Published : 24 Oct 2015 10:03 AM
Last Updated : 24 Oct 2015 10:03 AM

உலக மசாலா: பொம்மைகளாக மாறிய தம்பதி!

பிரான்ஸை சேர்ந்த ஒரு தம்பதி தங்களை கென், பார்பி பொம்மைகளைப் போல மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். 15 அறுவை சிகிச்சைகள் செய்து, உயிருடன் நடமாடும் கென், பார்பியாக வலம் வருகிறார்கள். தங்களுடைய பெயர்களையும் சட்டப்படி கென், பார்பி என்று மாற்றிவிட்டார்கள். 20 வயது அனஸ்டாசியா ரென்ஸோஸும் 23 வயது க்வெண்டின் டெஹாரும் 2013-ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தனர். இருவருக்குமே பொம்மைகளைப் போன்று தங்கள் உருவத்தை மாற்றிக்கொள்வதில் ஆர்வம் இருந்தது. ‘‘நான் பிறந்தது ரஷ்யாவில், வளர்ந்தது பிரான்ஸில். என்னிடம் 100 பார்பி பொம்மைகள் இருக்கின்றன. நான் ஒரு கென் பொம்மையைப் போலிருப்பவரைத்தான் திருமணம் செய்ய நினைத்திருந்தேன்.

க்வெண்டின் டெஹார் அப்படியே இருந்தார். அவரும் ஒரு நிஜ பார்பியைத்தான் திருமணம் செய்ய நினைத்திருந்தார். இருவரின் விருப்பங்களும் ஒத்துப் போனதால் திருமணம் செய்துகொண்டோம். நாங்கள் இருவருமே குழந்தையில் இருந்தே பொம்மைகளை விரும்பியிருக்கிறோம். பொம்மைகள் பயன்படுத்தும் ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்திருக்கிறோம். 17 வயதில் முதல் அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்தேன். ஒவ்வொரு உறுப்பாகச் சரி செய்து, மூன்று ஆண்டுகளில் நிஜ பார்பியாக மாறிவிட்டேன். இதுவரை 65 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறோம். அவரவர் உருவத்தை அழகாக மாற்றிக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. நாங்கள் மிக சந்தோஷமாக இருக்கிறோம்’’ என்கிறார் அனஸ்டாசியா.

இவ்வளவு மெனக்கெட்டு பொம்மைகளாக வலம் வர வேண்டுமா?

ஸ்பெயினில் இருக்கும் லா எஸ்ட்ரெல்லா கிராமத்தில் கடந்த 45 வருடங்களாக மார்ட்டினும் சின்ஃபோரோசா கொலோமெரும் தனியாக வசித்து வருகிறார்கள். இவர்களுடன் 3 நாய்கள், 4 கோழிகள், 1 சேவல், 25 பூனைகள் மற்றும் தேனீக்கள் வசித்து வருகின்றன. ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்றால் 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நகரத்துக்குத்தான் செல்ல வேண்டும். ஒருகாலத்தில் இந்தக் கிராமத்தில் நிறைய மனிதர்கள் வசித்தனர். தேவாலயம், பள்ளிகள், மருத்துவமனை போன்றவையும் இருந்தன. 1883-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான புயலில் 17 வீடுகள் இடிந்து போய்விட்டன. ஏராளமானவர்கள் இறந்து போனார்கள். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கிராமத்தில் உயிர் பிழைத்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகரங்களை நோக்கிச் சென்றுவிட்டனர். ‘‘எங்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். 12 வயதில் இறந்து போனாள்.

இங்கே ஒரு மருத்துவமனை இருந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். என் மகள் வாழ்ந்த இந்த இடத்தை விட்டு, இனி எக்காரணத்தைக் கொண்டும் வேறு இடங்களுக்குச் செல்வதில்லை என்று முடிவு செய்தோம். 45 ஆண்டுகளாக இருவர் மட்டுமே கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகிறோம். தொலைபேசி, மின்சாரம், தண்ணீர் என எந்த வசதிகளும் இங்கே இல்லை. ஏதாவது அவசரம் என்றால் அருகில் இருக்கும் நகரத்துக்குச் சென்று வருவோம். யாருமற்ற கிராமம் என்று செய்தி வெளியே பரவுவதால், விடுமுறை நாட்களில் யாராவது இந்தக் கிராமத்துக்கு வந்து செல்கிறார்கள். எங்களுக்குப் பிறகு மனிதர்கள் அற்ற பிரதேசமாக மாறிவிடும் இந்தக் கிராமம்’’ என்கிறார் மார்ட்டின்.

வாழ்ந்து கெட்ட கிராமம்…

மாட்டு இறைச்சியால் செய்யப்பட்ட பர்கருக்காக ஓர் இசைக்குழு ஜப்பானில் இயங்கி வருகிறது. இந்த இசைக்குழுவில் பெண்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றனர். இளம் பெண்கள் புன்னகை செய்தபடி வண்ண ஆடைகள் அணிந்து, ஆடிப் பாடுகிறார்கள். பாடலும் ஆடலும் பர்கர் தொடர்புடையதாகவே இருக்கின்றன. பர்கரில் பயன்படுத்தப்படும் மாட்டு இறைச்சி, முட்டை, தக்காளி, மீன், கோழி, வெங்காயம், காளான், பன்றி இறைச்சி, அன்னாசி போன்ற பொருள்களை ஒவ்வொரு பெண்ணும் தலையில் ஒரு பொம்மையாக அணிந்திருக்கிறார்.

இசைக்குழுவில் 15 பெண்கள் இருக்கிறார்கள். பாடல், ஆடலுடன் பர்கர் விற்பனையும் ஜோராக நடைபெறுகிறது. இசைக்குழுவின் தயாரிப்பாளர் ஷிண்டாரோ யாபு, ‘‘உலகிலேயே பர்கருக்காகச் செயல்படும் இசைக்குழு இதுதான். 2013-ம் ஆண்டு இந்த இசைக்குழுவை ஆரம்பித்தோம். 3 பேர் மட்டுமே அப்பொழுது இசைக்குழுவில் இருந்தனர். இரண்டே வருடங்களில் மிகப் பெரிய அளவுக்கு இசைக்குழு வளர்ந்துவிட்டது’’ என்கிறார்.

வியாபாரத்தில் புதிய யுத்தி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x