Published : 03 Jan 2016 10:00 AM
Last Updated : 03 Jan 2016 10:00 AM

உலக மசாலா: பிரெட் அறை

அரிசோனாவில் உள்ள மரானா தங்கும் விடுதியில் பிரெட் மூலம் ஓர் அறை உருவாக்கப்பட்டிருக்கிறது. பல நூறு கிலோ மைதா, சர்க்கரை, மசாலா சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் சொன்னால் தவிர, பிரெட் மூலம் உருவாக்கப்பட்ட அறை என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. மங்கிய வெளிச்சமும் அலங்காரமும் கதைகளில் வரும் சூனியக்காரியின் அறை போல தோற்றத்தைத் தருகிறது. ஆனால் உங்களைச் சாப்பிடுவதற்கு ஒரு சூனியக்காரியும் இங்கே காத்திருக்கவில்லை என்கிறார்கள் விடுதியின் உரிமையாளர்கள்.

’’ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது விடுதியில் ஏதாவது வித்தியாசம் செய்வோம். இந்த ஆண்டு 3 புகழ்பெற்ற சமையல் கலைஞர்களை வைத்து பிரெட் வீட்டை உருவாக்கியிருக்கிறோம். 19 அடி உயரம் கொண்ட இந்த பிரெட் வீட்டை உருவாக்க நிஜமாகவே மிகவும் சிரமப்பட்டோம். ஜுன் மாதம் இந்த வீட்டை உருவாக்க ஆரம்பித்தோம். தினமும் பிரெட்டால் ஆன சிவப்பு செங்கற்களை உருவாக்கினோம். 100 கிலோ இஞ்சித் தூள், 100 கிலோ தேன் கூட சேர்த்திருக்கிறோம். 4 ஆயிரம் பிரெட் செங்கற்கள் தயாரானவுடன் 13 பேரை வைத்து, 4 நாட்களில் வீட்டை உருவாக்கிவிட்டோம்.

அலங்காரத்துக்காக ஆங்காங்கே மிட்டாய்களைப் பதித்துவிட்டோம். பொதுமக்களுக்காகத் திறந்துவிட்டோம். எல்லோரும் பாராட்டினார்கள். ஒரு பணக்காரர் தன்னுடைய பேரக் குழந்தைகளுக்காக இந்த பிரெட் வீட்டை விலைக்கு வாங்கிக்கொள்கிறேன் என்றார். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்துவிட்டது’’ என்கிறார் உரிமையாளர் மேங்கியோன்.

பசியோடு எவ்வளவோ பேர் இருக்க, உணவுப் பொருள்களை இப்படி வீணாக்கலாமா?

சிக்கல் விழுந்த நூலை விடுவிப்பது என்பது பொறுமை இழக்கும் விஷயம். கம்பளி நூலில் விழுந்துள்ள சிக்கல்களை அவிழ்ப்பதற் காகவே ஓர் அமைப்பு இயங்கி வருகிறது. இவர்கள் பொழுதுபோக்குக் காக மட்டுமின்றி, சிக்கல்களை விடுவித்து சம்பாதிக்கவும் செய்கிறார்கள். மெல்போர்னைச் சேர்ந்த டாப்னே பாஸ்நெட் கூறியபோது, ‘‘சிக்கல் விடுவிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். 5 வாரங்களில் 120 நூற்கண்டு சிக்கல்களை விடுவித்தி ருக்கிறேன். ஏதோ பெரிய காரியம் செய்துவிட்டது போல சந்தோஷமாக இருக்கிறது.

என்னைப் போல நிறையப் பேருக்குச் சிக்கல் விடுவிப்பதில் ஆர்வம் என்று தெரிய வந்தது. நாங்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் ‘நாட் அ பிராப்ளம்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். இதில் 2 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நூல் ஆலைகளில் இருந்து எங்களுக்கு கிலோ கணக்கில் சிக்கல் விழுந்த நூற்கண்டுகள் வந்து சேர்கின்றன. அவற்றைச் சரிசெய்து அனுப்பி வைப்பது எங்கள் வேலை. வருமானமும் வருகிறது. சிக்கலை விடுவிக்கும்போது மனதில் உள்ள அழுத்தமும் குறைகிறது. சிக்கல் அவிழ்ப்பதில் நாங்கள் நிபுணத்துவமே பெற்றுவிட்டோம். சாதாரணமானவர்கள் சிக்கல் நீக்குவதற்கும் எங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது’’ என்கிறார்.

நமக்கு ஒரு சார்ஜர் வயர் சிக்கலானால் கூட எடுக்கச் சிரமமா இருக்கே…



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x