Published : 17 Dec 2016 09:54 AM
Last Updated : 17 Dec 2016 09:54 AM

உலக மசாலா: பிரமிக்க வைக்கிறார் வுல்ஃப் கிங்!

சீனாவின் ஜின்ஜியாங் பகுதியைச் சேர்ந்தவர் 71 வயது யாங் சங்ஷெங். கடந்த 9 ஆண்டுகளாக 150 ஓநாய்களை வளர்த்து வருகிறார். இவரை ‘வுல்ஃப் கிங்’ என்று மக்கள் அழைக்கிறார்கள். ‘‘2007-ம் ஆண்டு நண்பரின் வீட்டில் பெண் ஓநாய் ஒன்று இறுக்கமான சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. கூண்டைத் திறந்து சங்கிலியின் இறுக்கத்தைத் தளர்த்தச் சொன்னேன். நான் சொன்னது முட்டாள்தனமாக இருந்தாலும் ஓநாயின் கஷ்டத்தை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பயந்துகொண்டே பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் ஓநாய் அமைதியாக இருந்தது. கொஞ்சம் தைரியம் வந்து சங்கிலியை அவிழ்த்துவிட்டேன். ஒரு நாயைப் போல மிகவும் சாதுவாக என் கால்களுக்கு அருகே வந்து அமர்ந்துகொண்டது. அந்த ஓநாயையும் அதன் குட்டிகளையும் என் நண்பர் அன்பளிப்பாக எனக்குக் கொடுத்துவிட்டார். வீட்டில் வைத்து வளர்க்க ஆரம்பித்தேன். அப்போது இன்னொரு நண்பர் 9 ஓநாய்களை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். என் குடும்பம் புதிய ஓநாய்களை வளர்க்க அனுமதிக்கவில்லை.

அவர்களைச் சம்மதிக்க வைத்து, ஓநாய் வளர்ப்பதற்கான உரிமம் பெற்றேன். அடுத்த ஆண்டு 20 ஹெக்டேர் நிலத்தை வாங்கி, ஓநாய்களைப் பராமரிக்க ஆரம்பித்தேன். இன்று 8 வகைகளைச் சேர்ந்த 150 ஓநாய் கள் என்னிடம் உள்ளன. இந்த 9 ஆண்டுகளில் ஒரே ஒருமுறைதான் ஒரு முரட்டு ஓநாய் என்னைக் கடித்திருக்கிறது. அதைப் பார்த்தவுடன் சில ஓநாய்கள் என்னைப் பாதுகாப்பாகச் சூழ்ந்துகொண்டன. இன்னும் சில ஓநாய்கள் கடித்த ஓநாயைத் தாக்கின. இப்படி ஒரு அன்பை ஓநாய்களிடம் இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. கடந்த 8 ஆண்டுகளில் இந்த ஓநாய் பள்ளத்தாக்கு சரணாலயத்தை உருவாக்குவதற்காக 169 கோடி ரூபாயைச் செலவு செய்திருக்கிறேன். ஓநாய்கள் மீது ஆர்வம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் வரலாம். ஓநாய்களுடன் உரையாடலாம். ஒரு நாளைக்கு உணவுக்கு மட்டும் 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

மருந்துகள், பராமரிப்பாளர்கள் சம்பளம் போன்றவற்றை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. எங்கள் தொழில்களில் இருந்தே இந்தச் சரணாலயத்துக்கு வேண்டிய நிதியை எடுத்துக்கொள்கிறேன். எனக்குத் தொழில் முக்கியமில்லை, சரணாலயம்தான் முக்கியம். 1000 ஓநாய்களை இனப்பெருக்கம் செய்த பிறகு, காட்டுக்குள் விட்டுவிட இருக்கிறேன். இயற்கைச் சூழலில் தனக்கு வேண்டியவற்றைத் தானே உழைத்துச் சாப்பிடும் வாய்ப்பு இந்த ஓநாய்களுக்குக் கிடைக்க வேண்டும்’’ என்கிறார் யாங் சங்ஷெங்.

பிரமிக்க வைக்கிறார் வுல்ஃப் கிங்!

ரஷ்யாவில் மிகப் பெரிய பேரங்காடியில் ஒரு தேவாலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே பேரங்காடிக்குள் இருக்கும் தேவாலயம் இதுதான். ‘‘இந்தப் பகுதியில் தேவாலயமே இல்லை. தேவாலயம் செல்ல விரும்பும் மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. அருகில் ஒரு தேவாலயம் இருந்தால் பலருக்கும் உதவியாக இருக்கும் என்று நினைத்தோம். தேவாலயத்துக்குத் தனியாகவும் பொருட்களை வாங்குவதற்குத் தனியாகவும் மக்கள் வேறு வேறு இடங்களுக்குச் செல்வதைத் தடுக்கவும் நேரத்தை மிச்சப்படுத்தவும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினோம். எல்லோரும் மிகவும் பாராட்டுகிறார்கள்” என்கிறார் பேரங்காடியின் மேலாளர் விளாடிமிர் ஸ்க்வோர்ட்சோவ்.

ஷாப்பிங் சென்டருக்குள் தேவாலயம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x