Published : 23 Dec 2016 09:56 AM
Last Updated : 23 Dec 2016 09:56 AM

உலக மசாலா: பிரிவென்பது கொடுமை

பிரிட்டனைச் சேர்ந்த எட் க்யூசிக், இசைக் கலைஞர். அவரது மனைவி நினா கிராஃபிக் டிசைனர். மகன் பிறந்து சில மாதங்களில் கடுமையான வயிற்று வலி, தோள்பட்டை வலியால் பாதிக்கப்பட்டார். பிரசவம் தொடர்பான வலியாக இருக்கும் என்று பரிசோதனை செய்தபோது, முற்றிய நிலையில் குடல் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டது. 6 வாரங்கள் மட்டுமே நினா உயிருடன் இருப்பார் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். உயிரைக் காப்பாற்ற முடியாவிட்டாலும் நினாவின் ஆயுளைக் கொஞ்ச காலமாவது நீட்டிக்க முடிவெடுத்தார் க்யூசிக். “எப்படியாவது கிறிஸ்துமஸ் வரை உயிருடன் இருந்து, எங்கள் மகன் நினாவின் கிறிஸ்துமஸ் பரிசைத் திறந்து பார்ப்பதை, அவர் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். திடீரென்று அவரது உடல் நிலை மோசமானது. மருத்துவமனையில் சேர்த்து ஒரே வாரத்தில் நினாவின் உயிர் பிரிந்துவிட்டது. இன்னும் பத்து நாட்கள் இருந்திருந்தால் நினாவின் ஆசை நிறைவேறியிருக்கும். நினாவைப் போல அற்புதமான மனைவியையோ அன்பான தாயையோ பார்த்திருக்க முடியாது. நினாவுக்காக வேலைக்குச் செல்லாமல் நன்றாகக் கவனித்துக்கொண்டேன். ஆனாலும் அவர் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” என்று கடிதம் எழுதியிருக்கிறார் க்யூசிக்.

கொடுமை…

ஒட்டோனா மகி என்ற தெரபி ஜப்பானில் புகழ்பெற்று வருகிறது. வளையாத உடலை ஒரு துணிக்குள் வைத்து, கட்டி விடுகிறார்கள். அம்மாவின் கர்ப்பப் பையில் இருப்பது போல துணிக்குள் 15 - 20 நிமிடங்கள் இருக்க வேண்டும். இப்படித் தினமும் சிகிச்சை எடுத்துக்கொண்டால், முதுகு சரியான நிலைக்கு வந்துவிடும். அதிக நேரம் உழைக்கும் ஜப்பானியர்கள் தவறான நிலையில் உட்கார்ந்திருக்கின்றனர். இதனால் முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்ற பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கின்றனர். பல்வேறு சிகிச்சைகளுக்குச் சென்றாலும் முழுமையாகக் குணம் அடைய முடிவதில்லை. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க உருவாக்கப்பட்டதே ஒட்டோனா மகி தெரபி. “இந்த தெரபியை எடுத்த பிறகுதான் என்னுடைய முதுகுவலி சரியானது. ஆரம்பத்தில் முழுமையாக நம்பவில்லை. வேறு வழியின்றிதான் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். வெகுவிரைவிலேயே பலன் தெரிய ஆரம்பித்துவிட்டது. ஒரு துணிக்குள் மூட்டையாக இருப்பது வேடிக்கையாகத் தெரியலாம். ஆனால் சிறப்பான சிகிச்சை முறை. இப்போது என் முதுகு நேராக நிமிர்ந்துவிட்டது. இருக்கைகளில் சரியான விதத்தில் அமர முடிகிறது. முன்பு இருந்ததை விட உடல் மிகவும் வளைந்து கொடுக்கிறது. புத்துணர்ச்சியோடு வாழ்கிறேன்” என்கிறார் யாயோய் கட்டயாமா. ஜப்பானிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிறகு ஒட்டோனா மகியின் புகழ் பரவிவிட்டது.

எங்கிருந்துதான் யோசனை உதிக்குமோ!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x