Published : 19 Sep 2015 08:29 AM
Last Updated : 19 Sep 2015 08:29 AM

உலக மசாலா: பேஸ்ட்டை மறந்த விண்வெளிப்பெண்!

விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் ரஷ்யாவின் வாலண்டீனா தெரெஷ்கோவா. 1963-ம் ஆண்டு விண்வெளிக்குச் சென்று 3 நாட்கள் தங்கியிருந்து, வெற்றிகரமாகத் திரும்பியவர். லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் விண்வெளிக் காட்சிக் கூடத்தைத் அவர் திறந்து வைத்தார். ‘‘சாதாரண பெண்ணான எனக்கு விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. விண்வெளிக்குச் செல்வது என்று முடிவான பிறகு நான் கேட்காமலே எல்லாம் என்னைத் தேடி வந்தன. பூமியில் இருந்து கிளம்பி, 144 மைல்கள் பயணித்த பிறகுதான் பல் துலக்கும் பேஸ்ட் எடுத்துவரவில்லை என்று நினைவுக்கு வந்தது.

அன்றைய ரஷ்ய அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ள முடியுமே தவிர, அவற்றை வெளியே சொல்ல அனுமதி இல்லை. 30 ஆண்டுகள் வரை இந்த ரகசியத்தை நான் பாதுகாத்து வந்தேன். தற்போதுதான் வெளியுலகத்துக்குச் சொல்லியிருக்கிறேன்’’ என்றார் வாலண்டீனா. அருங்காட்சியகத்தின் இயக்குனர், ‘‘இருபதாம் நூற்றாண்டில் ரஷ்யர்கள் நிகழ்த்திய விண்வெளி ஆராய்ச்சிகள் மிக மிக முக்கியமானவை. அவர்களின் பங்களிப்பையும் சாதனைகளையும் கெளரவிக்கும் விதத்தில் இந்தக் கண்காட்சியை உருவாக்கியிருக்கிறோம்’’ என்றார்.

அட, இதுக்காகவெல்லாம் ரஷ்யாவின் சாதனை குறைந்துவிடாது...

ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரமான எல்ப்ரஸின் உச்சிக்குச் சென்று பலரும் சாதனை செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் ரஷ்யாவின் ஆண்ட்ரே ரோடிசேவ்க்கு இணையாக மாட்டார்கள். பளூ தூக்கும் வீரரான ரோடிசேவ், 75 கிலோ எடையைத் தூக்கிக்கொண்டு மலை ஏறி சாதனை படைத்திருக்கிறார். மலையேற்றத்தையும் எடை தூக்குதலையும் சேர்த்துப் புதிய விளையாட்டை உருவாக்கியிருக்கிறார். தினமும் காலை, மாலை பயிற்சிகளை மேற்கொண்டார். ஜிம்மில் உடற்பயிற்சிகளைச் செய்தார்.

இந்தச் சாதனைக்காகத் தன்னுடையை உடல் எடையில் 20 கிலோவை இழந்திருக்கிறார். பொதுவாக 26 முதல் 30 கிலோ எடையைச் சுமந்துகொண்டு வீரர்கள் பயணிப்பர். அதுவும் அடிவாரத்தை அடைந்த உடன் பெரும்பாலான எடையை விட்டுவிட்டு, மலை ஏறுவார்கள். ரோடிசேவ் சாதனை சாதாரணமானதல்ல என்கிறார்கள் மலையேற்ற வீரர்கள். ரோடிசேவ் மலை ஏறும்போது மோசமான வானிலை நிலவியது. எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு 8 நாட்களில் மலை உச்சியை அடைந்துவிட்டார். இவரது மலையேற்றம் முழுவதும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஆவணப் படமாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

இரட்டைச் சாதனைக்குரியவர்!

டென்னிசி மாநிலத்தில் வசித்து வருகிறார் 87 வயது ஹெலன் வான் வின்கிள். விதவிதமான ஆடைகளை அணிந்து, புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். இவரை 15 லட்சம் மக்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள். ‘‘என் சிந்தனை முதுமையடையாத போது, நான் ஏன் முதியவர்களின் ஆடைகளை அணியவேண்டும்? பல ஆண்டுகளுக்கு முன்பு என் கணவரையும் மகனையும் இழந்துவிட்டேன். கடவுளிடம் சண்டை போட்டு, அழாத நாள் இல்லை. இந்தத் துன்பத்தில் இருந்து மீள வேண்டும் என்று தோன்றியது. என் கொள்ளுப் பேத்தியின் ஆடையை எடுத்து அணிந்து பார்த்தேன். எனக்கு நன்றாகப் பொருந்திப் போனது.

உடனே என் தலைமுடிக்கு டை அடித்தேன். மேக்-அப் போட்டுக்கொண்டேன். எனக்கே என்னை மிகவும் பிடித்துப் போனது. அதுவரை இல்லாத தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் என் மனத்தில் குடிவந்தன. என்னைப் பார்த்த பேத்தி, மிக அழகாக இருக்கிறேன் என்று கூறி, புகைப்படங்கள் எடுத்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டாள்.

ஒரு பாட்டியைப் போய் யார் ரசிப்பார்கள் என்று நினைத்திருந்த எனக்கு, மிகப் பெரிய ரசிகர்கள் கிடைத்தனர். விதவிதமாக உடைகள் அணிவதையும் புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவதையும் வாடிக்கையாக்கினேன். இன்று இணையப் பிரபலமாக மாறிவிட்டேன். வாழும் வரை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்’’ என்கிறார். இந்த ஆண்டு 2 ஃபேஷன் ஷோக்களிலும் பங்கேற்று திரும்பிவிட்டார் ஹெலன்.

அமெரிக்காவின் அசத்தல் பாட்டி!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x