Published : 15 Apr 2017 09:41 AM
Last Updated : 15 Apr 2017 09:41 AM

உலக மசாலா: புத்தியிருப்பவர் பிழைத்துக்கொள்வார்!

இங்கிலாந்தில் வசிக்கும் டன்ஸ்டன் லோவ், 2011-ம் ஆண்டு மூன்றரை கோடி ரூபாய்க்கு 6 படுக்கையறைகள் கொண்ட மிகப் பெரிய வீட்டை ஆசையாக வாங்கினார். அதற்குப் பிறகு அந்த வீட்டுக்கு ஏராளமாகச் செலவு செய்து புது வீட்டைப் போல மாற்றினார். அந்த வீட்டில் மூன்று ஆண்டுகளே அவரால் நிம்மதியாக வாழ முடிந்தது. கடன் பிரச்சினை அளவுக்கு அதிகமாக, வீட்டை விற்க முடிவு செய்தார். ஆறரை கோடி ரூபாய்க்கு வீடு என்று விளம்பரம் செய்தார். ஆனால் வீட்டை வாங்குவதற்கு ஒருவரும் ஆர்வம் காட்டவில்லை. கடந்த டிசம்பரில் 6.8 கோடி ரூபாய்க்கு விற்பதாக அறிவித்தார். அப்போதும் வீடு விலை போகவில்லை. ஒரு பக்கம் கடன் தொல்லை. இன்னொரு பக்கம் வீட்டை விற்க முடியாத மன உளைச்சல். வேறு வழியின்றி 5.2 கோடி ரூபாய்க்கு விற்பதாக அறிவித்தார். அப்போதும் வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. வீட்டை விற்க வேண்டிய கட்டாயத்தில் ஒரு திட்டத்தை உருவாக்கினார். இவரிடம் 162 ரூபாய்க்கு டிக்கெட் வாங்குபவர்களிலிருந்து ஒருவரைக் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலியாகத் தேர்ந்தெடுத்து, வீட்டை இலவசமாகக் கொடுத்துவிடுவதாக அறிவித்தார். நேரடியாகவும் தபால் மூலமும் ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட்டுகள் மிக வேகமாக விற்றுக்கொண்டிருக்கின்றன. இதுவரை டிக்கெட்கள் விற்பனை மூலம் ஒரு கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. டன்ஸ்டனுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. 162 ரூபாய் செலுத்தி எளிமையான ஒரு கேள்விக்குப் பதில் சொல்பவர்களையும் அதிர்ஷ்டக் குலுக்கலில் சேர்த்துவிடுவோம் என்று ஒரு போட்டியை அறிவித்திருக்கிறார். “ஆகஸ்ட் முதல் தேதிதான் அதிர்ஷ்டசாலியைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம். அதுவரை விதவிதமாகப் போட்டிகளை அறிவித்து, அதற்கான கட்டணங்களையும் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தையும் வைத்து வீட்டுக்கான தொகையை எடுத்துவிடுவேன். குறைந்தது 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி விற்றால் 8 கோடி ரூபாய் கிடைத்துவிடும். நான் வீட்டை விற்க நினைத்த தொகையை விட அதிகமான லாபம். அதனால் அதிர்ஷ்டசாலிக்கு இலவசமாக வீட்டைக் கொடுப்பதில் எனக்கு மகிழ்ச்சியே!” என்கிறார் டன்ஸ்டன்.

புத்தியிருப்பவர் பிழைத்துக்கொள்வார்!

ஜப்பானைச் சேர்ந்த 6 வயது ரிக்கி குரங்கு மிகப் பிரமாதமாக டென்னிஸ் விளையாடுகிறது. டென்னிஸ் உடையணிந்து, இரண்டு கால்களால் நிமிர்ந்து நின்று, டென்னிஸ் மட்டையால் அநாயாசமாகப் பந்தை அடித்து விளையாடுகிறது. பந்து உயரமாகச் செல்லும்போது தரையிலிருந்து எம்பிக் குதித்து, பந்தை லாவகமாக அடிக்கும் காட்சி ஆச்சரியப்படுத்தி விடுகிறது. விளையாடி முடித்த பிறகு, பயிற்சியாளர் ‘குட் ஜாப்’ என்று பாராட்டியவுடன் அவரது தோள்களில் தட்டிக் கொடுக்கும்போது எல்லோரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டுவிடுகிறது ரிக்கி. டென்னிஸ் விளையாடும் வீடியோ வெளியிட்ட 6 மணி நேரத்தில் 3 லட்சம் முறை பார்க்கப்பட்டிக்ருகிறது!

அடுத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்குமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x