Published : 07 Jul 2015 10:56 AM
Last Updated : 07 Jul 2015 10:56 AM

உலக மசாலா: பியர் பாட்டில் கட்டிடம்

சீனாவில் கட்டடக் கலைஞராக இருக்கிறார் லி ரோங்ஜுன். 8,500 பியர் பாட்டில்களை வைத்து, ஓர் அலுவலகத்தை உருவாக்கியிருக்கிறார். 300 சதுர அடி கொண்ட இந்தக் கட்டடத்தை லியும் அவரது தந்தையும் சேர்ந்து 4 மாதங்களில் கட்டி முடித்திருக்கின்றனர். பாட்டில்களுக்கு இடையில் கற்களையும் சிமென்ட்டையும் போட்டு நிரப்பியிருக்கின்றனர். இரவில் விளக்கு வெளிச்சத்தால் இந்தக் கட்டடம் ஜொலிக்கிறது. பாட்டில் கட்டடத்தால் தன்னுடைய தொழில் அமோகமாக இருப்பதாகச் சொல்கிறார் லி.

கலக்குங்க லி!

கலிஃபோர்னியாவின் பாலைவனத்துக்குள் இருக்கிறது டீப் ஸ்ப்ரிங்ஸ் கல்லூரி. ஆண்டுக்கு 12 மாணவர்களை மட்டுமே இங்கே சேர்த்துக்கொள்கிறார்கள். ஒவ்வொரு விஷயத்தையும் மாணவர்களே செய்துகொள்ள வேண்டும். வாரத்துக்கு 20 மணி நேரம் ஆடு, மாடு, குதிரை வளர்ப்பு, தோட்ட வேலை போன்றவற்றில் ஈடுபட வேண்டும். 12 சீனியர் மாணவர்கள், 12 ஜுனியர் மாணவர்கள் என மொத்தம் 24 மாணவர்கள் இங்கே எப்பொழுதும் இருப்பார்கள். மாணவர்களுக்குள்ளேயே கமிட்டி அமைத்து, யாருக்கு என்ன வேலை என்பதை முடிவு செய்துகொள்கிறார்கள்.

தங்களுக்கு யார் பாடம் எடுக்க வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள். இந்தக் கல்லூரியின் நிறுவனர் எல்.எல்.நன், `உழைப்பவர்கள் படிக்க வேண்டும், படிப்பவர்கள் உழைக்க வேண்டும்’ என்ற எண்ணத்தில் இதை உருவாக்கியிருக்கிறார். குறிப்பிட்ட பாடத்தை மட்டும் படிக்காமல், வாழ்க்கைக்குத் தேவையான பலவற்றையும் இங்கே கற்றுக்கொள்ள முடியும். இங்கே சேர்ந்த பிறகு எக்காரணம் கொண்டும் வெளியில் செல்ல அனுமதி கிடையாது. பாடம் தொடர்பாகவும் மருத்துவத்துக்கும் வெளியில் செல்லலாம். போதைப் பொருட்கள், மது போன்றவற்றுக்கு அனுமதி இல்லை.

மாணவர்கள் படிப்பதற்கும் தங்குவதற்கும் நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் உள்ளன. இறைச்சி வெட்டும் பணி, தோட்டப் பணி, நூலகர் பணி என்று எத்தனையோ வேலைகள் இருந்தாலும் கால்நடைகளை மேய்ப்பதை மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர். தாங்கள் வளர்க்கும் கால்நடைகள், கோழிகள், வாத்துகள் போன்றவற்றிலிருந்து இறைச்சி, முட்டை, பால் போன்றவற்றை உணவுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தோட்டத்தில் அவர்களே விளைவித்த காய்களையும் கீரைகளையும் பழங்களையும் சாப்பிட்டுக்கொள்கிறார்கள். ஒரு மாணவருக்கு சுமார் 31 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது இந்தக் கல்லூரி.

ஆஹா… வித்தியாசமான கல்லூரி…

பிரிட்டனில் ஒரு குழந்தையின் பிறந்தநாளுக்காக கேக் ஆர்டர் செய்திருந்தனர். டிஸ்னி திரைப்படத்தில் வரும் எல்சா இளவரசி போல கேக் கேட்டிருந்தனர். வீட்டுக்கு கேக் வந்தது. ஆர்வத்துடன் பிரித்தவர்களுக்கு அதிர்ச்சி. எல்சா இளவரசியின் தோற்றமே மாறிப் போயிருந்தது.

இளவரசி வயதான ராணியாகத் தெரிந்தார். ஆடையின் நிறம் மட்டுமே ஒத்திருந்தது. மற்றபடி எல்சாவுக்கும் கேக்கில் இருந்த உருவத்துக்கும் சம்பந்தமே இல்லை. வரையத் தெரியாதவர்கள் முதல் முறை வரைந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது. கேக்கின் வடிவத்தை விட கேக்கின் சுவை நன்றாக இருந்ததால், பிறந்தநாளைக் கொண்டாடி விட்டனர்.

ஐயோ யார் செய்த வேலையோ… பாவம் அந்தக் குழந்தை…

பாலி தீவில் தங்கும் விடுதி நீச்சல் குளம் ஒன்றில் 4 டால்பின்கள் வளர்க்கப்படுகின்றன. மிகச் சிறிய நீச்சல் குளத்தில் 4 டால்பின்கள் வளர்வது கடினம். இந்த விடுதியில் தங்குபவர்கள் டால்பின்களுடன் பொழுது போக்குவதற்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாள் முழுவதும் டால்பின்கள் மக்களுடன் விளையாடுவதும் சாகசம் செய்து காட்டுவதுமாக இருக்கின்றன. அதிக மக்கள் பயன்படுத்தும் நீச்சல் குளத்தில் அதிக அளவில் க்ளோரின் போடப்படுகிறது. இந்த க்ளோரினால் நான்கு டால்பின்களும் பெருமளவில் பார்வையிழந்துவிட்டன.

மனிதர்களுக்கு நல்ல அனுபவம், ஆனால் டால்பின்களுக்கு…?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x