Published : 28 Feb 2016 11:06 AM
Last Updated : 28 Feb 2016 11:06 AM

உலக மசாலா: பொம்மை வேட்டைக்காரர்

சீனாவைச் சேர்ந்த சென் ஸிடோங் தன்னிடம் ஒளிந்திருந்த வித்தியாசமான திறமையைக் கடந்த ஆண்டுதான் கண்டுபிடித்தார். கட்டணம் செலுத்திவிட்டு, கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பொம்மைகளைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் இயந்திரக் கைகளால் எடுக்க வேண்டும். அப்படி எடுக்கப்படும் பொம்மைகள் எடுத்தவருக்கே வழங்கப்படும். பெரும்பாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் யாராலும் பொம்மைகளை எடுத்துவிட முடிவதில்லை. ஆனால் கடந்த 6 மாதங்களில் இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருந்து 3000 பொம்மைகளை எடுத்திருக்கிறார் சென்!

ஜியாங்ஹு ஷாப்பிங் மாலில் இருப்பவர்கள் இவரை, ‘பொம்மை இயந்திரத்தின் கடவுள்’ என்று அழைக்கிறார்கள்! ஆனால் பொம்மை இயந்திரத்தின் உரிமையாளர்களோ, சென்னை எப்படியாவது விளையாட விடாமல் தடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ’’சூப்பர்மார்க்கெட் வாயிலில் இந்தப் பொம்மை விளையாட்டு இருந்ததைக் கண்டேன். பொழுதுபோக்காக விளையாடிப் பார்த்தேன். என்னால் முதலில் பொம்மைகளை எடுக்கவே முடியவில்லை. பொறுமையாக யோசித்தேன். அதன் பிறகு நான் கை வைக்கும்போதெல்லாம் பொம்மைகள் கிடைக்க ஆரம்பித்தன. எனக்கே ஆச்சரியமாகிவிட்டது.

ஒருதடவை அங்கே சென்றால் 100 பொம்மைகளாவது எடுத்துக்கொண்டுதான் திரும்புவேன். கொஞ்சம் கவனமும் புரிந்துணர்வும் இருந்தால் போதும், பொம்மைகளை அள்ளிவிடலாம். இயந்திரக் கை மிக மோசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதை வைத்து பொம்மைகளைப் பிடிப்பது கடினம். ஒரு பொம்மையின் விலை 100 ரூபாய். நான் 50 ரூபாய் கொடுத்து விளையாடுகிறேன். கை நிறைய பொம்மைகளுடன் திரும்பி வருகிறேன். நண்பன் ஒருவன் பொம்மைகளைப் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டுவிட்டான்.

பொம்மை இயந்திர உரிமையாளர்கள் கதறப் போகிறார்கள்… ஏனென்றால் என் சேகரிப்பில் இருந்து பத்தில் ஒரு பங்குதான் புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது!’’ என்கிறார் சென்.

பொம்மை வேட்டைக்காரர்… கதறும் உரிமையாளர்…



அமெரிக்காவில் வசிக்கிறார் 7 வயது லெக்ஸி மெல்டன். இவர் பிறக்கும்போதே கீழ்த்தாடை இன்றி பிறந்திருக்கிறார். உலகிலேயே மிக அரிதான auriculo-condylar குறைபாடு இது. கீழ்த்தாடை இல்லாததால் லெக்ஸியால் மூச்சுவிடுவதோ, பேசுவதோ, சாப்பிடுவதோ முடியாத காரியம். மூச்சு விடுவதற்கும் சாப்பிடுவதற்கும் ஒரு குழாய் பொருத்தப்பட்டிருந்தது.

செயற்கையாகத் தாடையை உருவாக்குவதற்காக இதுவரை 11 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கின்றன. இன்னும் 3 அறுவை சிகிச்சைகளாவது செய்தால்தான் ஓரளவு தாடை முழுமையடையும் என்கிறார்கள் மருத்துவர்கள். ’’ஒரு குழந்தை இத்தனைப் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருப்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. ஆனால் லெக்ஸி மிகவும் உறுதியானவளாக இருக்கிறாள். மிகுந்த ஒத்துழைப்பு அளிக்கிறாள். லெக்ஸி எங்களுக்குக் கிடைத்த பரிசு! உலகிலேயே 24 பேர் இந்தப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களில் என் மகளும் ஒருத்தி’’ என்கிறார் லெக்ஸியின் அம்மா.

ஐயோ… என்ன கொடுமை இது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x