Published : 27 Jun 2017 09:48 AM
Last Updated : 27 Jun 2017 09:48 AM

உலக மசாலா: பொம்மைகளுக்கு வீடு கட்டியவர்!

ஹலோ கிட்டி இளம் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட பொம்மை. ஆனால் ஜப்பானைச் சேர்ந்த 67 வயது மாசோ குன்ஜி, கடந்த 30 ஆண்டுகளாக இந்தப் பொம்மைகளைச் சேகரித்து வருகிறார். உலகிலேயே அதிக அளவில் ஹலோ கிட்டி பொம்மைகளைச் சேகரித்ததற்காக சமீபத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார். மாசோ ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி. “முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா சென்ற இடத்தில் ஹலோ கிட்டியைப் பார்த்தேன். சட்டென்று என்னைக் கவர்ந்துவிட்டது. ஒரு பொம்மையை வாங்கி வீட்டில் வைத்தேன். நான் கடினமான பணியைச் செய்வதால் மன அழுத்தத்தோடு வீட்டுக்கு வருவேன். ஆனால் கிட்டியின் சிரிப்பைக் கண்டதும் என் மனம் லேசாகிவிடும். கிட்டி மீது கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் அதிகரித்தது. எங்கே கிட்டியைப் பார்த்தாலும் வாங்கிக்கொண்டு வந்துவிடுவேன். டிபார்ட்மென்ட் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட், தெருவோரக்கடைகள் என்று எதையும் விடுவதில்லை. ஒருகட்டத்தில் வீட்டில் இடமில்லை. அதனால் ஹலோ கிட்டி ஹவுஸ் என்ற பெயரில் ஒரு வீட்டை உருவாக்கினேன். இந்த வீட்டின் சுவரில் கூட கிட்டி உருவம் கொண்ட காகிதங்களைத்தான் ஒட்டி வைத்திருக்கிறேன். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இதைப் பார்த்துவிட்டு, அவர்களும் கிட்டியை வாங்கிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். தற்போது 10 ஆயிரம் கிட்டி பொம்மைகள் என்னிடம் இருக்கின்றன. 4,519 பொம்மைகள்தான் முந்தைய கின்னஸ் சாதனை என்பதால், கின்னஸுக்கு 5,250 பொம்மைகளை மட்டும் எடுத்துச் சென்றேன். 8 மணி நேரம் கின்னஸ் அதிகாரிகள் எண்ணினார்கள். 81 பொம்மைகளை ஏற்க மறுத்துவிட்டார்கள். 5,169 பொம்மைகளுடன் கின்னஸ் சாதனை பட்டத்தைக் கொடுத்துவிட்டனர். என் மனைவிக்கு இதில் ஆர்வம் இல்லாவிட்டாலும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்” என்கிறார் மாசோ.

பொம்மைகளுக்கு வீடு கட்டியவர்!

மெக்சிகோவில் ஐஸ் க்ரீம் சாண்ட்விச் வேகமாகப் பரவி வருகிறது. வேஃபருக்குள்ளோ, பிஸ்கட்களுக்குள்ளோ வைத்து இந்த ஐஸ் க்ரீம் சாண்ட்விச்சை உருவாக்குவதில்லை. மிகப் பெரிய பன்னைப் பாதியாக வெட்டி, அதற்குள் விதவிதமான ஐஸ் க்ரீம்களையும் ஒரு ஸ்பூனையும் வைத்து மூடிக் கொடுத்துவிடுகிறார்கள். இதை யார் கண்டுபிடித்தது என்று தெரியவில்லை. 60 ஆண்டுகளுக்கு முன்பே சாண்ட்விச் ஐஸ் க்ரீம் உருவாகிவிட்டது. ஆனால் சமீபத்தில்தான் மக்கள் இதைச் சுவைக்க அதிக ஆர்வம்காட்டி வருகிறார்கள். “பெரியவர்களும் சிறியவர்களும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். நாம் கேட்கும் சுவைகளில் ஐஸ் க்ரீம்களை வைத்துக் கொடுப்பார்கள். முழுமையாக உருகி, பன் ஈரமாவதற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். சிலர் உப்பு தூவியும் ஐஸ் க்ரீம்களை வழங்குகிறார்கள். மெக்சிகோவில் மட்டும்தான் சாண்ட்விச் ஐஸ் க்ரீம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. பிலிப்பைன்ஸ், வியட்நாமில் பிரெட் துண்டுகளுக்குள் ஐஸ் க்ரீம் வைத்து விற்பனை செய்கிறார்கள்” என்கிறார் மேரி ஆன்.

மக்களை ஈர்க்கும் சாண்ட்விச் ஐஸ் க்ரீம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x