Published : 17 Jan 2017 11:16 AM
Last Updated : 17 Jan 2017 11:16 AM

உலக மசாலா: பெண்ணின் துயர் துடைத்த வான்கோழி!

அமெரிக்காவில் வசிக்கும் ஜோடி ஸ்மாலே, தான் வளர்க் கும் ஈஸ்டர் வான்கோழியை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்கிறார். இதுவரை அமெரிக்காவின் 6 மாகாணங்களுக்குப் பயணம் செய்து திரும்பியிருக்கிறது ஈஸ்டர் வான்கோழி. கார், விமானம், கப்பல் போன்றவற்றில் பயணித்திருக்கிறது. “என் கணவரின் இழப்பால் துயரத்தில் இருந்தபோது, ஒருநாள் தெருவில் ஈஸ்டரைக் கண்டேன். அதைப் பார்த்தவுடன் எனக்கு ஏனோ அன்பு பெருகியது. அருகில் சென்று ஈஸ்டரை அணைத்தேன். அது என்னைக் கண்டு பயப்படாமல், பதிலுக்கு அன்பைச் செலுத்தியது. என் துயரத்தைப் போக்க வந்த தேவதையாகத் தோன்றியது. மூன்று வயதான ஈஸ்டர், குறைந்தது 10 ஆண்டுகளாவது உயிர் வாழும் என்பதை அறிந்தேன். வளர்க்க ஆரம்பித்தேன். வீட்டில் பூனைகளும் நாய்களும் செல்லப்பிராணிகளாக இருந்தாலும் ஈஸ்டர் எனக்கு மிகவும் நெருக்கமானவள். இவள் இல்லாமல் நான் எங்கும் செல்வதில்லை. நான் சமைக்க ஆரம்பித்தால், சமையலறையில் அமர்ந்திருப்பாள். என்னுடன் மேஜையில் அமர்ந்து சாப்பிடுவாள். என் படுக்கையில்தான் உறங்குவாள். இவளுக்குத் துணிகளைப் போட்டு அழகு பார்ப்பேன். இவள் வந்த பிறகு என் துன்பத்தில் இருந்து வெளிவந்துவிட்டேன். மிகவும் புத்திசாலியானவள். அத்துமீறி எதையும் செய்யமாட்டாள். விமானத்தில் தனி இருக்கையில் அமர்ந்து, டிவி பார்த்தபடியே இவள் பயணிப்பதை எல்லோரும் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். விமானி இவளைக் கண்டு வியந்து, காக்பிட்டில் உட்கார அனுமதித்தார். எங்கே போனாலும் நல்ல பெயரைப் பெற்றுவிடுகிறாள். பொதுவாகவே எல்லா மனிதர்களிடமும் அன்பாகப் பழகுகிறாள். நாய்களுக்கும் பூனைகளுக்கும் ஏதாவது பிரச்சினை என்றால் ஓடிப்போய் உதவி செய்வாள். என்னைச் சிறிது நேரம் பார்க்காவிட்டால் குரல் கொடுத்தபடி தேட ஆரம்பித்துவிடுவாள்” என்கிறார் ஜோடி ஸ்மாலே.

பெண்ணின் துயர் துடைத்த வான்கோழி!

சியங்கோரா என்பது நாய்களின் ரோமங்களை வைத்துப் பின்னப்படும் ஆடைகளுக்கான கலை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கடுங்குளிர் நிலவக்கூடிய ஆர்டிக் பகுதியை ஒட்டி வாழ்ந்த மக்கள் நாய்களின் ரோமங்களில் ஆடைகளை நெய்திருக்கிறார்கள். இல்லினாய்ஸைச் சேர்ந்த ஜென்னி சான்கே, சியங்கோரா ஆடைகளை உருவாக்கி வருகிறார். ஸ்வெட்டர், கையுறை, தொப்பி, காலுறை போன்றவற்றை நாய்களின் ரோமங்களைக் கொண்டு செய்துவருகிறார். “ஆடுகளின் ரோமங்களை வெட்டுவது போல நாய்களுக்கு நாம் வெட்டுவதில்லை. நாய்கள் மீது அன்பு வைத்திருப்பவர்கள், அவற்றின் ரோமங்களை வைத்து ஏதாவது ஒரு பொருளை உருவாக்கித் தரும்படிக் கேட்டனர். நாய்கள் இறந்தாலும் அவற்றின் நினைவாக இந்தப் பொருட்களை வைத்துக்கொள்ளலாம் என்றனர். நாய்களின் உரிமையாளர்களிடம் ரோமங்களைச் சேகரித்து தரச் சொல்வேன். ரோமங்களைப் பலமுறை தண்ணீரில் சுத்தம் செய்து, நாய் வாசனை போகுமாறு செய்வேன். பிறகு அந்த ரோமங்களை வைத்து தொப்பி, கையுறை போன்று என்ன செய்ய முடியுமோ, செய்து கொடுத்துவிடுவேன். நாய் ரோமங்களால் உருவான தொப்பி என்று சொன்னால் தவிர, யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆடுகளின் ரோமங்களைவிட நாய் ரோமங்கள் 80% கதகதப்பை அதிகமாக அளிக்கக்கூடியவை” என்கிறார் ஜென்னி சான்கே.

நாய் ரோமங்களில் ஆடைகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x