட்டப்பட்டிருந்தது. என்னால் தாங்கவே முடியவில்லை. மீண்டும் காவல் துறையில் புகார் செய்தேன். கல்லறைக்கு அருகில் கேமராவை வைத்து குற்றவாளியைப் பிடித்து விட்டனர்” என்கிறார் மாத்யுவின் மகள். காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, “நானும் மாத்யுவும் நண்பர்கள். 56 ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டில் இருந்து 20 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றுவிட்டான் மாத்யு. இதனால் அவன் மீது எனக்கு கடும் கோபம் வந்தது. அவனைத் தேடி வந்தபோது இறந்து 2 ஆண்டுகளாகிவிட்டதாகச் சொன்னார்கள். ஆனால் எனக்குள் இருந்த கோபம் மட்டும் குறையவே இல்லை. அதனால்தான் அவன் கல்லறையைச் சேதப்படுத்தினேன்” என்றார் டோனோவன். வழக்கை விசாரித்த நீதிபதி, 2 ஆண்டுகள் காவல் துறையின் கண்காணிப்பில் டோனோவன் இருக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார்.

காலம் காயத்தை ஆற்றும் என்பது உண்மை இல்லையோ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x