Published : 26 Jul 2015 11:15 AM
Last Updated : 26 Jul 2015 11:15 AM

உலக மசாலா: பிராம்பிளுக்கு ஒரு பூச்செண்டு!

பிரிட்டனில் வசிக்கும் பிராம்பிள் நாயை எல்லோரும் உயர்வாக மதிக்கின்றனர். இதுவரை பிரிட்டனிலேயே அதிக தடவை ரத்த தானம் செய்த நாய் என்ற பெருமை பிராம்பிளுக்குக் கிடைத்திருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் 26 முறை ரத்தத்தைத் தானமாக வழங்கியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் 450 மில்லி ரத்தம் எடுக்கப்பட்டு, 4 நாய்களுக்குச் செலுத்தப்படுகிறது. இதுவரை 104 நாய்களின் உயிர்கள் பிராம்பிள் கொடுத்த ரத்தத்தால் காப்பாற்றப்பட்டுள்ளன. மரியா க்ரட்டாக் தன்னுடைய பிராம்பிள் குறித்து பெருமை கொள்கிறார். நாய்கள் பிறந்து ஓராண்டுக்குப் பிறகுதான் ரத்தம் வழங்க முடியும் என்பதால், பிராம்பிள் தன் தானத்தை அதற்குப் பிறகே ஆரம்பித்திருக்கிறது. ரத்தம் கொடுத்த பிறகு, பிராம்பிளுக்குச் சிறப்பு உணவுகள் வழங்கப்படுகின்றன. நாய் வளர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ரத்த தானம் அளிக்க விரும்புவதில்லை. மரியாவும் பிராம்பிளும் பாராட்டுக்குரியவர்கள் என்கிறார்கள் ரத்த வங்கி ஊழியர்கள். பிராம்பிளின் சேவையைக் கெளரவிக்கும் விதத்தில் அதன் கழுத்தில், ‘நான் உயிர்களைக் காப்பாற்றக்கூடியவன்’ என்று எழுதப்பட்ட சிவப்புத் துணியைக் கட்டி வைத்திருக்கிறது ரத்த வங்கி.

பிராம்பிளுக்கு ஒரு பூச்செண்டு!

லியாம் பென்னெட், ‘டாசேஜ்’ என்ற புதுமையான உணவுப் பொருளை உருவாக்கியிருக்கிறார். சாசேஜ்க்கு நடுவே ஜாம் வைத்து உருவாக்கப்பட்டதுதான் டாசேஜ். இதில் பாதி சாசேஜும் பாதி ஜாமும் வைக்கப்பட்டிருக்கும்.

‘‘எனக்கு உணவில் அதிக ஈடுபாடு உண்டு. எதையாவது புதுமையாகச் செய்ய முடியுமா என்று யோசிப்பேன். ஜாமை வைத்து டாசேஜை உருவாக்கினேன். பிரமாதமாக இருந்தது. பலரிடம் டாசேஜைச் செய்து, சுவைக்கக் கொடுத்தேன். எல்லோருமே அதன் சுவைக்கு மயங்கிப் போனார்கள். என்னுடைய டாசேஜை விற்பனைக்கு வைத்தேன். இன்று சாசேஜை விட டாசேஜைத்தான் குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள்’’ என்கிறார் லியாம். பன்றி, மாட்டு இறைச்சிகளில் தற்போது டாசேஜ் உருவாக்கப்படுகிறது. விரைவில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஏற்ற டாசேஜைச் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் லியாம். ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி சுவை ஜாம்களில் டாசேஜ்கள் தயாரிக்கப்படுகின்றன. ’’எனக்கு நிதி உதவி கிடைத்தால் பெரிய நிறுவனங்களோடு போட்டி போடுவேன். என்னிடம் இருக்கும் நிதியை வைத்து ஓரளவே விற்பனையைப் பெருக்க முடிகிறது’’ என்கிற லியாம், நிதிக்காகக் காத்திருக்கிறார்.

சாசேஜ் இடத்தை டாசேஜ் பிடிச்சிருச்சே!

ரத்தம் குடிக்கும் காட்டேரிகளைக் கதைகளிலும் திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். லூசியானாவைச் சேர்ந்த 28 வயது கட்ஸ்சென், தன் உடலில் இருந்து ரத்தத்தைத் தானே உறிஞ்சிக்கொள்கிறார். ’’சின்ன வயதிலிருந்தே ரத்தக் காட்டேரிகள் மீது எனக்கு ஆர்வம் இருந்தது. ரத்தக் காட்டேரிகள் பற்றி நிறையப் படித்திருக்கிறேன். ஒருகட்டத்தில் நானே ஒரு ரத்தக் காட்டேரியாக உணர்ந்தேன். என்னுடைய ரத்தத்தை நானே உறிஞ்ச ஆரம்பித்தேன்’’ என்கிறார் கட்ஸ்சென். இவரைப் போலவே ரத்தம் உறிஞ்சுவதில் ஆர்வம் உள்ளவர் 43 வயது மைக்கேல் வாச்மியல். இருவரும் ரத்தக் காட்டேரிகள் குறித்த ஒரு விழாவில் சந்தித்துக்கொண்டனர். உடனே இருவருக்கும் காதல் வந்துவிட்டது. கட்ஸ்செனின் உடலில் பிளேடால் கீறி, ரத்தத்தை ஒரு கோப்பையில் பிடித்துக் குடிக்கிறார் மைக்கேல். சில நேரங்களில் நேரடியாக உடலிலிருந்து ரத்தத்தை உறிஞ்சிக்கொள்கிறார். ஒருமுறை ரத்தம் குடித்தால் பல மாதங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது என்கிறார். ’’எனக்கும் மைக்கேலுக்குமான அன்பும் புரிதலும் வேறு யாராலும் புரிந்துகொள்ள முடியாது. பாதுகாப்பான முறையில்தான் என் உடலில் இருந்து ரத்தத்தை எடுக்கிறார். அவருக்கு ரத்தம் கொடுப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. உலகிலேயே மிகவும் புரிந்துகொண்ட ஜோடிகள் நாங்களாகத்தான் இருப்போம்’’ என்கிறார் கட்ஸ்சென்.

ஐயோ… நீங்க ரெண்டு பேரும் நல்ல மருத்துவரைப் பாருங்க முதலில்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x