Published : 05 Feb 2017 11:56 AM
Last Updated : 05 Feb 2017 11:56 AM

உலக மசாலா: பூனைக்கு டாட்டூ ரொம்பவே அநியாயம்...

ஷ்யாவின் உஸுரி வளைகுடா மிக அழகான பகுதி. ஒருகாலத்தில் அருகில் இருந்த தொழிற்சாலைகளிலிருந்து தேவையற்ற கண்ணாடி பாட்டில்கள் இந்தக் கடற்கரையில் அளவுக்கு அதிகமாகக் கொட்டப்பட்டன. உடைந்த கண்ணாடிகள் நிரம்பிய பகுதி என்பதால், மனிதர்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. காலங்கள் சென்றன. கூர்மையான உடைந்த கண்ணாடி துண்டுகள் எல்லாம் நீரால் அரிக்கப்பட்டு, கூழாங்கற்களைப் போன்று வழவழப்பாகி விட்டன. சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை என்று அத்தனைக் கண்ணாடி துண்டுகளும் கற்கள் போல உருமாறி, கரைக்கு வந்துசேர்கின்றன. கடற்கரை முழுவதும் வண்ணக் கண்ணாடி கற்களால் அழகாகக் காட்சியளிக்கிறது. தற்போது இந்தப் பகுதியைக் காண்பதற்காக உள்நாட்டிலிருந்து மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமிருந்தும் மக்கள் வருகிறார்கள். கரைகளில் ஒதுங்கும் கண்ணாடி கற்களை எடுப்பதற்கும் சற்றுத் தொலைவில் உறைந்திருக்கும் பனிப் பாறைகளைப் புகைப்படம் எடுப்பதற்கும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

மனிதர் செய்த தவறை அழகாகத் திருத்தியிருக்கிறது இயற்கை!

லேசியாவில் பல் மருத்துவராக வேண்டும் என்றால் 6 ஆண்டுகள் கல்லூரியில் படித்து, உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் 25 வயது முகமது இர்வான், பல் மருத்துவ மாத இதழ்களைப் படித்தும் யூடியூப் வீடியோக்களைப் பார்த்தும் மருத்துவம் கற்றுக்கொண்டார். தான் கற்றுக்கொண்ட வித்தையை ஒரு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்து, செய்தும் பார்த்துவிட்டார். தான் சிறந்த பல் மருத்துவர் என்ற நம்பிக்கை வந்தவுடன், சொந்தமாகப் பல் மருத்துவமனையை ஆரம்பித்தார். அங்கீகரிக்கப்படாத இந்த மருத்துவமனைக்குப் பலரும் வந்து பல் பிடுங்குதல், பற்களைச் சுத்தம் செய்தல், பற்களைப் பொருத்துதல் போன்ற சிகிச்சைகளை எடுத்துக்கொண்டனர். திடீரென்று கடந்த டிசம்பர் மாதம் மருத்துவமனையை மூட முடிவு செய்தார் முகமது இர்வான். அவரது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவர், சந்தேகப்பட்டு காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டார். காவலர்கள் விசாரித்தபோது மருத்துவப் பட்டமோ, உரிமமோ இல்லாமல் முகமது இர்வான் பல் மருத்துவம் பார்த்த விஷயம் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட முகமது இர்வானுக்கு 6 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவத்தில் விளையாடலாமா?

ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் டாட்டூ கலைஞர். தன் உடல் முழுவதும் டாட்டூ குத்திக்கொண்டிருக்கிறார். அவரிடம் முடிகளற்ற ஸ்பின்ஸ் பூனை ஒன்று இருக்கிறது. இதுவரை அந்தப் பூனையின் உடலில் 4 டாட்டூக்களை வரைந்திருக்கிறார். “டாட்டூ மீது அளவுக்கு அதிகமான ஆர்வம். பலவிதங்களிலும் பல தோல்களிலும் டாட்டூ பரிசோதனை மேற்கொண்டு வருகிறேன். பூனைக்கு அனஸ்தீசியா கொடுத்து, மயக்க நிலையில் வைத்துதான் டாட்டூ போடுவேன். சிறிது நேரத்திலேயே மயக்கத்திலிருந்து விழித்துவிடும். மனிதத் தோலைப் போலவே இந்தப் பூனையின் தோலும் டாட்டூ வரைவதற்கு உகந்ததாக இருக்கிறது” என்கிறார் அலெக்சாண்டர். விலங்குகள் நல ஆர்வலர்கள் இதைக் கடுமையாக எதிர்த்துவருகிறார்கள்.

பூனைக்கு டாட்டூ ரொம்பவே அநியாயம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x