Published : 14 Feb 2017 09:58 AM
Last Updated : 14 Feb 2017 09:58 AM

உலக மசாலா: புற்றுநோய்க்கு தீர்வு எப்போது?

இங்கிலாந்தில் வசித்த மைக் பென்னட்டும் அவரது மனைவி ஜூலி பென்னட்டும் ஒருவருக்கொருவர் மிகவும் அனுசரணையான தம்பதியர். 21 வயதில் லூக், 18 வயதில் ஹன்னா, 13 வயதில் ஆலிவர் என்று மூன்று குழந்தைகளையும் அற்புதமாக வளர்த்தனர். 57 வயது பென்னட் கேபினட் செய்யும் பணியிலும் 50 வயது ஜூலி பள்ளி ஆசிரியராகவும் வேலை செய்துவந்தனர். 2013-ம் ஆண்டு பென்னட்டுக்கு மூளைப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடைந்து போனாலும் ஜூலி அந்த வருத்தத்தை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. கணவரையும் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு, வேலைக்குச் சென்றுவந்தார். 2016-ம் ஆண்டு ஜூலிக்கு உடல் நலம் குன்றியது. பரிசோதனை செய்ததில் நுரையீரல், சிறுநீரகப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மருத்துவம் செய்வதற்கு வாய்ப்பளிக்காமல் வெகுவேகமாக உடலின் பிற உறுப்புகளுக்கும் புற்றுநோய் பரவியது. பென்னட்டும் ஜூலியும் தங்கள் குழந்தைகளைப் பற்றிக் கவலைப்பட்டனர். அம்மாவும் அப்பாவும் மரணப்படுக்கையில் கைகளைப் பிடித்துக்கொண்டு உறங்கிய புகைப்படங்களை குழந்தைகள் சமூக இணையதளத்தில் வெளியிட்டனர். உடனே ஜூலியின் உறவினர்கள், நண்பர்கள் ஓடோடி வந்தனர். குழந்தைகளைத் தாங்கள் பார்த்துக்கொள்வதாக வாக்களித்தனர். அதற்காக நிதியையும் திரட்ட ஆரம்பித்தனர். தாங்கள் இல்லாத உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை ஜூலி, குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தார். கடந்த வாரம் பென்னட் மறைந்தார். ஐந்தே நாட்களில் ஜூலியும் மறைந்தார். பெற்றோரின் இழப்பிலிருந்து தங்களைத் தேற்றிக்கொண்ட குழந்தைகள் மூவரும், “எங்கள் அம்மா எவ்வளவு சிறந்த மனிதர்களைச் சம்பாதித்து வைத்திருக்கிறார் என்பதை எங்களுக்கு உதவும் நல்ல உள்ளங்கள் மூலம் அறிந்துகொண்டோம். பெற்றோர் இல்லாமல் உலகில் வசிப்பது கடினம்தான். ஆனால் அதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதையும் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தே சென்றிருக்கிறார் அம்மா. பெற்றோரின் ஆன்மா இருக்கும் இந்த வீட்டிலேயே தொடர்ந்து வசிக்க இருக்கிறோம். நானும் என் தங்கையும் அவரவர் துறையிலும் தம்பி படிப்பிலும் கவனம் செலுத்தப் போகிறோம். உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தப் புற்றுநோய்க்கு முழுமையான தீர்வு எப்ப கிடைக்குமோ?

இங்கிலாந்தைச் சேர்ந்த சீகி ரெபேகா, தன் நண்பர் ரூபென் ஃப்யாண்டெரை விளையாட்டாக ஏமாற்ற நினைத்தார். அவரை அலைபேசியில் அழைத்து, கத்தி வெட்டியதில் ஏராளமாக ரத்தம் வெளியேறுகிறது. உடனே வீட்டுக்கு வந்து உதவ முடியுமா என்று கேட்டார். அவரும் உடனே வருவதாகச் சொன்னார். அதற்குள் கேமராவை வைத்துக்கொண்டு, சிவப்புச் சாயத்தைக் கைகள், கத்தியில் தடவிக்கொண்டார். அளவுக்கு அதிகமாகத் தடவியதில் சாயம் சுவர், தரை எல்லாம் சிதறிவிட்டது. ரூபென் வந்தார். ரத்தத்தைப் பார்த்தார். அவரிடம் முகத்தை வருத்தமாக வைத்துக்கொண்டு ஏதோ சொல்ல வந்தார் ரெபேகா. அடுத்த நொடி ரூபென் மயங்கிக் கீழே விழுந்துவிட்டார். உதவி செய்ய அழைத்த ரூபெனுக்கு, ரெபேகா மருத்துவம் பார்க்கும்படியாகிவிட்டது!

விளையாட்டு விபரீதமாகிவிட்டது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x