Published : 18 Jun 2017 10:06 AM
Last Updated : 18 Jun 2017 10:06 AM

உலக மசாலா: பொறுப்பான ஆண் சிங்கம்

இங்கிலாந்தில் உள்ள பிளாக்பூல் உயிரினப் பூங்காவில் வசித்து வரும் வாலஸ், ஆண் சிங்கத்தைப் பற்றிய கருத்துகளை மாற்றியமைத்திருக்கிறது! ரேச்சலும் வாலஸும் குடும்பம் நடத்தி 2015-ம் ஆண்டு காரி என்ற ஆண் குட்டியைப் பெற்றெடுத்தன. 9 மாதங்களில் ரேச்சல் இறந்து போனது. பொதுவாக ஆண் சிங்கங்கள் இனப் பெருக்கம் செய்வதோடு கடமையை முடித்துக்கொள்கின்றன.

பெண் சிங்கம்தான் குட்டிகளை வளர்த்து, வேட்டையாடக் கற்றுக் கொடுத்து, பராமரிக்கும். பெண் சிங்கம் இல்லாதபோது கழுதைப் புலி, போட்டி ஆண் சிங்கங்கள் குட்டியைத் தொந்தரவு செய்தால் விரட்டும் பணியை மட்டும் ஆண் சிங்கம் மேற்கொள்ளும். மற்றபடி குழந்தை வளர்ப்பில் ஆண் சிங்கங்கள் பங்களிப்பைச் செலுத்துவதில்லை. காரியைத் தவிர வேறு குட்டிகளோ, பெண் சிங்கங்களோ இல்லாத காரணத்தால் வாலஸிடம் குட்டியை விட்டது பூங்கா நிர்வாகம்.

கண் முன்னே மனைவி இறந்த சோகத்தில் இருந்த வாலஸ், சில நாட்களிலேயே காரியை அன்புடன் கவனிக்க ஆரம்பித்தது. தனக்கு அளிக்கும் உணவைக் கொடுத்து சாப்பிட வைத்தது. காரியுடன் சேர்ந்து விளையாடியது. தாயின் பிரிவு தெரியாமல் பார்த்துக்கொண்டது. அதனால் காரியும் அம்மாவை மறந்து அப்பாவுடன் நெருக்கமானது. வாலஸ் செல்லும் இடங்களுக்கெல்லாம் காரியும் சென்றது. அப்பா கர்ஜிப்பதைப் பார்த்து, வெகு விரைவிலேயே மகனும் கர்ஜிக்கத் தொடங்கியது. வேட்டையாடும் வித்தையைக் கற்றுக்கொண்டது. “பொதுவாக ஆண் சிங்கங்கள் குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில்லை.

வாலஸைப் பார்த்து எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆண் சிங்கங்களுக்குப் பொறுமையோ, சகிப்புத்தன்மையோ இருப்பதில்லை. ஆனால் காரி என்ன செய்தாலும் சிறிதும் எரிச்சலடையாமல் வாலஸ் பொறுமை காக்கிறது. அம்மாவைப் போல அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறது. அப்பாவும் மகனும் ஒன்றாக நடந்து செல்வதையும் ஒரு பாறை மீது அமர்ந்திருப்பதையும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். காரி பெரிய துண்டு இறைச்சியை எடுத்துக்கொண்டாலும் அமைதி காக்கும். மகன் சாப்பிட்ட பிறகு மிச்சமிருப்பதைச் சாப்பிட்டுக்கொள்ளும். காரியின் ஹீரோ வாலஸ்தான்!” என்கிறார் உயிரினப் பூங்காவின் அதிகாரி ஆடம்.

ஆண் சிங்கத்துக்கு தந்தையர் தின வாழ்த்துகள்!



3 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் டெக்சாஸ் வீதியில் நின்றுகொண்டிருந்தார் விக்டர் ஹப்பார்ட். சற்று மனநலம் பாதிக்கப்பட்டவரை அவரது அம்மா வீதியில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். நாள் முழுவதும் அம்மாவுக்காகக் காத்திருந்தார் விக்டர். “நான் நான்கு முறை இந்த வழியே சென்றபோதும் விக்டர் அதே இடத்தில் யாரையோ எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

விசாரித்தபோது அவரது குடும்பத்தினர் கைவிட்ட விஷயம் தெரிந்தது. அவரை அழைத்து வந்து, மருத்துவம் பார்த்தேன். அவரது வேலைகளை அவரே பார்த்துக்கொள்ளக் கற்றுக் கொடுத்தேன். சிலர் விக்டருக்காக நன்கொடைகள் அளித்தனர். அவருக்கு ஆசிரியர் மூலம் கல்வி கற்றுக் கொடுத்தேன். நான் சமையல் கலைஞர் என்பதால் என்னுடன் சேர்ந்து சமையலும் கற்றுக்கொண்டார்.

என் நிறுவனத்தில் தற்போது சமையல் வேலையும் செய்கிறார். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். விக்டரைப் பற்றி சமூக வலைதளங்களில் தகவல் தெரிவித்தேன். அவரது குடும்பத்தினர் விக்டரைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர். அவர்களோடு செல்ல விக்டர் மறுத்துவிட்டார்” என்கிறார் ஸ்ப்ரோஸ்.

உயர்ந்த உள்ளம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x