Published : 19 Dec 2015 10:59 AM
Last Updated : 19 Dec 2015 10:59 AM

உலக மசாலா: பெங்குவின்களைக் காப்பாற்றும் நாய்கள்!

உலகிலேயே மிகச் சிறிய பெங்குவின்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள மிடில் தீவில் வசிக்கின்றன. ஓர் அடி உயரமும் ஒரு கிலோ எடையும் கொண்டவை. ஓரிடத்தில் கூட்டமாக வசிக்கும் இயல்புடையவை. பெங்குவின்களை நரிகள் வேட்டையாடுவதால் அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டன. 15 ஆண்டு களுக்கு முன்பு 800 பெங்குவின்கள் இங்கே இருந்தன. 10 ஆண்டுகளுக்கு முன்பு 4 பெங்குவின்களே எஞ்சியிருந்தன. இவற்றைக் காப்பாற்றுவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்றும் பலனளிக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் கோழிகள், ஆடுகளைக் காப்பாற்றுவதற்கு நாய்களைப் பயன்படுத்துவதுண்டு. 2006-ம் ஆண்டு நாய்களை அனுப்பி, பெங்குவின்களை காக்கும் முடிவுக்கு வந்தனர்.

நரிகள் வரும் வழிகளில் நாய்களை நிறுத்திவிடுவோம். நாய்களின் குரைப்புக்குப் பயந்துகொண்டே நரிகள் நெருங்கி வருவதில்லை. திங்கள் முதல் வெள்ளி வரை நாய்கள் பெங்குவின்களை காக்கும் பணியில் ஈடுபடுகின்றன. நாய்களின் வாசம் அங்கேயே இருப்பதால் சனி, ஞாயிறுகளிலும் நரிகள் எட்டிப் பார்ப்பதில்லை. 9 ஆண்டுகளில் நரிகளால் ஒரு பெங்குவினைக் கூட வேட்டையாட முடியவில்லை. இன்று பெங்குவின்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்திருக்கிறது. பெங்குவின்களை காப்பாற்றும் நாய்களின் கதை ‘ஆட்பால்’ என்ற பெயரில் ஹாலிவுட் திரைப்படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கிறது.

அடடா! மிகச் சிறந்த காவலன்!

கார்லோஸ் அகுலெரா மிகப் பெரிய ஜாஸ் இசைக் கலைஞர். அவருக்கு ஸ்பெயினில் உள்ள மருத்துவமனையில் 12 மணி நேர மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மூளை அறுவை சிகிச்சையால் தன்னுடைய இசை ஆற்றல் அழிந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் கார்லோஸ். அறுவை சிகிச்சை செய்யும்போதே அவரிடம் சாக்ஸபோனைக் கொடுத்தனர்.

ஒரு கையால் சாக்ஸபோனைப் பிடித்தபடி அருமையாக இசைத்தார். நரம்பியல் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள், இந்த அறுவை சிகிச்சையால் கார்லோஸின் இசை ஆற்றல் சிறிதும் பாதிக்கப்படவில்லை என்று அறிவித்தனர். 27 வயது கார்லோஸுக்கு வெற்றிகரமாக மூளைக் கட்டி அகற்றப்பட்டது. நலமாக இருக்கிறார். ‘‘என்னையும் என் இசையையும் பத்திரமாகத் திருப்பிக் கொடுத்த மருத்துவர்களுக்கு என்றென்றும் நன்றியுடையவனாக இருப்பேன்’’ என்கிறார் கார்லோஸ்.

நம்ப முடியாத ஆச்சரியம்!

உலகிலேயே மிக விலையுயர்ந்த பொம்மை வீடு நியூ யார்க்கில் இருக்கிறது. 9 அடி உயரமும் 362 கிலோ எடையும் கொண்ட இந்த வீட்டில் 29 அறைகள் உள்ளன. டென்னிசனின் கவிதைகளில் வரும் அஸ்டோலட் மாளிகை போல இந்த மினியேச்சர் வீடு உருவாக்கப்பட்டிருக்கிறது. 1974-ம் ஆண்டு ஆரம்பித்து 1987-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 13 ஆண்டுகளில் ஒவ்வோர் அங்குலமும் அக்கறையுடன் இழைக்கப்பட்டிருக்கிறது. வெண்கலத்தால் கூரையும் மரத்தால் சுவர்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. சுவர்கள் எல்லாம் நகரும் விதத்திலும் திறக்கும் விதத்திலும் முப்பரிமாணத்தில் உள்ளன. தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட மேஜைகள், நாற்காலிகள், அலமாரிகள், கட்டில்கள், விளக்குகள் என்று 10 ஆயிரம் பொருட்கள் இந்த பொம்மை வீட்டில் வைக்கப்பட்டி ருக்கின்றன.

ஆயில் பெயிண்டிங் ஓவியங்களும் டெலஸ்கோப்களும் உள்ளன. முதல் தளத்தில் சமையல் அறை, இரண்டாவது தளத்தில் மது வகைகள், மூன்றாவது தளத்தில் இசைக் கருவிகள், நான்காவது தளத்தில் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளன. உணவு மேஜையில் சிறிய தட்டுகளிலும் பாத்திரங்களிலும் நிஜ உணவுகளே இருக்கின்றன. பாட்டில்களில் மது வகைகள் நிரப்பப்பட்டுள்ளன. மிக மிகச் சிறிய புத்தங்கள் அச்சடிக்கப்பட்டு, அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ளன. உருப்பெருக்கிக் கண்ணாடியை வைத்து புத்தகத்தைப் படித்துக் கொள்ளலாம். ஐந்தாவது தளத்தில் படுக்கைகள். இந்த பொம்மை வீடு அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் பவுலா கில்ஹூலே பல கோடி மதிப்புள்ள சிறிய பியானோவில் இசைக்கவும் முடியும். இங்கு எல்லாமே சிறியதாக இருக்கும், ஆனால் எல்லாமே உண்மையானதாக இருக்கும். இங்கே வருகிறவர்கள் வாயடைத்துப் போய்விடுவார்கள். இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 56 கோடி ரூபாய்.

அடேங்கப்பா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x