Published : 15 Oct 2016 10:58 AM
Last Updated : 15 Oct 2016 10:58 AM

உலக மசாலா: பெண்களுக்கு மரியாதை!

ஜப்பானில் பெண்களின் உடல் நலனுக்காகவே பிரத்யேக கோயில் ஒன்று இருக்கிறது. குடோயாமா நகரில், கோயா மலையின் அடிவாரத்தில் ஜிசன் கோயில் அமைந்திருக்கிறது.

வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஜப்பானில் உள்ள மற்ற புத்தர் கோயில்களைப் போலவே இருக்கிறது. ஆனால், உள்ளே நுழைந்தவுடன் எங்கு பார்த்தாலும் வடிவங்கள் (நம்மூரில் கண் உள்ளிட்ட பாகங்களை வெள்ளியில் செய்து காணிக்கை செலுத்துவது போல) பெண்களின் மார்பக மினியேச்சர்கள் பஞ்சு, துணி, மரம், பிளாஸ்டிக், உலோகம் போன்றவற்றில் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளன. ஆண் மருத்துவர் ஒருவர், தன் நோயாளி மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வதற்காக வந்திருந்தார். திடீரென்று தலைமை குருவிடம் சென்று, பெண்கள் மார்பக வடிவங்களை இந்தக் கோயிலுக்குக் காணிக்கையாக அளிக்கட்டுமா என்று கேட்டார். அவரும் ஏற்றுக் கொண்டார். விஷயம் வேகமாக நாடு முழுவதும் பரவியது.

அன்று முதல் இன்றுவரை மார்பக வடிவங்களைக் காணிக்கையாக அளிக்கும் வழக்கம் தொடர்கிறது. மார்பகப் புற்றுநோய் மட்டுமின்றி, பெண்களுக்கு ஏற்படும் அனைத்து உடல் நலக் கோளாறுகளை நிவர்த்தி செய்ய, பெண்கள் கோயிலுக்கு வருகிறார்கள். சுகப் பிரசவம், பால் சுரப்பு, புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பு என்று வேண்டுதல்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

சமீபக் காலங்களில் மார்பகங்கள் காணிக்கை செலுத்துவதும் அதிகரித்து வருகிறது. 9-ம் நூற்றாண்டில் கோயா மலை மீது கோபோ டைஷி, புத்தர் கோயிலைக் கட்டினார். அந்தக் காலத்தில் பெண்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. கோபோ டைஷியின் தாய், மலை அடிவாரத்தில் தங்கியிருந்தார். ஒரு மாதத்தில் 9 தடவை மலையில் இருந்து இறங்கிவந்து, தாயைப் பார்த்துச் செல்வார் கோபோ டைஷி. அதனால் இந்த மலைக்கு, ‘ஒன்பது முறை மலை’ என்ற பெயர் வந்துவிட்டது. பிறகு மலையடிவாரத்தில் பெண்கள் வழிபடும் ஜிசன் கோயில் உருவானது.

பெண்களுக்கு மரியாதை...!

உலகின் பிரத்யேகமான சமூக வலைதளம் ரிச் கிட்ஸ். இதில் உறுப்பினரானால் மாதம் 67,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். உலகின் மிகப் பிரபல சமூக வலைதளங்கள் எல்லாம் இலவசமாகக் கிடைத்துக்கொண்டிருக்கும்போது, ரிச் கிட்ஸுக்கு யார் வரப் போகிறார்கள்? ‘பணக்காரர்களுக்கான பிரத்யேக சமூக வலைதளம் இது. இங்கே உறுப்பினர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். ஆனால் மற்ற சமூக வலைதளங்களைப் போல், தனித்துவம் இல்லாமல் இருக்க மாட்டார்கள். விருப்பம் போல் எழுதலாம், படங்களை வெளியிடலாம். யாரெல்லாம் பார்க்க அனுமதிக்கிறீர்களோ, அவர்கள் மட்டுமே பார்க்க முடியும். மற்ற எல்லாவற்றையும் விட ரிச் கிட்ஸ் உறுப்பினர் என்பது, மிகப் பெரிய கவுரவம்.

ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் கட்டணம் பெறுகிறோம். அதற்கு ஏற்றார்போல வசதிகளையும் செய்து தருகிறோம். இந்தக் கட்டணத்தில் குறிப்பிட்ட அளவு பணம் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்படுகிறது. கவுரவத்துடன், ஏழைகளுக்கு உதவும் திருப்தியும் உங்களுக்குக் கிடைக்கிறது’’ என்கிறார் ரிச் கிட்ஸ் சி.இ.ஓ. ஜுராஜ் இவான்.

ஏழைகளுக்கு உதவுகிறேன் என்பது பேஷன் போல!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x