Published : 07 Apr 2017 10:24 AM
Last Updated : 07 Apr 2017 10:24 AM

உலக மசாலா: புத்தர் உங்களை மன்னிப்பாராக!

ஜப்பானிய கலைஞர் யோன்ஜி இனாமுரா வண்டுகளை வைத்து புத்தரின் உருவத்தை வடித்திருக்கிறார்! 6 ஆண்டுகள் பல்வேறு விதமான வண்டுகளைச் சேகரித்து, புத்தர் சிலையை உருவாக்கியிருக்கிறார். இவர் வசித்த பகுதியில் பூச்சிகளும் வண்டுகளும் ஏராளமாக இருந்தன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் வண்டுகளைச் சேகரிப்பதைப் பொழுது போக்காக வைத்திருந்தார். 1970-ம் ஆண்டு தன்னிடமிருந்த 5 ஆயிரம் வண்டுகளை வைத்து, 10 மாதங்களில் சாமுராய் உருவத்தைச் செய்து முடித்தார். பலரும் ஆச்சரியப்பட்டுப் பாராட்டினர். சிலர் வண்டுகளைக் கொன்று கலையை உருவாக்குவதா என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இவர் விமர்சனத்தைப் பொருட்படுத்தவில்லை. இரண்டே ஆண்டுகளில் 5 அடி உயர போதிச்சத்துவரை வண்டுகளால் உருவாக்கிவிட்டார். அதற்குப் பிறகு 6 ஆண்டுகளில் 20 ஆயிரம் வண்டுகளைச் சேகரித்து புத்தரைச் செய்து முடித்தார். சாமுராய், போதிச்சத்துவரை விட புத்தர் மிக நேர்த்தியாக இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோ அருங்காட்சியகத்தின் நிர்வாக இயக்குநர், வண்டு புத்தரைக் கண்டுபிடித்தார். யோன்ஜியின் அனுமதியோடு இடாகுரா அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைத்தார். கடந்த ஆண்டு 98 வயதில் மறைந்துபோன யோன்ஜி, கடைசிவரை வண்டுகளை வைத்து ஏன் உருவங்களைச் செய்தார் என்ற காரணத்தை மட்டும் சொல்லவே இல்லை.

புத்தர் உங்களை மன்னிப்பாராக!

கியூபாவில் ஒயின் தயாரிப்பாளராக இருக்கிறார் 65 வயது ஒரெஸ்டெஸ் எஸ்டீவெஸ். பழச்சாறுகள் நொதித்து சரியான பக்குவத்தில் ஒயினாக மாறுவதை ஆணுறைகள் மூலம் அறிந்துகொள்கிறார். “ஆணுறைகளைக் கருத்தடைக்கு மட்டும் நாங்கள் பயன்படுத்துவதில்லை. ஆணுறைகளைப் பயன்படுத்தி சிலர் மீன் பிடிக்கிறார்கள். நான் ஒயின் தயாரிப்பில் பயன்படுத்திக் கொள்கிறேன். விதவிதமான பழக்கலவைகளைத் தயார் செய்து பெரிய ஜாடிகளில் ஊற்றி, வாயில் லேடக்ஸால் ஆன ஆணுறைகளை மாட்டி விடுவேன். சில நாட்களில் பழச்சாறு நொதிக்க ஆரம்பித்துவிடும். அதிலிருந்து வெளியேறும் வாயுக்கள் ஆணுறைகளை நேராக நிற்க வைக்கும். சிறிய ஊசிகளைக் கொண்டு ஆணுறைகளில் ஓட்டையிடுவேன். வாயு வெளியேறும். வாயு அனைத்தும் வெளியேறி ஒயின் சரியான பக்குவத்துக்கு வரும்போது, ஆணுறை சாய்ந்துவிடும். உடனே அந்த ஜாடியை எடுத்து விற்பனைக்கு வைத்துவிடுவேன். எப்பொழுதும் 300 ஜாடிகளில் ஒயின் தயாராக இருக்கும். எங்கள் மக்கள் எளிமையானவர்கள். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் ஒயின்களை அவர்களால் வாங்க இயலாது. எங்கள் நாட்டில் விளையும் பழங்களையும் காய்கறிகளையும் பயன்படுத்தி மிகக் குறைந்த செலவில் ஒயினைத் தயாரித்து, குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறேன். கியூபாவில் எங்கள் ஒயின் மிகவும் பிரபலமானது” என்கிறார் ஒரெஸ்டெஸ் எஸ்டீவெஸ்.

ஒரு பொருள்; பல பயன்பாடு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x