Published : 06 Mar 2016 12:29 PM
Last Updated : 06 Mar 2016 12:29 PM

உலக மசாலா: பிச்சைக்காரரின் ஆடி கார்

இங்கிலாந்தைச் சேர்ந்த 35 வயது மாத்யு பிரின்டன், பல ஆண்டுகளாகப் பிச்சை எடுத்து வருகிறார். அந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு அவர் நன்கு பரிச்சயமானவர். சமீபத்தில் அவரது பேஸ்புக்கில் விலை உயர்ந்த ஆடி கார் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டது. அதைப் பார்த்த மக்கள் கொதித்துப் போனார்கள். தினமும் அவருக்கு நேரிடையாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்தல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ‘‘பாவம் என்று இரக்கப்பட்டு எத்தனையோ நாட்கள் பணம் கொடுத்திருக்கிறேன். என்னிடம் பிச்சை வாங்கிய ஒருவர் ஆடி கார் வைத்திருக்கிறார். நான் சாதாரண கார் வைத்திருக்கிறேன். அடுத்தவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் இவரைப் போன்றவர்களை எல்லாம் சும்மா விடக்கூடாது’’ என்கிறார் சார்லஸ்.

மாத்யு வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும் ஏகப்பட்ட புகார்கள் குவிந்துள்ளன. மாத்யு மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். ‘‘ஒரு காலத்தில் உறவினர்கள் கொடுத்த பணம் என்னிடம் இருந்தது. அதைச் சரியாகக் கையாளாமல், அனைத்தையும் தொலைத்துவிட்டேன். பல ஆண்டுகளாகப் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறேன். சமீபத்தில் என் பாட்டி இந்த ஆடி காரை எனக்குக் கொடுத்தார். அதை அருகில் நிறுத்தியிருந்தேன். சிலர் நான் பிச்சை எடுத்து இந்த காரை வாங்கியதாகத் திட்டுகிறார்கள். சிலர் நான் காரைத் திருடி விட்டதாகச் சொல்கிறார்கள்.

இன்னும் சிலர் என் உயிருக்கே ஆபத்து என்று மிரட்டுகிறார்கள். நான் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு பேஸ்புக் அக்கவுண்ட் எதுவும் இல்லை. யாரோ இப்படி என் பெயரில் விளையாடியிருக்கிறார்கள். நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன்’’ என்கிறார் மாத்யு. யாரோ கோபத்தில் ஆடி கார் மீது கல் எறிந்து, கண்ணாடியை உடைத்துவிட்டனர்.

ஐயோ ரொம்பப் பாவமா இருக்கே...



5 வயது மார்க் கேன்னனுக்கு அல்ஃபி என்ற நாய்தான் உற்ற தோழன். மார்க் பிறந்ததில் இருந்தே அல்ஃபி அவனுடனே இருந்து வருகிறது. அல்ஃபி எப்போதும் மார்க்கின் வலது பக்கம்தான் அமரும். வலது பக்கம்தான் நடந்து செல்லும். இடது பக்கத்தில் உட்கார வைத்தாலும் உட்காராது. அல்ஃபி ஏன் இப்படிச் செய்கிறது என்று குடும்பத்தினர் குழம்பினர்.

மார்க்கை மருத்துவரிடம் அழைத்துச் சென்று, நாய் வலது புறம் அமரும் விஷயத்தையும் கூறினர். மருத்துவர் கண்களைப் பரிசோதித்தபோது, இடது கண்ணில் பார்வை சரியாக இல்லை என்பதைக் கண்டுபிடித்தார். இன்னும் தாமதமாக வந்திருந்தால் முழுவதுமாக பார்க்கும் திறனை கண் இழந்திருக்கும் என்றார். மனிதர்களைவிட ஒரு நாய் குழந்தையின் பிரச்சினையைக் கண்டுபிடித்திருப்பதில் எல்லோருக்கும் ஆச்சரியம். நாய் மூலம்தான் இடது கண் இன்னும் மோசமான பாதிப்பில் இருந்து தப்பியிருக்கிறது என்று நன்றியுடன் குறிப்பிடுகிறார்கள் மார்க் குடும்பத்தினர். மார்க் இடது கண்ணுக்குச் சிகிச்சை எடுத்து வருகிறான்.

ஆஹா! அல்ஃபிக்குத்தான் எவ்வளவு அறிவு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x