Published : 26 Jan 2017 10:25 AM
Last Updated : 26 Jan 2017 10:25 AM

உலக மசாலா: புதின் காலண்டரை விரும்பும் ஜப்பானியர்கள்!

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அதிகாரப்பூர்வமான 2017-ம் ஆண்டு காலண்டரை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்டது. இதில் ஒவ்வொரு மாதத்துக்கும் புதினின் வித்தியாசமான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அவரின் புகழ்பெற்ற வாசகங்கள் ஆங்கிலம் உட்பட 8 மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த காலண்டர் ரஷ்யாவில் மிகப் பெரிய அளவுக்கு விற்பனையானதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. இதே காலண்டர் தற்போது ஜப்பானில் மிக அதிக அளவில் விற்பனையாகி வருவது ரஷ்ய அரசை ஆச்சரியமடைய வைத்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ஜப்பானியர்கள் ரஷ்ய அதிபரின் விசிறியாக இருக்கின்றனர் என்பது ஜப்பான் அரசுக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவிலிருந்து காலண்டரை விற்பனைக்காக வாங்கினேன். ஒரு காலண்டர் 45 ரூபாய்க்கு விற்பனை செய்தேன். என்னுடைய சில நண்பர்கள் ரஷ்ய அதிபரின் தீவிர விசிறிகள். அவர்கள் மூலம் இணையதளங்களில் விஷயத்தைப் பரப்பினேன். அக்டோபருக்குள் இருவிதமான காலண்டர்கள் விற்றுத் தீர்ந்தன. மீண்டும் ஆர்டர் கொடுத்தேன். வேறு வகை 3,500 காலண்டர்கள் வந்து சேர்ந்தன. புதினுக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்கிறார் காலண்டர் விற்பனையாளர் கோயுமி யோகோகவா. புதின் ஜுடோ போட்டியில் பங்கேற்பது, க்ளைடரில் பறப்பது போன்ற புகைப்படங்கள் மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றன. இந்த காலண்டரில் அக்டோபர் 7-ம் தேதி மட்டும் விடுமுறை என்று எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. புதினின் பிறந்தநாள் இது.

புதின் காலண்டரை விரும்பும் ஜப்பானியர்கள்!

மலேசியாவின் பாஹாங் மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டின் கம்பி வேலிக்குள் வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆடுகளை மலைப்பாம்பு விழுங்கிவிட்டது. 16 அடி நீளம் கொண்ட இந்த மலைப்பாம்பு அளவுக்கு அதிகமாக இரண்டு ஆடுகளை அடுத்தடுத்து விழுங்கியதால், நகர முடியாமல் தவித்தது. சிறிது நேரத்தில் மனிதர்களின் பார்வையில் பட்டுவிட்டது. உடலின் இரண்டு பகுதிகள் ஆடுகளால் புடைத்திருந்தன. முதலில் மலைப்பாம்பைக் கண்டு அஞ்சிய மக்கள், அது நகர முடியாமல் தவிப்பதைக் கண்டு தைரியம் பெற்றனர். குச்சியால் நகர்த்திப் பார்த்தனர். மலைப்பாம்பு எந்தவித எதிர்ப்பையும் காட்ட இயலாமல் பொம்மை போல படுத்திருந்தது. மலைப்பாம்பை அப்புறப்படுத்தும் எண்ணத்தில் தலைப் பகுதியை ஒருவர் பிடித்து இழுக்க, வால் பகுதியை இன்னொருவர் பிடித்து இழுத்தார். யாராலும் தூக்க முடியவில்லை. வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். 4 மனிதர்கள் சேர்ந்து மலைப்பாம்பின் தலையைக் கட்டி, வாகனத்தில் ஏற்றினர். சாதாரணமாக இருப்பதைவிட மிகப் பெரிய இரையை விழுங்கும்போது, மலைப்பாம்பின் உள் உறுப்புகள் சட்டென்று மாற்றம் அடைந்து, அளவில் பெரிதாகி, வேலை செய்ய ஆரம்பிக்கின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பேராசையால் பிரச்சினையில் சிக்கிக்கொண்ட மலைப்பாம்பு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x