Published : 22 Dec 2016 09:47 AM
Last Updated : 22 Dec 2016 09:47 AM

உலக மசாலா: பெரியவர்கள் பிரச்சினைகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள்!

வல்லுநர்களைச் சந்தித்து உணர்ச்சிபூர்வமான ஆலோசனைகளைப் பெற நேரமோ, பணமோ இல்லாதவர்கள், 11 வயது சிறுவனிடம் ஆலோசனைகளைக் கேட்கிறார்கள்! நியுயார்க் சப்வே ஸ்டேஷனில் அமர்ந்து, ஆலோசனைகளை அளித்துவருகிறான் சிரோ ஆர்டிஸ். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 2 மணி நேரம் ஆலோசனைகளை வழங்குவதற்காகச் செலவிடுகிறான். ஒவ்வொருவருக்கும் 5 நிமிடங்கள், 136 ரூபாய் கட்டணம். சிறுவனிடம் ஆலோசனை கேட்கப் பெரியவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் மிகவும் ஆச்சரியமான விஷயம். பெயர், குடும்பம், வேலை போன்ற விஷயங்களைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு எந்தவிதமான ஆலோசனை வேண்டும் என்று கேட்கிறான். வீட்டிலோ, வேலையிலோ, உறவுகளிலோ ஆலோசனை வேண்டும் என்று சொன்னால், அதற்கேற்றவாறு எளிய ஆலோசனைகளை வழங்கி விடுகிறான். அவர்களும் திருப்தியாகக் கட்டணத்தைச் செலுத்திவிட்டுச் செல்கிறார்கள். “ஒருநாள் இரவு சில பிரச்சினைகளை விவரித்து, அதற்கு அவனுடைய ஆலோசனைகளையும் சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனுடைய திறமையை ஊக்குவிக்க முடிவு செய்தேன். மறுநாள் வில்லியம்ஸ்பர்க் தெருவுக்குச் சென்றோம். ஆலோசனைக்கு 2 டாலர் கட்டணம் என்று எழுதி வைத்துக் காத்திருந்தோம். நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் வந்து, ஆலோசனைகளைக் கேட்க ஆரம்பித்தார்கள்” என்கிறார் சிரோவின் அப்பா ஆடம். “என்னுடைய ஆலோசனைகள் மிக எளிமையானவை. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு விஷயமும் மாற்றத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. நாமும் மாறித்தான் ஆக வேண்டும் என்பதைத்தான் என் ஆலோசனைகளில் அதிகம் சொல்கிறேன்” என்கிறான் சிரோ.

சிறுவனிடம் ஆலோசனை கேட்கும் அளவுக்குப் பெரியவர்கள் பிரச்சினைகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள்!

பெண்கள் மாதவிடாய் காலத்தை இன்னும் சவுகரியமாக உணர்வதற்காக, சுவிட்சர்லாந்து சாக்லேட் நிறுவன உரிமையாளர் மார்க் விட்மர் புதிய சாக்லேட் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த சாக்லேட்டில் 60% கோகோவும் ஸ்விட்சர்லாந்து மலைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 17 விதமான மூலிகைகளும் கலந்திருக் கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தை யோசித்த விட்மர், 17 மூலிகைகள் கலந்த தேயிலைத் தூளைத் தயாரித்தார். பிறகு அந்த யோசனையை சாக்லேட்டுக்கு மாற்றிவிட்டார். “பெண்களுக்கு ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும், மாதவிடாய் நேரத்தில் வரும் பிரச்சினைகளும் குறைய வேண்டும் என்று திட்டமிட்டோம். இது மருந்து அல்ல. மருத்துவக் குணங்கள் கொண்ட சுவையான சாக்லேட். 100 கிராம் ஃப்ரான்மன்ட் சாக்லேட்டின் விலை 800 ரூபாய். அடுத்த ஆண்டு ஆசியச் சந்தைகளில் அறிமுகப்படுத்த இருக்கிறோம். அதுவரை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்” என்கிறார் மார்க் விட்மர்.

விலை குறைந்தால் பெண்களுக்கான பிரத்யேக சாக்லேட்டை வரவேற்கலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x