Published : 20 Nov 2015 09:46 AM
Last Updated : 20 Nov 2015 09:46 AM

உலக மசாலா: பிரிந்து செல்ல ஆலோசனை!

கார்வனா என்பது பழைய கார்களை விற்பனை செய்யும் ஓர் இணையதளம். இந்த நிறுவனம் நாணயத்தைப் போட்டால், கார் வழங்கும் வெண்டிங் மெஷினை 2 ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டாவில் உருவாக்கியது. அந்த இயந்திரத்தில் மேலும் முன்னேற்றங்களைச் செய்து அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். உலகிலேயே நாணயத்தைப் போட்டு, காரை எடுத்துக்கொள்ளும் வெண்டிங் மெஷின் டென்னிஸியில் இப்போது இயங்கி வருகிறது. கண்ணாடியால் ஆன 5 மாடிக் கட்டிடம் ஒன்றில் 20 கார்கள் வரை அணிவகுத்து நிற்கின்றன. கார்வனா இணையதளத்தில் பார்வையிட்டு, நமக்குத் தேவையான காரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். காரைப் பற்றிய ஒவ்வொரு விஷயத்தையும் இணையமே எடுத்துச் சொல்லிவிடும். காரையும் சுற்றிக் காண்பிக்கும். காருக்கான கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டும். 7 நாட்களுக்குள் வெண்டிங் மெஷினுக்குச் செல்ல வேண்டும். அங்கே இருக்கும் ராட்சத நாணயத்தை மெஷினுக்குள் திணித்தால், நமக்கான கார் வெளியே வரும்.

‘‘நேரடியாக கார் வாங்குவதற்கும் வெண்டிங் மெஷின் மூலம் கார் வாங்குவதற்கும் உள்ள ஒரே வித்தியாசம் டெலிவரி செலவு இல்லை என்பதுதான். தானியங்கி இயந்திரம் என்பதால் மனிதர்களின் உழைப்பும் தேவை இல்லை, அவர்களுக்கான வருமானச் செலவும் இல்லை. ஒரு காருக்கு குறைந்தது 1 லட்சம் ரூபாயாவது வாடிக்கையாளர்களுக்குக் குறையும். வாடிக்கையாளர்களுக்கு வெண்டிங் மெஷின் மூலம் கார் பெறுவது நல்ல அனுபவமாக இருக்கும். கார்களை வாங்குவதும் எளிது. இன்னும் பல இடங்களில் கார் வெண்டிங் மெஷின்களை நிறுவும் எண்ணத்தில் இருக்கிறோம்’’ என்கிறார் கார்வனாவின் சி.இ.ஓ. எர்னி கார்சியா.

அட! பொம்மை கார்களைத் தந்துகொண்டிருந்த மெஷின்கள் நிஜ கார்களைத் தர ஆரம்பித்துவிட்டன!

அமெரிக்காவில் வசிக்கிறார்கள் ஐடென் டோனே, ஜெஸ்ஸி எமிலோ தம்பதியர். இருவருக்கும் நாய்கள் மீது அளவற்ற அன்பு. நாய்களின் கண்கள் சூரியனிலிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள், காற்றில் கலந்து வரும் மாசுகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. நாய்களின் கண்களைக் காப்பாற்றுவதற்காக ரெக்ஸ் கண்ணாடிகளை உருவாக்கியிருக்கிறார்கள். பாலிகார்பனேட் லென்ஸுகளும் மென்மையான பிரேம்களும் கொண்ட இந்தக் கண்ணாடி நாய்களுக்கு நன்றாகப் பொருந்திக்கொள்கிறது. கண்களுக்குக் காற்றும் எளிதில் சென்று வருமாறு அமைக்கப்பட்டிருக்கிறது.

‘‘நாய்களுக்கான கண்ணாடியாக இருந்தாலும் மிகவும் அக்கறையோடு வடிவமைத்திருக்கிறோம். பனி சூழ்ந்த மலைப்பிரதேசமோ, சுட்டெரிக்கும் வெயில் பிரதேசமோ இந்தக் கண்ணாடியை அணிந்துகொண்டால் நாய்களின் கண்களுக்குப் பிரச்சினையே இல்லை. கண்ணாடியுடன் நாய்கள் நீரிலும் நீந்த முடியும். சாதுவான நாய்கள் எதிர்ப்புக் காட்டாமல் கண்ணாடியை ஏற்றுகொண்டு விடுகின்றன. சற்று முரட்டு நாய்களுக்குத்தான் ஏற்றுக்கொள்ள சில காலம் ஆகும்’’ என்கிறார் ஜெஸ்ஸி எமிலோ. ஒரு ஜோடி கண்ணாடிகள் 5,300 ரூபாய்.

மனிதனுக்குத்தான் செல்லப் பிராணிகள் மீது எத்தனை அன்பு...

‘தி பிரேக்அப் ஷாப்’ என்ற நிறுவனம் ஒன்று இணையத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கைத் துணைவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்து செல்வது என்பது இருவருக்குமே மிகவும் வலி நிறைந்த விஷயம். ஒருவருக்கு ஒருவர் காயப்படுத்திக்கொள்ளாமல் பிரிந்து செல்லக்கூடிய வழிகளைச் சொல்வதோடு, அதைச் செய்தும் கொடுத்துவிடுகிறது இந்த பிரேக்அப் ஷாப். எப்படி, எவ்வளவு செலவு செய்து பிரிந்து செல்லும் முடிவை இன்னொருவருக்குத் தெரிவிப்பது என்பது அவரவர் விருப்பம். இமெயில் மூலம் தகவல் தெரிவிக்க 700 ரூபாய். கடிதம் என்றால் 1400 ரூபாய்.

தொலைபேசிக்கு 1900 ரூபாய். குக்கீஸ், வாழ்த்து அட்டை, சாக்லெட், டயரி, வீடியோகேம் போன்றவை அடங்கிய பரிசுப் பெட்டியுடன் 2 வைன் தம்ளர்களுடன் கூடிய நெஞ்சை உருக்கும் கடிதத்துடன் சொல்வதென்றால் 5,300 ரூபாய். இப்படிப் பிரிந்து செல்பவர்களுக்கு நிறுவனமே ஆளுக்கொரு பரிசுப் பெட்டியை வழங்குகிறது. இதில் கடந்த காலப் புகைப்படங்கள், பரிசுப் பொருட்கள், நகைகள், துணிகள் போன்றவற்றை அவரவருக்குத் திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். கனடாவைச் சேர்ந்த சகோதரர்கள் மெக்கென்ஸியும் இவானும் இந்த இணையதளத்தை நடத்தி வருகிறார்கள்.

‘‘எங்கள் மூலம் பிரிந்து செல்பவர்களுக்குக் குறைந்த அளவே வலியும் வருத்தமும் இருப்பது போலப் பார்த்துக்கொள்கிறோம். இருவருமே ஒருவர் மீது ஒருவர் வெறுப்பு வராமல், என்றென்றும் நட்புடன் இருக்க வைக்கும் எங்களின் சேவை’’ என்கிறார் மெக்கென்ஸி.

புதிய தொழில்களுக்கு உலகில் பஞ்சமே இல்லை…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x