Published : 30 Aug 2016 09:32 AM
Last Updated : 30 Aug 2016 09:32 AM

உலக மசாலா: பேஷனான உப்பு உடை!

இஸ்ரேலைச் சேர்ந்த சிகாலிட் லாடாவ் என்ற கலைஞர் ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கினார். 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நீண்ட அங்கியை, சாக்கடலில் 3 மாதங்கள் வைத்திருந்தார். உலகிலேயே உயிர்கள் வசிக்காத உப்பு ஏரி சாக்கடல். நீண்ட கம்புகளில் அங்கியைக் கட்டி, சாக்கடலுக்குள் வைத்து விட்டார். வாரம் ஒருமுறை துணியை எடுத்து, படங்கள் எடுத்துக்கொண்டார். கருப்புத் துணி, மூன்றே மாதங்களில் பளிங்குத் துணியாக மாறிவிட்டது! சாக்கடலில் இருக்கும் அதிகப்படியான உப்புதான், துணியை இப்படி மாற்றியிருக்கிறது.

இனிமேல் உப்பு உடையும் பேஷனாகிவிடும்!

அமெரிக்காவில் வசிக்கும் 42 வயது பாட்ரிக் ஹார்டிசன், தீயணைப்பு வீரராகப் பணியாற்றியவர். 2001-ம் ஆண்டு தீப்பிடித்த ஒரு வீட்டை அணைக்கச் சென்றார். உள்ளே ஒரு பெண் மாட்டிக்கொண்டதைக் கண்ட பாட்ரிக், முகமூடி அணிந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டின் மேற்கூரை உருகி, பாட்ரிக் மீது விழுந்துவிட்டது. ஒரு நொடி நிலை குலைந்து போனவர், வேகமாக வெளியே ஓடி வந்து முகமூடியைக் கழற்றி எரிந்தார். கண்களைத் திறக்கவே இல்லை. சற்று தூரம் ஓடிச் சென்று மூச்சுவிட்டார்.

2 மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். புத்திசாலித்தனமாகக் கண்களை மூடியிருந்ததால் பாதிப் பார்வையைக் காப்பாற்ற முடிந்துள்ளது. சற்றுத் தள்ளி வந்து மூச்சு விட்டதால் நுரையீரலையும் காப்பாற்ற முடிந்துள்ளது. மற்றபடி உதடுகள், காதுகள், மூக்கு என்று அத்தனையையும் இழந்துவிட்டார். மனைவியும் குழந்தைகளும் பாட்ரிக்கைப் பார்க்கப் பயந்தனர். 7 ஆண்டுகளில் 71 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார்! ‘’இறந்து போவதைவிட உயிருடன் இருப்பது மிகக் கொடுமையாக இருந்தது. நான் எங்கும் வெளியில் செல்வதே இல்லை. என் மனைவியும் என்னைவிட்டுப் பிரிந்து சென்றார். வீட்டையும் இழந்து, திவாலாகிப் போனேன். கடினமான காலகட்டம்.

என் பேட்டி பிரபல பத்திரிகையில் வெளிவந்தது. மேரிலாண்ட் மெடிக்கல் சென்டரைச் சேர்ந்த மருத்துவர் ரோட்ரிகுஸ், என் முக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவுவதாகச் சொன்னார். 2014-ம் ஆண்டு சிகிச்சைக்காகப் பதிவு செய்தேன். எனக்கு ஏற்ற தோல், முடி, ரத்தம் உள்ள ஒரு உடலுக்காகக் காத்திருந்தேன். விபத்தில் பலியான டேவிட் தோல் எனக்குப் பொருந்தியது. கடந்த ஆண்டு 100 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சேர்ந்து 26 மணி நேரம் எனக்கு முக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். 50% மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பு என்று கூறியிருந்தனர். ஆனால் நான் முழுமையாக நம்பிக்கை வைத்தேன். இதோ 12 மாதங்களுக்குப் பிறகு என் முகத் திசுக்கள் புதிய தோலை ஏற்றுக்கொண்டன.

சிகிச்சை வெற்றி பெற்றுவிட்டது. என்னுடைய பழைய முகம் போல இல்லைதான். ஆனால் ஒரு மனித முகம் எனக்குக் கிடைத்துவிட்டது. நீண்ட காலங்களுக்குப் பிறகு நான் எல்லோரையும் போல வெளியே சென்று வருகிறேன். இழந்த வாழ்க்கையை மீண்டும் பெற்றுவிட்டேன்!’’ என்கிறார் பாட்ரிக். இவர் வேலை செய்த தீயணைப்பு நிறுவனம், பாட்ரிக்கின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செய்யும் விதத்தில் ஒரு பலகை வைத்திருக்கிறது.

புதிய முகத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறது நவீன மருத்துவம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x