Published : 22 Oct 2015 09:09 AM
Last Updated : 22 Oct 2015 09:09 AM

உலக மசாலா: புன்னகை பூக்க வைக்கும் பெய்ஜு

டெக்ஸாஸில் வசிக்கும் பெய்ஜ் சேனலுக்கு பிறந்தநாள் கொண்டாட் டங்கள் என்றால் மிகவும் விருப்பம். ஏழைக் குழந்தைகளுக்குப் பிறந்தநாள் விழாக்களை ஏற்பாடு செய்து, குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவங்களைத் தருகிறார். ஓராண்டுக்கு 180 பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். “ஒருமுறை பத்திரிகையில் குழந்தைகள் பிறந்தநாள் விழாக்கள் பற்றி படித்தேன். வயிற்றில் இருக்கும் என் குழந்தையின் பிறந்தநாளை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று கற்பனை செய்தேன். இன்னொரு பத்திரிகையில் ஹைதியில் குழந்தைகள் உணவு, உடை, இருப்பிடம் இன்றி தவிப்பதைப் படித்தேன். என் மனநிலை மாறிவிட்டது. உலகத்தில் எத்தனையோ கோடி குழந்தைகள் உணவும் வீடும் இன்றி தவிக்கிறார்கள். அவர்களின் கஷ்டத்தைப் போக்குவதற்கு என்னிடம் எந்த மந்திர சக்தியும் இல்லை. ஏழைக் குழந்தைகளுக்கு ஒரு பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்து, அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நிகழ்ச்சியாக மாற்ற எண்ணினேன். உடனே காரியத்தில் இறங்கினேன். என் கணவரும் நானும் குழந்தைகளைக் கண்டுபிடித்து, நிதி திரட்டி, பிறந்தநாள் விழாக்களை நடத்த ஆரம்பித்தோம். மூன்றே ஆண்டுகளில் நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ, மினியாபொலிஸ், சிகாகோ உட்பட 8 நகரங்களுக்கு எங்களின் பிறந்தநாள் விழாக்கள் பரவிவிட்டன” என்கிறார் பெய்ஜ்.

குழந்தைகளின் முகத்தில் புன்னகை பூக்க வைக்கும் பெய்ஜுக்கு வாழ்த்துகள்!

சீனாவில் வசிக்கிறார் 62 வயது கோங் ஸுன்ஹுய். ஏஎல்எஸ் என்ற நரம்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். தலையைத் தவிர, உடலின் மற்ற பாகங்கள் எதுவும் இயங்காது. சக்கர நாற்காலியில்தான் வாழ்க்கை. 1,50,000 வார்த்தைகள் கொண்ட சுயசரிதையைத் தன் கண்கள் மூலம் எழுதியிருக்கிறார் கோங்! 3 ஆண்டுகளுக்கு முன்பு கண்களால் இயங்க வைக்கக்கூடிய கருவி ஒன்றை கம்ப்யூட்டருடன் இணைத்துக் கொடுத்திருக்கிறார்கள் கோங் குடும்பத்தினர். கண்களை சிமிட்டினால் ஓர் எழுத்து திரையில் தெரியும். இப்படிக் கண்களால் டைப் செய்வது ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வேகம் அதிகரித்தது. காலை 8 மணி முதல் 11 மணி வரை கண்களால் டைப் செய்வார். ஒரு நாளைக்கு 3 ஆயிரம் வார்த்தைகள். கடந்த நவம்பர் மாதம் நூறு கோடிக்கும் அதிகமான முறை கண்களை சிமிட்டி, 1,50,000 வார்த்தைகள் கொண்ட புத்தகத்தை எழுதி முடித்துவிட்டார்! இதுவரை நரம்பு நோய் தாக்கப்பட்டவர்கள் 3 முதல் 5 ஆண்டுகள் வரையே உயிருடன் இருந்திருக்கிறார்கள். ஆனால் கோங் 12 ஆண்டுகள் வரை இருப்பதோடு, ஒரு புத்தகத்தையும் எழுதி முடித்துவிட்டார்! “என் வாழ்க்கை என்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை தருவதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே புத்தகம் எழுதினேன்.” என்கிறார் கோங். ஆன்லைனில் கண்களால் எழுதிய புத்தகம் என்று விளம்பரம் செய்த உடனேயே, ஆயிரம் புத்தகங்களுக்கு ஆர்டர் வந்துவிட்டது.

ஆரோக்கியமானவர்களால் கூட எளிதில் செய்ய முடியாத காரியம்… கிரேட்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x